(Reading time: 50 - 99 minutes)

 

வாங்க அண்ணன்… வாங்க மதினி… எத்தனை வருஷம் ஆச்சு உங்களைப் பார்த்து….” என்றபடி வரவேற்றார் செந்தாமரை… ராசுவையும் அவரின் மனைவி செல்வியையும்…

காலை டிபன் எல்லாருக்கும் பரிமாற செந்தாமரை எத்தனிக்கும்போது, காவ்யா தடுத்தாள்…

“அத்தை நீங்க உட்காருங்க…. நான் பரிமாருறேன்… நீங்க உங்க மகன் கூட உட்கார்ந்து சாப்பிடுங்க…” என்றாள் பொறுப்புள்ள மருமகளாய்….

அவளின் சொற்களில் நெகிழ்ந்தவர், “அடிஆத்தி…. என் மகன் கூட நீ ஜோடியா உட்கார்ந்து சாப்பிடணும்… அதை இந்த செந்தாமரைப் பார்க்கணுமாக்கும்… பேசாம என் மகன் பக்கத்துல போயி உட்காரு தாயி…”

“அதான்… உங்க அத்தையே சொல்லிட்டால்ல, இன்னும் என்னம்மா தயக்கம்… வாம்மா… இங்க எங்க மகன் பக்கத்தில வந்து உட்காரு….” என்றதும்.. பெரியவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அவனருகில் அமர்ந்தாள் காவ்யா…

“ஹ்ம்ம்… இதை தானே அண்ணி எதிர்பார்த்தீங்க… எங்க அம்மாவே உங்களை அண்ணன் பக்கத்துல உட்கார சொல்லணும்னு… ஹ்ம்ம் உங்க காட்டுல அடை மழை தான்… ஹ்ம்ம்…” என்றாள் சாகரி கேலியுடன்….

“அய்யோ.. அத்தை அப்படி எல்லாம் எதுமில்லை அத்தை…” என்று வேகமாய் சொல்லியவளைப் பார்த்த செந்தாமரை…

“அட நீ ஏன் தாயி, பயப்புடுற?... இவ என்ன சொன்னாலும் என் மருமக எனக்கு சொக்க தங்கம் தான்… இவ பேச்செல்லாம் நான் ஒரு பொருட்டாவே நினைக்க மாட்டேன்… நீ சாப்பிடு தாயி…” என்றவர், மகளிடம், “அடியே… வாயளக்காம என் புள்ளைக்கும் மருமகளுக்கும் சாப்பாடை பரிமாறு…” என்று அதட்டல் போட்டார்…

“ஹ்ம்ம்… செய்யுறேன்… செய்யுறேன்….” என்றபடி முணுமுணுத்துக்கொண்டே பரிமாறினாள் சாகரி…

“முத முத வீட்டுக்கு வந்திருக்கீங்க… சைவம் சாப்பிடுங்க… மதியம் அசைவம் சமைச்சு தாரேன்…” என்றபடி அனைவருக்கும் பரிமாறிவிட்டு அவரும் உண்டார் மருமகளின் கையில்…

“அத்தை சாம்பார் தான் வச்சீங்க… அவியல் கூட்டும், கோஸ் கூட்டும், உருளைக்கிழங்கு வறுவலும், அப்பளமும்…. பாயாசமும்… எப்படி இவ்வளவு ருசியா இருக்கு…. எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க அத்தை…” என்றாள் காவ்யா…

“அதுக்கென்ன தாயி…. நீ வா… நாங்க சொல்லிக்கொடுக்குறோம்… என்ன மதினி நான் சொல்லுறது சரிதானே?...” என்றார் செல்வி…

“அப்படி சொல்லு மதினி… நாம எதுக்கு இருக்கோம்… நம்ம மருமகளுக்கு சொல்லிக்கொடுக்கதானே…” என்றார் செந்தாமரை…

“மதினி… மதியம்… ஐயிர மீன் குழம்பு வைச்சிடுவோமா?...”

“அடி ஆத்தி… எப்படி செல்வி நான் நினைச்சதையே நீயும் சொல்லிட்ட?...”

