(Reading time: 51 - 101 minutes)

சில மணி நேரத்திற்கு முன், அவனை அந்த வெண்மை நிறக்குதிரையில் யாருக்கும் தெரியாமல் கண்டவள் சில மணித்துளிகள் சுவாசிக்கவும் மறந்து தான் போனாள்…

சர்வ லட்சணங்களும் பொருந்திய இளவரசன் போல், அவனது அழகும், மாவீரனைப் போல், அவனது கம்பீரமும், அவளைத் திக்குமுக்காட வைத்தது…

பட்டென்று தனதறைக்குச் சென்றவள், முகத்தினில் குளிர்ந்த நீரை அடித்துக்கொண்டாள்…

ஆனாலும் அவனது முகம் அவளின் கண்ணுக்குள் தோன்ற, மீண்டும் அவனைப் பார்க்கும் ஆவலோடு மறைந்திருந்து யாரும் கவனிக்காதபடி நின்று கொண்டு அவனை ரசித்தாள்… முகத்தினைக்கூட துடைத்திடாது…

சட்டென்று அவனது மனம் எதுவோ சொல்ல, உதட்டில் பூத்த புன்னகையோடு நிமிர்ந்து தன்னவளைத் தேடினான் அவன்… அவன் உள்மனம் பொய்யுரைக்கவில்லை…

மொட்டை மாடியில் குளிர்ந்த நிலவின் மிக அருகில், முகமெங்கும் தண்ணீர்ப்பூக்கள் பூத்திருக்க, அவனையே காதலுடன் பார்த்துக்கொண்டிருந்தவளை இனம் கண்டு கொண்டான் அவன்…

அவனது விழிகள் அவளது விழிகளோடு கலந்த வேளை, தேகமெங்கும் சிலிர்த்தது அவளுக்கு… நெற்றியிலிருந்து ஒரு துளி நீர் வழிந்து அவளைத் தொட்ட போதும், அவள் அவனையேதான் பார்த்திருந்தாள்…

நனைந்த மலராய், பனியில் குளித்த தளிராய் அவள் இருக்க… அவள் நெற்றியில் இருந்து வழிந்த நீர் அவனை வதைத்தது மிக…

அவனது மந்தகாசப் புன்னகையுடன் இனம் பிரித்து சொல்லிட முடியாத தாபப்பார்வை ஒன்று அவளது நெற்றியில் இருந்து வழிந்த நீரில் பதிய… அவள் தள்ளாடித்தான் போனாள் மொத்தமாய்….

எனினும் நீண்ட நேரம் இருவரும் பார்வையை விலக்கிக்கொள்ளவே இல்லை…

வீட்டின் நுழைவு வாயிலுக்கு வந்துவிட்ட ஆதர்ஷைப் பெரியவர்கள் குதிரையிலிருந்து இறங்க சொல்ல, அவன் கடினப்பட்டு தன் பார்வையை அவளிடமிருந்து விலக்கிவிட்டு கீழிறங்கினான்… பின்னர், சில நிமிடங்களில் அவன் அவளைத் தேட, அவள் அங்கே இல்லை…

அந்த நிகழ்வின் தாக்கத்தினால் அவன் அவளைப் பார்க்க மிக ஆசையோடு இருந்தான்…

ஆனால், அவளோ எங்கே அவனை பார்த்துவிட்டால், தன் தைரியம் அனைத்தும் காணாமல் போய் அவனிடத்தில் தொலைந்து விடுவோமே என்று வெட்கப்பட்டுக்கொண்டே நிலம் பார்த்துக்கொண்டிருந்தவள்…,,,,

அனு, காவ்யா, அவளது மூன்று தோழிகள் என அனைவரும் அவளை கேலி செய்வதை உள்ளூர ரசித்தபடி இருந்தவள், இனியும் தன்னவனைப் பார்க்காமல் இருந்தால், பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடும் என்று தோன்றிவிட, மெல்ல தலை நிமிர்ந்தாள்…

அதற்காகவே காத்திருந்தவன் போல், அவளது பார்வையை சிறை செய்தான் ஆதர்ஷ்…

ஒரு வினாடி கண் மூடி இமைத்தவள் மனதினுள் கடவுளைத் தொழுதாள்…

என் இந்த நொடி, என் ஆதர்ஷின் அருகில் நான்… அவரது வருங்கால மனைவியாக ஊரறிய…. என்ற எண்ணம் அவளுள் தோன்ற, அவள் விருப்பத்துடன் அவனது விழிச் சிறையில் வாசம் செய்தாள் சுகமாக…

அவனது விழிகளில் இதுவரைக் கண்டிடாத புதுவித மயக்கத்தை அவள் கண்டாள் சில மணி நேரத்திற்கு முன்…. ஆனாலும், அவளருகில் வரும்போது அவனது விழிகளில் ஒருவித தயக்கமும் உருவாவதை அவள் கண்டாள்…

அவளது விழிகளிலும் அதே மயக்கம், தயக்கம் உருவாவதை அவளாலும் தவிர்த்திட முடியவில்லை… அவள் விழிகள் அதனை அழகாக பிரதிபலிக்க அவன் மேலும் அவள் வசமானான்….

