தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 08 - சசிரேகா
தருணுக்கு அந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை மறுநாள் காலையில் ஹரிணிடம்
”அப்பா அம்மா ஞாபகமாகவே இருக்கு, அவங்களோட கொஞ்ச நாள் தங்கிட்டுவரேன்” என அனுமதி கேட்க அவளோ
”நானும் வரனுமா“
”வேணாம் நான் மட்டும் போய் வரேன்”
”எப்ப வருவீங்க“
”ஆமா வந்து மட்டும் இங்க என்ன செய்யப் போறேன்”
”அலுத்துக்காதீங்க தருண்“
”அலுத்துக்கலை என்னவோ அம்மா ஞாபகம் வந்துடுச்சி போய் வரட்டுமா“
”தாராளமா” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட தருணும் தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றான், பல நாள் கழித்து வந்த மகனை மகிழ்வுடன் வரவேற்றார்கள், அவர்களின் பாசத்தைக் கண்டு மனம் மகிழ்ந்தான். அவனுக்காக விருந்து உபச்சாரம் வேறு நடந்தது நன்றாக சாப்பிட்டு நிம்மதியாக உறங்கினான்.
அவனிடம் பேசுவதற்காகவே அவனது தாய் தந்தையர் காத்திருந்தார்கள். அவனும் அவர்களிடம் பேச வந்தான்
”அப்புறம் அம்மா எப்படியிருக்க, நல்லாயிருக்கியா பொழுது ஓடுதா“
”எங்க பொழப்பு இருக்கட்டும், உன் வாழ்க்கை என்னாச்சி நீ சந்தோஷமா இருக்கியா“
”எங்கம்மா” என்றான் சலிப்பாக