கணக்குப்பிள்ளையோ கொம்பன் சாப்பிடுவதைக்கண்டு ஏக்கமாக பார்த்தபடி வீட்டு வாசல்படியில் நின்றிருந்தான். அவனை எதேச்சையாக கண்ட காவேரியோ
”உனக்கு வேற தனியா வெத்தலை பாக்கு வைச்சி அழைக்கனுமா வந்து சேரு” என அதட்ட உடனே கணக்குப்பிள்ளை ஓடிவந்து கொம்பன் பக்கத்தில் அமர்ந்துக் கொள்ள அவனுக்கும் அவளே பரிமாறிவிட அவனும் கடகடவென சாப்பிட்டான்.
இருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை அவள் அமைதியாக இருந்தாள். அவர்கள் சாப்பிட்டு முடித்து வரவும்
”தோப்புக்கான வரவு செலவு கணக்கு பார்க்கனும்” என்றாள் கொம்பன் உடனே கணக்குப்பிள்ளையை பார்த்து
”கேட்கறாங்கள்ல கணக்கு பார்த்து சொல்லிடு”
”சரிப்பா அப்படியே செய்றேன்” என சொல்ல காவேரியோ கொம்பனிடம்
”மாந்தோப்புக்கு தண்ணிவிட்டது போதும் தென்னந்தோப்பு காஞ்சி கிடக்கு 4 நாளா தண்ணி விடலை போய் அதுக்கு தண்ணி பாய்ச்சிட்டு சூரியன் மறையறதுக்குள்ள வீடு வந்து சேரு, வேற எங்கயாவது நீ போனன்னு எனக்கு தெரிஞ்சது உன்னை உன் அம்மா வீட்டுக்கு விரட்டிடுவேன் ஜாக்கிரதை” என மிரட்ட அவனோ சரிசரியென தலையாட்டிவிட்டு தென்னந்தோப்புக்குச் சென்றான்
கணக்குபிள்ளையும் வரவு செலவு கணக்குகளை பார்க்க காவேரியோ அவனிடம் அமைதியாக பேச்சுக் கொடுத்தாள்
”ஆமா உன் பேருதான் என்ன எல்லாரும் உன்னை கணக்குபிள்ளைன்னு கூப்பிடறாங்க உனக்குன்னு பேரே இல்லையா”
”ஏன் இல்லாம நல்ல சாமி பேர்தான் எனக்கு வைச்சாங்க”