(Reading time: 51 - 101 minutes)

ளங்குயில் இசைத்து அழகாக பொழுது விடிய, கதிரவன் தனது கதிரால் பூமியெங்கும் ஒளியைப் பரப்ப ஆரம்பித்தான்…

மணியின் கீதம் காற்றில் தவழ்ந்து தவழ்ந்து வர, மனதிற்கு அமைதி தரும் ஆலயத்தில் கருவறை முன்பாக சொந்தங்கள் சுற்றிலும் இருக்க, ஆடம்பரமோ ஆர்ப்பாட்டமோ இல்லாது அமைதியாக அமர்ந்தபடி குருக்களைப் பின் தொடர்ந்து மந்திரங்களை சொல்லிக்கொண்டிருந்தான் பட்டு வேஷ்டி சட்டையில், அழகாக தொடுக்கப்பட்ட ரோஜா மாலையில்… ஆதர்ஷ் ராம்…

அவனுக்கு வலப்பக்கத்தில் சற்று தள்ளி, கோதை-சுந்தரம், பர்வதம், ராஜசேகர், செல்லம்மாப்பாட்டி, ராசு-செல்வி அனைவரும் நிற்க…

அவனுக்குப் பின்னே ஹரீஷ், முகிலன், அவ்னீஷ் மூன்று பேரும், அரக்கு, ஊதா, பச்சை நிறத்தில் சட்டையும், சந்தனநிறத்தில் பட்டு வேஷ்டியும் அணிந்திருந்தனர்… மாப்பிள்ளை முறுக்கு தானாகவே அவர்களிடத்தில் ஒட்டி இருந்தது…

ஆதியின் இடப்பக்கத்தில், அவ்னீஷ் அருகே, ஷ்யாமும், தினேஷும், தாமரை நிற சட்டையும், சந்தன நிறத்தில் பட்டு வேஷ்டியும் அணிந்திருந்தனர் முகத்தில் பூத்த புன்னகையோடு… தத்தமது துணைவியரை எதிர்பார்த்து…

பொண்ணை வர சொல்லுங்கோ என்ற குருக்களின் குரல் கேட்டதும், அனைவரின் பார்வையும் மணப்பெண் வரும் திசையை நோக்கி சென்றது… ஆதியின் விழியும் மெல்ல அவள் வரும் திசையில் சென்றது…

தாமரை நிறத்தில் பட்டுப்புடவையும், அதில் ஆங்காங்கே கொடிகளும், பூக்களும் பச்சை நிறத்தில் இருக்க… தங்க நிறத்தில் சரிகையும் கொண்ட புடவையில் அனுவும் காவ்யாவும் அழகாக வர, அவர்களுக்கு முன்னே ஆரஞ்சும், வெளிர்நிற மஞ்சளும் கொண்ட பட்டுப்பாவாடையில் அபியும், நந்துவும் கைப்பிடித்தபடி வர, சிகப்பு வண்ண நிறத்தில் சட்டையும், சந்தன நிற பட்டு வேஷ்டியும் அணிந்து சித்தார்த் நந்துவின் கைப்பிடித்து வர…

ஆங்காங்கே மணிகள் கோர்க்கப்பட்டு, அளவான வேலைப்பாடுகளுடன் ஜொலித்த பச்சை, அரக்கு, ஊதா நிறப்பட்டுப்புடவையில் தேவதையாய் வந்து கொண்டிருந்தனர் மணப்பெண்ணின் அருகே, ஷன்வி, மைத்ரி, மற்றும் மயூரி...