ஒருவருக்கொருவர் அருகினில் இருக்கும் நேரம் மேலும் மேலும் இனி வரும் காலம் முழுக்க நீண்டிட வேண்டுமென்று அந்த இரு இளநெஞ்சங்களும் வேண்டிக்கொண்டது சத்தமே இல்லாது…

சுற்றி இருந்தவர்களின் கேலிப் பேச்சுக்கள், சீண்டல்கள் எதுவுமே அவர்களின் கருத்தில் பதியவில்லை… இருவரும் ஒருவரிடத்தில் ஒருவர் தொலைந்து போனவர்களாய் நின்றிருக்க, அவர்களை அனு மற்றும் காவ்யாவின் குரல்கள் நனவுலகுக்கு இழுத்து வந்தது…

அபியும், நந்துவும், தங்களது பாவாடையை நுனிவிரலில் பிடித்தபடி,

தந்தனனாதனதந்தனனா…. தந்தனனாதனதந்தனனா….

தந்தனனாதனதந்தனனா…. தந்தனனாதனதந்தனனா….

தந்தனதந்தனதந்தனதந்தனதந்தனதந்தனதன….”

என்று பாடி ஆடிவிட்டு அகல…

கும்மியடி

பெண்ணேகும்மியடி

கூடி குலவையும் போட்டு கும்மியடி…”

என்று பாடிய அனு, மைத்ரியின் பக்கத்தில் சென்று,

குமரிப் பொண்ணுக்கு மாலை வந்தது

குழைஞ்சு குழைஞ்சு கும்மியடி…”

என்று சொல்லவும், அவள் அழகாக அனுவுடன் ஆட ஆரம்பிக்க…

வயசுப் பொண்ணுக்கு வாழ்வு வந்தது

வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி…”

என்று மயூரி மற்றும் ஷன்வியின் அருகில் சென்று அனு பாட, அவர்களும் சேர்ந்து ஆடிய போது,

எங்க வீட்டு தங்க விளக்கு

ஏங்கி நிற்குது கும்மியடி…”

என ரிகாவை மேடையிலிருந்து கீழே அழைத்துவந்து அவளது தோளைப் பிடித்துக்கொண்டு காவ்யா பாட….

எண்ணெய் ஊற்றி திரியைத்தூண்ட

ஆளு வந்தது கும்மியடி….”

என ஆதர்ஷையும் மேடையிலிருந்து கீழே அழைத்துவந்து அவனது தோளைப் பிடித்துக்கொண்டு அனுவும் பாட…

பார்ப்பவர் அனைவருக்கும் உள்ளத்தில் உவகை உண்டாயிற்று….

அதுவரை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த தாயை அருகழைத்து அவரின் காதில் ஆதர்ஷ் ஏதோ சொல்ல, அவர் மகனின் முகம் பற்றி நெற்றியில் முத்தமிட்டார்…

என்ன சொன்னான் ஆதர்ஷ்?... என்று கேட்ட சுந்தரத்திடம், அவர் செய்தியை சொல்ல, அவர் முகத்திலும் பூரிப்பு, பெருமை….

சுந்தரம் சென்று ஷ்யாமிடத்திலும், தினேஷிடத்திலும் தகவல் சொல்ல, கோதை சென்று அனுவிடத்திலும், காவ்யாவிடத்திலும் தகவல் சொன்னார்…

எதற்கு இப்போ எங்களை கூட்டிட்டு வந்தீங்க இங்கே?... என்று ஆண்கள் மூவரும் அங்கே தினேஷ் மற்றும் ஷ்யாமிடம் கேட்ட அதே கேள்வியைத்தான், பெண்கள் மூவரும், இங்கே அனுவிடத்திலும் காவ்யாவிடத்திலும் கேட்டனர்… ஆனால் அவர்கள் நால்வரின் பதிலும் அமைதி மட்டுமே…

சிறிது நேரத்திற்குப் பிறகு, அனைவரும் மேடையைப் பார்க்க, அங்கே முகிலன், ஹரீஷ் மற்றும் அவ்னீஷ் இருந்தனர்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.