(Reading time: 50 - 99 minutes)

 

கிராமத்துக்கே உரிய மண்வாசனை, பச்சை பசேல் புல்வெளி, வயல், சலசலத்து ஓடும் நீர், சிறகடித்து சுதந்திரமாய் வானில் பறக்கும் பறவைகள் எழுப்பும் ஷ்ருங்கார இசை, அவர்கள் வரும் வழியில் விசாரித்த அன்பான மனிதர்கள், என எல்லாம் காவ்யா-தினேஷிற்கு மிகவும் பிடித்தது… அந்த ஊரில் கால் பதித்ததும் ஏதோ தாயின் அரவணைப்பிற்குள் வந்தது போல் உணர்ந்தான் தினேஷ்…

“வாப்பா தினேஷ்… வாம்மா மருமகளே… அழகான குத்து விளக்காட்டம் இருக்குற, இப்ப தான் தெரியுது என் மகன் உன்னை காதலிச்சு கல்யாணம் செஞ்சுகிட்ட ரகசியம்…. அட என்ன தள்ளி நிக்குறவ, சேர்ந்து நில்லும்மா என் மகன் கூட… .” என்றபடி சொல்லிய செந்தாமரை அவர்களுக்கு ஆரத்தி எடுத்தார்….

“அடடா… அம்மா… என்னை உங்க கண்ணுக்கு தெரியவே தெரியாதா?... அதென்ன மகனுக்கும் மருமகளுக்கும் மட்டும் ஆர்த்தி?...” என்றபடி தாயிடம் வம்பிழுத்தாள் சாகரி….

“உனக்கென்னடி ராசாத்தி…. இன்னைக்கு தான் அண்ணனும் அண்ணியும் முதல் முறையா வீட்டுக்கு வந்திருக்காங்க… அதான் அவங்களை கவனிக்கிறேன்…. என்ன இருந்தாலும் உன் அண்ணனுக்கு தான் முதலில் எல்லாம்… உனக்கு அடுத்தது தான்…” என்றார் பாசமுள்ள அந்த தாய்…

“அம்மா இதெல்லாம் ரொம்ப ஓவர்… சொல்லிட்டேன்… “ என்றபடி முறைத்தாள் சாகரி…

“அட இவ எவடி… நேரம் காலம் தெரியாம விளையாடிட்டு இருக்குறவ….” என்றவரின் பார்வை… மயூரியின் மீது விழ, “வா தாயி… சின்ன வயசுல பார்த்தது… எம்பூட்டு அழகா இருக்க லக்ஷ்மி நீ… என் கண்ணே பட்டுடும் போல இருக்கு… சந்தனத்துல செஞ்சு வைச்ச தங்க சிலையாட்டம் இருக்குறியே… உன்னை எந்த மகராசன் வந்து சிறை எடுத்துட்டு போக போறானோ….” என்றபடி அவளுக்கு திருஷ்டி கழித்தார்…. பின், “என்ன தாயி அப்படி பார்க்குறவ, ராசு அண்ணனும், செல்வி மதினியும் வந்துட்டே இருக்குறாங்க… நீ விசனப்படாம உள்ளே போ தாயி… சாகரி உள்ளார கூட்டிட்டு போ லக்ஷ்மியை…” என்ற செந்தாமரையை மயூரிக்கு மிகவும் பிடித்தது…

“பாட்டி நாங்களும் இங்கே தான் இருக்கிறோம்….” என்றபடி அவரின் புடவை முந்தானையைப் பிடித்து இழுத்தனர் நந்துவும் சித்துவும்….

“அடி ஆத்தி…. என் வீட்டு தங்கங்கள் இங்கே தான் இருக்குதா?... நான் ஒரு மறதி கெட்டவ,…”என்று தன்னை அடித்துக்கொண்டவரை,

“ஷ்… பாட்டி… அப்படி எல்லாம் அடிக்க கூடாது…. வலிக்கும்…” என்றனர் இருவரும்….

“யாருக்கு கண்ணுகளா?...”

