தாத்தாவும் டீயை குடித்துவிட்டு தன் அறைக்கு சென்று ஓய்வெடுக்காமல் எதையோ யோசித்துக்கொண்டிருந்தார். அதைக்கவனித்த பாட்டி அவரிடம் வந்து
”என்னங்க என்ன யோசிக்கிறீங்க” என பவ்யமாக பேச அவரோ அவரை ஒரு தினுசாக பார்த்தார்
”ஏன் இப்படி பார்க்கறீங்க நான்தான் உங்க அருந்ததி”
“அதான் சந்தேகமா இருக்கு என் அருந்ததியாயிருந்தா இப்படியெல்லாம் பேசமாட்டாளே”
“அப்ப நான் யாராக்கும்” என அவரின் பக்கத்தில் அமர பேயை பார்த்து பதறுவதைப் போல பதறி எழுந்தார் தாத்தா.
”என்னங்க என்னாச்சி ஏன் இப்படி பயப்படறீங்க”
“வேணாம்மா நீ ஏன் இங்க வந்திருக்கன்னு எனக்கு நல்லாவே புரியும் இதப்பாரு போட்டியில யார் ஜெயிக்கறாங்களோ அவங்களுக்குதான் ரிஷியை கல்யாணம் செஞ்சி வைப்பேன் இந்த விசயத்தில நான் பாகுபாடு பார்க்கப்போறதில்லை புரியுதா” என சொல்லவும் அருந்ததி பழைய அருந்ததியாக மாறி அவரை பார்த்து முறைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
தாத்தாவும் ஒரு நிமிடம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் நாளைக்கு என்ன போட்டி வைக்கலாம் என யோசிக்கலானார். மணி 9.30 ஆனதும் அனைவரும் சாப்பிட அமர்ந்தார்கள்.
இம்முறை சோனா சான்ட்விச் செய்திருந்தாள். அதில் காய்கறிகள் அனைத்தும் அடுக்கி வைத்திருந்தாள். முதலில் தாத்தாவிற்கு வைத்தவள் அவருக்கு அடுத்து அனைவருக்கும் ஒரு சான்ட்விச் வைத்தாள். அது பெரியதாக இருந்தது. அதை அவர் பார்த்தார் கீழே ஒரு பன் மேலே ஒரு வெண்ணைய் தடவிய பன்னிற்கு நடுவில் சீஸ் பன்னீர் பலவித காய்கறிகள் என அடுக்கடுக்காக வித்தியாசமாக இருக்க அதை எடுத்து பார்த்தார்.