எளிமையான அலங்காரங்களுடன், வான நிறத்தில் உடலும், கதிரவன் ஒளி நிறத்தில் தாமரை போன்ற பூக்களும், தங்க நிறத்தில் சரிகையும், சின்ன சின்ன கொடிகள் இளம் பச்சை நிறத்திலும், நிறைந்த பட்டுப்புடவையில், முகத்தில் வெட்கத்தையும், புன்னகையையும் படர விட்டு, கழுத்தினில் ரோஜாப்பூ மாலையையும், கூந்தலில் வாசம் மிக்க மல்லிகையையும் சூடி, வானுலக மங்கையாக அடி மேல் அடி எடுத்து வைத்து தன்னவனின் கை சேர வந்து கொண்டிருந்தாள் சாகரிகா சீதை…

அனைவரின் பார்வையும் அவளை நோக்கியே இருப்பதை உணர்ந்தவளுக்கு சற்றே அச்சமும், கல்யாணப்பெண்ணிற்கே உரிய நாணமும் அவளை சூழ்ந்து கொள்ள, அவள் மேலும் நிலம் பார்த்தாள்…

ஆதர்ஷின் விழிகள் அப்படியே விரிந்து அவளையே விழிகளில் உள்வாங்கிக்கொண்டிருந்தது… அவள் வரவையே இமைக்காமல் பார்த்திருந்தன அவனது மயங்கிய காந்த விழிகள்… 

என்னவள்… என் அழகு சீதை… கொள்ளை அழகுடி நீ… என்று அவளை ரசித்துக்கொண்டிருந்தவனது சுவாசம் சற்று நேரம் தடைப்பட்டு தான் போனது அவள் அவனருகில் வந்து அமர்ந்ததும்… 

இதை இந்த அக்கினியில் போடுங்கோ என்ற குருக்களின் குரல் காதில் கேட்க… அவளிடமிருந்து பார்வையை விலக்கி தன்னை சமாளித்துக்கொள்ள அவன் அரும்பாடு பட்டான்…

அவனைப் பார்க்கும் ஆவல், அவள் உள்ளத்தில் உதித்தது… அவனருகிலே தான் அமர்ந்திருந்த போதிலும், அவனைப் பார்க்க அவள் விழிகள் சிறகடித்தது பட்டாம்பூச்சியென… இமைகள் இரண்டுமோ அதற்கும் மேல்…

இன்னும் கொஞ்ச நேரம் தான்… என்றெண்ணும்போதே மணல் போல் அவள் ஆசை வெட்ட வெளியில் விரிந்து பரவியது… மனமோ நிலம் சேரத்துடிக்கும் நீர்த்துளி போல் குதித்தது…

ஆதர்ஷிற்கோ… வார்த்தைகள் சொல்ல முடியாத அளவு நெஞ்சில் சேர்ந்து பெரிய பாரமாய் இதயத்தை இடம் பெயர செய்வது போல் உணர்ந்தான்…

அவளைப் பார்த்தான்… அவள் விரல்கள் நடுக்கத்தில், ஒன்றை ஒன்று இறுக பற்றுவதைக்கண்டான்… இன்னும் கொஞ்ச நேரம் தான் சீதை… அதன் பின் இந்த நடுக்கம் நான் உனக்கு தரமாட்டேனடி சகி… என்று மனதினுள் பல முறை சொல்லிக்கொண்டான்…

சுற்றியிருந்த சொந்தங்களின் கேலிப் பேச்சுக்களும், சிரிப்பு சத்தமும், காதில் கேட்டாலும் புன்னகை ஒன்று மட்டுமே சிந்த முடிந்தது அவளால், அவள் நடுக்கத்தை விடமுடியவில்லை…

இதயத்தில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருந்த இனம் புரியாத சிறு அச்சத்தையும் அவளால் விலக்கிட முடியவில்லை…

கருவறையில் இருக்கும் அந்த சீதாராமனை சேவித்துவிட்டு, ஆதர்ஷின் கையில் மஞ்சள் மணம் கமழும் தாலியை எடுத்து கொடுத்து…. கெட்டிமேளம்… கெட்டிமேளம்… என்று குருக்கள் சொல்ல… பக்கத்தில் இருந்த வாத்தியக்குழுவினர் இசையை வாரி வழங்க…