“எங்க பாட்டிக்கு தான்… இல்ல நந்து?...” என்றான் சித்து…

“ஆமா அண்ணா….” என்றாள் நந்துவும்….

“அட என் குட்டி செல்வங்களா?... வாங்க வாங்க பாட்டிகிட்ட….” என்று கைவிரித்ததும் அவரின் கைகளுக்குள் ஒட்டிக்கொண்டனர் இருவரும்….

அதைப் பார்த்துக்கொண்டிருந்த தினேஷின் கண்களில் நீர் அரும்ப, காவ்யா அவனது கையைப் ஆதரவாக பிடித்து அழுத்தினாள்…  

“தினேஷ்…. உன் அம்மா இப்படிதான்… எப்பவும்… இதுக்கு போயா கண் கலங்குவ?... வாப்பா உள்ளே போகலாம்….” என்று அவனை தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டார் ஜனகன்….

“மருமகளே… வலது கால் எடுத்து வைச்சு வாம்மா…” என்றபடி மருமகளையும் மகனையும் பேரன், பேத்தியையும் அழைத்துச் சென்றார் தாமரை….

“என்னங்க… நாளைக்கு காலையில தீபாவளி…. புள்ளைங்களுக்கு துணிமணி எல்லாம் எடுக்க வேண்டாமா?... சீக்கிரம் டவுனுக்கு போயி எடுத்துட்டு வாங்க….” என்றார் செந்தாமரை கணவரிடம்….

“அதுக்கெல்லாம் அவசியமே இல்லை அத்தை… உங்க மகனே எல்லாருக்கும் துணி எடுத்துட்டார்… அதனால மாமாவை அலைய வைக்க வேண்டாம்….” என்றாள் காவ்யா…

“அட… நீ ஏன் கண்ணு, எடுத்த?... அப்பா எடுத்து தர மாட்டாரா என்ன?...”

“ஏன்ம்மா நான் எடுத்து கொடுத்தா கட்டிக்க மாட்டீங்களா?...”

“என்னப்பா இப்படி சொல்லிட்ட… என் புள்ளை எடுத்து கொடுக்குற சீலையை கட்டிக்க நானில்லை கொடுத்து வைச்சிருக்கணும்….” என்றார் முகத்தில் பெருமை மின்ன…

“அப்புறம் என்னம்மா… விடுங்க… நீங்க சமையலைப் பாருங்க… நானும் அப்பாவும் வயலுக்கும், தோட்டத்துக்கும் போயிட்டு வரோம்….”

“வந்த உடனே நீ போகணுமா ராசா… அதை எல்லாம் பார்க்க தான் உன் அப்பா இருக்காருல்ல…’

‘இருக்கட்டும் அம்மா… நானும் அப்பாவுக்கு கூட மாட ஒத்தாசை செய்யுறேனே… ப்ளீஸ்மா…” என்றதும்

செந்தாமரையின் உள்ளம் உருகியே விட்டது…

“அதான் புள்ளையே சொல்லிட்டான்ல, இன்னும் என்ன நான் பேசுறத பார்த்துட்டு இருக்குறீங்க?... போங்க… புள்ளைக்கு சுத்திக்காட்டுங்க…” என்று அதட்டினார் மனைவி…

‘மகன் நீ வந்ததும் உன் அம்மாக்கு தலை கால் புரியலைப்பா தினேஷ்… பார்த்தியா அவ பண்ணுற அலம்பலை….”

“ஹ்ம்ம்… அம்மாவை குறை சொல்லலைன்னா உங்களுக்கு தூக்கம் வராதே….” என்றபடி தந்தையை பார்த்தான் தினேஷ்….

“அப்படி சொல்லுய்யா ராசா… உன் அப்பாருக்கு…. நீயே….”