“அது தான் தாமரை மதினி… நம்ம பாசம்…”

“அப்படி சொல்லு செல்வி….”

“சரி வாங்க போகலாம்…” என்றபடி மூவரும் உள்ளே செல்ல, ஆண்கள் மூவரும் வெளியே திண்ணையில் அமர்ந்து கதை பேச ஆரம்பித்தனர்…

ன்ன ராசு… விவசாயமெல்லாம் எப்படி போகுது?...”

“மழை சரியா இல்லை ஜனா… இருந்தாலும் கை நட்டம் இல்லை…. போட்ட முதலுக்கு ஒரு பங்கு கூட தான் வந்தது விளைச்சல்…. இங்கே எப்படி ஜனா…?’’ நீ இப்போ என்ன பயிரிட்டிருக்க?...”

“வாழை, கம்பு, சோளம், நெல் எல்லாம் போட்டிருக்கேன்… மழை கொஞ்சம் சரியில்லை தான்… போன வருஷம்… ஆனா இந்த வருஷம் வருண பகவான் மேல பாரத்தை போட்டு விதை போட்டிருக்கேன் நிலத்தில்…”

“இந்த வருஷம் மழை நிறைய இருக்கும்னு பெரியவங்க சொல்லுறாங்க… நம்புவோம்டா… ஜனா… நான் கூட அதை நம்பி தான் நீ சொன்னதை எல்லாம் பயிரிட்டிருக்கேன்…”

‘நல்லதுடா ராசு… சரி வாடா.. நாம சுத்திப்பார்த்துட்டு தண்ணீர் பாய்ச்சிட்டு வரலாம், வயக்காட்டுக்கு….”

“ஹ்ம்ம்… வாடா… போவோம்… தங்கச்சி… நான் வயக்காட்டுக்கு போயிட்டு வரேன் தாயி… செல்வி போயிட்டு வாரேன்… காவ்யா வரேன்மா…” என்றார் ராசு…

“நானும் போயிட்டு வாரேன் செல்வி… செந்தா வாரேண்டி…. மருமகளே நீங்க எல்லாரும் சமைச்சு அங்கே தென்னந்தோப்புக்கு எடுத்துட்டு வாங்க…” என்றார் ஜனா…

“அடடா… போயிட்டு வாங்க… அதுக்கு எதுக்கு கூப்பாடு போடுறீங்க…” என்றபடி வந்தார் செந்தாமரை…

“நல்லா சொல்லு தாமரை… நம்மள வேலை கழுதை பார்க்கவிடாம இப்படி நின்னு கத்திக்கிட்டு அவர் தான் கூறுகெட்டத்தனமா இருக்குறார்ன்னா, நீங்களுமா அண்ணே….” என்றார் செல்வி…

“ஆமா.. ஆமா… உன் அண்ணனுக்கு மட்டும் நிறைய வேலை இருக்குது பாரு… போடி… இவளே… போயி சமைக்குற வழியைப் பாரு… இங்கே நின்னு வெட்டிகதை பேசிட்டு இருக்காத…” என்றார் மனைவியின் பேச்சுக்கு பதில் சொல்லிவிட்ட பெருமையுடன்…

“இந்த வித்தார பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. வாயிலேயே பந்தல் போடுற மனுஷன் தானே நீங்க… எனக்கு தெரியாதாக்கும் உங்க வண்டவாளம்… ம்க்கும்…” என்றபடி தோள்பட்டையில் இடித்துக்கொண்டார் செல்வி…

“பார்த்துடி… கழுத்து சுழிக்கிக்கப் போகுது….”

“அடடா… ரொம்ப தான் அக்கறை… எங்களுக்கு தெரியும்… நீங்க கிளம்புங்க….” என்றார் வெடுக்குடன்…

‘’அட எவடி இவ, பாவம் பொண்டாட்டியாச்சேன்னு அக்கறைப் பட்டால், நீ ரொம்ப தான் சிலிர்த்துக்குற?...”