அவன் கரங்கள் அவள் முகம் அருகில் வர, அவள் மெல்ல தன் சிரம் தாழ்த்த, சொந்தங்களின் பூத்தூவல்கள் ஒவ்வொன்றாய் காற்றில் கலந்து அவனை நோக்கி வர, அவன் அவளைத் தொட்டு முதல் முடிச்சைப் போட்டான்… அவள் விழிகளில் திரண்டிருந்த நீரோடு அவனை சட்டென்று வெட்கம், பயம் அனைத்தையும் மீறி ஏறிட, அவன் விழிகள் அவள் விழிகளோடு உறவாடியது… நான் உன்னவன், நீ என்னவள் என… என் சகி… அழக்கூடாது எப்போதும்… என அவன் விழிகள் சொல்ல, அவள் அழுகையை மறந்து, புன்னகையை விழிகளில் பிரதிபலிக்க, அவன் இரண்டாவது முடிச்சைப் போட்டான்… சுற்றியிருந்த சொந்தங்களின் அறைகூவலும், பூத்தூவல்களும், இசை முழக்கங்களும், அனைத்தும் நடப்பவற்றை எடுத்துரைக்க அவள் முகம் அந்திவானமாய் சிவக்க.. அதை கண் கொட்டாமல் ரசித்தவன், விழிகளில் காதல் கரை புரண்டோட… அவன் மூன்றாம் முடிச்சைப் போட்டான்…

உள்ளத்தால் மனைவியாக்கியவளை இன்று ஊரறிய, உலகறிய, கடவுள் சந்நிதியில் தாலிக்கட்டி மனைவியாக்கிக்கொண்டான் ஆதர்ஷ் ராம்…

தினேஷும், ஹரீஷும், சந்தோஷத்தில் கண்ணீரை உதிர்க்க, காவ்யா அவர்களை சமாதானம் செய்து தன் கண்ணீரை தட்டி விட்டாள்…

மகிழ்ச்சியில் அழுதபடி கணவரைப் பார்த்த கோதையை சுந்தரம் தோளோடு மனைவியை அணைத்துக்கொண்டு ஆறுதல் சொல்லிவிட்டு, அவருக்கு தெரியாமல் திரும்பி விழிகளை துடைத்துக்கொள்ள ராஜசேகர் அவள் தோள்தொட்டு சமாதானப்படுத்தினார்…

ராசுவும்-செல்வியும் விழிகளில் துளிர்த்த நீரை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சிரித்துக்கொண்டே துடைத்துக்கொள்ள, பர்வதமும், செல்லம்மாப்பாட்டியும் ஒருவர் கைகளை ஒருவர் பிடித்துக்கொண்டனர் நீர் கோர்த்த விழிகளோடு…

ஷ்யாம், அவ்னீஷ், அனு, மைத்ரி, முகிலன் ஐந்து பேரும் சந்தோஷமாக புதுமணத்தம்பதிகளின் மேல் பூக்களைத்தூவிய வண்ணம் இருக்க…

ஷன்வியும், மயூரியும் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு, மற்றவரின் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டனர் புன்னகையுடன்…

குருக்களின் காதில் அந்நேரம் இன்னொரு குருக்கள் வந்து ஏதோ சொல்ல, அவர் புதுமணத்தம்பதிகளிடம், சுவாமி வந்திருக்கார்… அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க… சேமமா இருப்பேள்… என்று சொல்லி… இந்த குங்குமத்தை அவா நெற்றியில் வைத்து விடுங்கோ என்றபடி குங்குமம் கொடுக்க…

ஆதர்ஷ் அதை எடுத்து விட்டு அவளைப் பார்க்க, அவள் வெட்கம் கலந்த புன்னகையுடன் அவன் கைகளை சுற்றி அவளது வலப்பக்கம் கொண்டு வரும்போது சற்றே அவனது வலப்புறம் அவன் தோளுக்கு மிக அருகில் அவள் சாய்ந்து கொள்ள, அவன் சிரித்தவாறே, அவளது நெற்றியில் குங்குமமிட்டான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.