மறுநாள் காலையில் பாலா வக்கீலுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்று தாத்தா மற்றும் கேசவனை பெயில் எடுத்தான். இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தான். அவர்களை பார்த்து வீட்டில் இருந்தவர்களும் சந்தோஷப்பட்டனர்.
தீப்தியும் பாலாவிற்கு பல நன்றிகள் சொன்னாள், உணர்ச்சி வசத்தில் பாலாவை அணைக்கவும் செய்தாள். அதைக் கண்ட தாத்தாவும் கேசவனும் சிரித்தப்படி ஹரியை பற்றி பேசலானார்கள்.
”எப்படியோ தீப்தி தன்னோட முடிவை சொல்லாமயே எல்லோருக்கும் காட்டிட்டா இது போதுமே” என கேசவன் சொல்ல
“ம் போதும்தான் ஹரி லஷ்மி என்ன ஆனாங்கன்னுதான் தெரியல”
“இன்னும் எதுக்கு லஷ்மின்னு சொல்லிக்கிட்டு அவள் பேரு அவந்திகா தானே”
”சரி சரி மறந்துட்டேன், பழக்க தோஷத்தில பேசிட்டேன் சரி அவங்க கிட்டயிருந்து எந்த தகவலும் வரலையே என்ன ஆனாங்க, எங்க போனாங்க அதை நாம எப்படி தெரிஞ்சிக்கறது” அதற்கு கேசவன்
“அது பெரிய விசயம்தான். இங்க அந்த சிவசங்கரன் வேற அவந்திகாவை தேடி அலையறான் இந்த ஊர்ல ஹரியிருந்தா நிச்சயம் மாட்டிக்குவான், எனக்கென்னவோ அவன் பத்திரமான இடத்திலதான் இருப்பான்னு நினைக்கிறேன்” என சொல்லவும் தாத்தாவும் கடவுளிடம் ஹரியை நினைத்து வேண்டிக் கொண்டார்.
ஹரியோ அவந்திகாவை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலையில் டிரையின் ஏறியவன் நேராக கோயம்புத்தூருக்கு பயணப்பட்டான். போகும் வழியெல்லாம் அவளிடம் கொஞ்சிக் கொண்டும் முத்தம் கொடுத்துக் கொண்டும் சென்றான்
”யாராவது பார்க்கப்போறாங்க”
“இங்க யாருமே இல்லை பார்த்துத்தானே இங்க வந்தேன்”
“அப்பாக்கு தெரிஞ்சா திட்டுவாரு”
“உங்கப்பாதான் என் கிட்ட உன்னை ஒப்படைச்சாரு, ஆமா உன் நிஜமான அப்பா என்ன மாதிரியான டைப்பு”
“ஏன் கேட்கறீங்க”
“இல்லை கேசவன் மாமா நான் பார்த்தவரைக்கும் ஓரளவுக்கு அவரை புரிஞ்சிக்கிட்டேன். எப்படி பேசினா அவர் எப்படி பதில் சொல்வாரு வரைக்கும் தெரிஞ்சிக்கிட்டேன். ஊட்டி மாமாவை பத்தி எனக்கு சரியா தெரியலை அதான்”
“அன்னிக்கு புடவை விக்க போனீங்களே அப்ப அவர்கூட பேசலையா”
“பேசினேன் ஆனா பொதுவா பேசினேன்”