“நான் என்ன சண்டைக்கோழியா?.... சிலிர்த்துக்க….” என்றபடி அவர் முறைக்க…

“சரி சரி… முறைச்சே மயக்காத…” என்று செல்விக்கு மட்டும் கேட்கும்படி சொன்னார் ராசு…

வெட்கம் சூழ, அதை மறைத்துக்கொண்டு, “என்ன பேச்சு பேசுறீங்க… மகனையும் மருமகளையும் முன்னாடி வச்சுக்கிட்டு… பாருங்க… அண்ணன், அண்ணி வேற இருக்காங்க…” என்றார் மெதுவாக….

“இருந்தா என்ன… என் பெண்டாட்டி… நான் ரசிக்குறேன்…” என்றார் ராசு…

“ஹ்ம்ம்…கும்…..” என்றார் ஜனா தொண்டையை செருமிக்கொண்டு, “போகலாமா?... ராசு….” என்று கேட்டார்…

“போகலாம்டா…” என்றார் ராசு சிரிப்புடன்..

“வரேன் செந்தா…” என்றவர் மனைவியை காதலுடன் பார்த்தார்….

அவரின் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட அவர் முகம் செந்தூரமாகவே மாறியது…

அதை ரசித்தபடியே நின்றிருந்தார் ஜனா….

இப்போது தொண்டையை கனைக்கும் முறை ராசுவுடையதாயிற்று…

வெட்கத்தை மறைத்து செந்தாமரை, “சரி சரி… கிளம்புங்க… அங்கே நிக்கிறது நம்ம முத்து தானே?... அவன் கிட்ட மீனைப்புடிச்சு கொடுத்து விடுங்க… விரசா போயி அவங்கிட்ட சொல்லுங்க……” என்றார் மகனும், மருமகளிடம் சிறிது பேசட்டுமே என்று இங்கிதம் தெரிந்தவராய்…

“அதான் மதினி சொல்லிட்டாங்கல்ல, இன்னும் என்ன நிக்கிறீங்க…. கிளம்புங்க…” என்று விரட்டினார் செல்வியும் செந்தாமரையின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு…

“வாடா.. நாம… போயிடலாம்…” என்றபடி இருவரும் வாசலை நோக்கி நடந்தனர்…

‘காவ்யா…  நீ இந்த பாத்திரத்தை எல்லாம் எடுத்துட்டு மெதுவா வா தாயி… நீ வா செல்வி நாம உள்ளார போகலாம்…” என்றபடி செல்வியை அழைத்துக்கொண்டு போய்விட்டார் செந்தாமரை…

“ஹ்ம்ம்… கவி… போயிட்டு வரட்டா…” என்றபடி அவன் இழுக்க,

அவளும் புரிந்து கொண்டு “ஹ்ம்ம்… போயிட்டு வாங்க…” என்றாள்…

“அவ்வளவு தானா?... க…..வி…. நான் பாவம் இல்லையா?... பாரு அம்மா ஏற்படுத்தி கொடுத்த சந்தர்ப்பத்தை வீணாக்காதே…”

நாணம் எட்டிப்பார்க்க, “ப்ளீஸ்ங்க…. போயிட்டு வாங்க… மாமா வாசலில் நிக்கிறாங்க பாருங்க…” என்றாள் சிணுங்கலுடன்…

“ஏய்…. இப்படியெல்லாம் சிணுங்காத… அப்புறம் நான்….” என்றவன் அவளை அங்கிருந்த தூணின் மறைவில் இழுத்து அணைத்து இதழ்களில் அழுந்த முத்தமிட்டான்….

கணவனின் இதழ் அணைப்பில், தன்னை மறந்தவள், தான் இருக்கும் இடம் அறிந்து அவனின் மார்பில் கை வைத்து தள்ளினாள்… அவன் விடாமல் அவள் கைகளைப் பற்றிக்கொள்ள…. அவள் அவன் முகத்தை பிடித்து கன்னத்தில் அவனே எதிர்பாராத நேரத்தில் முத்தமிட்டு விட்டு ஓடிவிட்டாள் உள்ளே… கன்னத்தை தடவிக்கொண்டிருந்தவன், ராசு-ஜனாவின் அழைப்பில் அவர்களை நோக்கி நடந்தான்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.