‘அடப்பாவமே…. மகனும் அம்மாவும் கூட்டணி போட்டாச்சா…. அப்போ என் கதி?...” என்று பாவமாய் பார்த்தவரை,

“நீங்க ஏன் மாமா கவலைப் படுறீங்க?... உங்க மருமக நான் உங்க கூட்டணி…” என்றாள் காவ்யா…

“அட்ராசக்கை…. சித்து நந்து… இங்கே நாம பத்தவைக்காமலே பத்திக்கிச்சே…. சூப்பர்… இது தான் வேணும் எனக்கு….” என்றபடி வந்தாள் சாகரி மயூரியுடன்…

டியே… என்னடி…”

“என்னம்மா?... உன் மருமக குத்துவிளக்குன்னு சொன்னியே… பார்த்தல்ல, சரியான அணுகுண்டு உன் மருமக…. பாவம் என் அண்ணனை என்ன செஞ்சு இப்படி பண்ணிட்டாங்களோ தெரியலை….” என்றாள் வருத்தம் தோய்ந்த குரலில்…

“ஏண்டி… என் முன்னாடியே என் மருமகளை இப்படி பேசுறியே… அப்போ ஊருல எப்படி எல்லாம் பேசியிருப்ப?... உன்னை இருடி… இந்தா வாரேன்…” என்றபடி உள்ளே சென்றவர், கையில் கரண்டியுடன் வர,

“நீங்க ஏன்மா கஷ்டப்படுறீங்க… அதை எங்கிட்ட குடுங்கம்மா… நான் பார்த்துக்கறேன்…” என்றபடி கரண்டியை வாங்கிய தினேஷை பயந்தவள் போல் பார்த்துவிட்டு

“மலர்ந்தும் மலராத பாதி மலர் போலன்னு பாட்டு பாடுவேன்னு நினைச்சா, இப்படி கரண்டியை தூக்கிகிட்டு நிக்கிறியே என் லூசு அண்ணா… நீயெல்லாம் எப்ப தான் திருந்த போறியோ…

“ஏய்… வாலு… என்ன அண்ணனை வா போன்னு சொல்லுற?...”

“பின்னே…. அண்ணனை வா போ சொல்லாம, வாடா போடா சொல்ல சொல்லுறியாம்மா… ஹ்ம்ம்ம் எனக்கு டபுள் ஓகே… என்னடா தினேஷ் உனக்கு ஓகேவா?” என்று கேட்டாள் சாகரி சிரிப்புடன்…

“சாகரி…. எங்களுக்கு டபுள் ஓகே… “  என்றனர் நந்துவும் சித்துவும்…

“டேயா… சொல்லுற?... உன்னை….” என்றபடி தினேஷ் அவளைத்துரத்த,

“முடிந்தால் புடிங்க பார்ப்போம்,..” என்றவள் சிட்டாய் பறந்து விட்டாள்…

“நீ எதும் நினைச்சுக்காதம்மா… அவ எப்பவும் இப்படித்தான்….” என்றார் செந்தாமரை…

“இதுல என்ன அத்தை இருக்கு…. அவளோட அண்ணனிடம் அவள் விளையாடுகிறாள்… இப்படி தானே அவரும் வாழ ஆசைப்பட்டார்…” என்றாள் கண்ணில் நீர் கோர்க்க….

“அட… என்னம்மா நீ… இதுக்கு போயி… அழுதுகிட்டு… அவன் எப்பவும் இப்படி சந்தோஷமா தான் இருப்பான்… நீயும் என் மகனோட சேர்ந்து நூறு வருஷம் வாழுவ தாயி….” என்றபடி அவளை அணைத்துக்கொண்டார் செந்தாமரை வாத்சல்யத்துடன்….

இது தான் குடும்பமா?... இது தான் பாசமா?... இது தான் நிறைவா?... இது தான் கண்ணீரா?... இது தான் அன்பா?... இது தான் உறவா?... இது தான் சகல சம்பத்துகளுமா?... ஆம் இது தான் அவை…… மனிதர்களின் வாழ்வில்… சில நாட்கள் மிக்க மகிழ்ச்சிகரமாக இருக்கும் அவர்களே எதிர்பார்க்காத வண்ணம்… தினேஷ்-காவ்யாவின் வாழ்விலும் அது தான் நடந்து கொண்டிருக்கின்றதோ?...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.