(Reading time: 35 - 69 minutes)

யாருடா அது உன்மேல கோபமா இருக்க அந்த அவங்க….?” கேட்டபடி ஷாலுக்கு அடுத்து வந்து அமர்ந்தான் அவன். சரித்ரன்.

தூக்கி வாரிப் போட எழுந்தாள் ஷாலு.

ஒரு நொடியில் அவள் மொத்த உலகத்தையும் மாற்றிப்போட ஒரு மனிதனால் கூடுமா? அழுகையும் சந்தோஷமும் ஒன்றாய் அவளுள் உற்பத்தி. எதையும் உணர மறுத்தது உடல். ஆனந்த அதிர்ச்சி.

“நீ எப்படா வந்த….?” சித்தி கேட்க

“உங்க பொண்ணு உங்கட்ட வந்து என்னைப் பத்தி கேட்டாளே அப்பவே வந்துட்டேன்.…” வாய்தான் பதிலை தன் அத்தைக்கு சொல்லிக் கொண்டிருந்ததே தவிர அவன் கண்கள் தன்னவளிடம் தஞ்சம்.

 புன்னகையுடன் எழுந்து சென்றார் சித்தி. “ஃபைவ் மினிட்ஸ்தான்டா உனக்கு டைம்…..திரும்பி வருவேன்…..” பேசுவதற்கு இளையவர்களுக்கு தனிமை கொடுத்துப் போனார்.

அருகில் நின்றவளின் வலக்கை மணிக்கட்டை பற்றி மென்மையாய் தன் புறமாக அமர்த்தினான் சரித்ரன். உணர்ச்சி அலைகளுக்கிடையில் நடுங்கிக் கொண்டிருந்தது அவள் சிறு தேகம். கண்கள் நிரம்பிய குளம்.

அதை அடக்கி ஆளப் போராடிக் கொண்டிருந்தாள் அவள். சில நொடிகள் பார்த்திருந்தவன் தாங்காதவனாய் மெல்லென அணைத்தான். அவன் மார்பிற்குள் புதைந்தாள் அவள். பெண்ணவள் கண்ணீரில் நனைந்தது அவன் உடல்மட்டுமல்ல உயிரும்தான்.

உலகமே இடிந்து இவள் மேல் விழுந்திருக்க ஒவ்வொரு செல்லும் மூச்சுக்காய் தவித்திருக்க உச்சகட்ட உயிர்பிரியும் வேதனையில் இருப்பது போல் இருந்தவளுக்கு மாபெரும் விடுதலை அவன் மார்பில்.

“வெரி வெரி சாரி சரன்…” அழுகைக் குரலாய்….

இறுகியது அவன் பிடி. இன்னுமாய் தன்னோடு சேர்த்தான் அவளை.

“இது எதுக்குடா ..?”

“இல்ல…..நான் உங்கட்ட அப்டி பேசிருக்க கூடாது….”

“அப்டில்லாம் இல்ல ஷாலுமா….உன்ட்ட ப்ரொபோஸ் செய்ய எனக்கு ரைட் இருக்குன்னா….நோ சொல்ல உனக்கும்தான் ரைட் இருக்குது….எனக்கு அதுக்காகல்லாம் கோபம் கிடையாது…..”

“ஆனா நீங்க கோபபட்டீங்க…..”

“உன் சேஃப்டி பத்தி கன்சர்ன் இருக்கும்ல…..அடுத்து என்னதான் நமக்கு மூட் அவ்ட்னாலும்  அதால அடுத்தவங்க அஃபெக்ட் ஆற மாதிரி ரியாக்ட் செய்ய கூடாதுல்ல….உங்கப்பாவுக்கும் மாமாவுக்கும் ரிலேஷன்ஷிப் இஷ்யூ ஆகிடுமோன்ற மாதிரி அன்னைக்கு ஒரே டென்ஷன்…அதோட என் கூட கார்ல வர்றதவிட அங்க ஹாஸ்டல் கேட்டுக்கு வெளிய உட்கார்ந்துட்டு இருக்றது உனக்கு சேஃபா பட்டதே அது…..இதெல்லாம் தான் எனக்குப் பிடிக்கலை….அதான் அப்டி ரியாக்ட் செய்துட்டேன்….”

“அப்புறம் உங்க மொபைல கூட ஆஃப் செய்து வச்சுடீங்க….” கேவத் தொடங்கி இருந்தது அவள் குரல்.

“ஷாலு” அழுத்தமும் கனிவுமாய் தன் காதலை அவளுக்கு உணர்த்திவிடும் படியாய் அவள் பெயரை உச்சரித்தான் சரன்.

மார்பில் சாய்ந்திருந்தவள் விழிகளை உயர்த்தி அவன் முகத்தைப் பார்த்தாள். அத்தனை தாகம் அவளது ஈர கண்களில். அன்பிற்காய் ஏங்கிய தாகம்….உருகிப் போனான் அவன்.

அவள் நெற்றியில் முதல் முத்த ஈரம். நிம்மதியாய் விழிகளை மூடிக் கொண்டாள் அவள். கைகளுக்குள் சொர்கத்தை சுமந்தான் அவன்.

“போய் அம்மா கூட இருக்கனும்னு தோணிச்சு…. அதுக்குத்தான் பாம்பே போனேன்…..அங்க அப்பா ஒரு கான்ட்ராக்ட் விஷயமா டோக்கியோ அனுப்பிட்டாங்க…. சோ வேற நம்பர் யூஸ் பண்ற மாதிரி ஆகிட்டுது…….இப்போதான் பாம்பே வந்தேன்…..சிம் ஐ ஆன் செய்தா மிஸ்கால் அலர்ட்ல உன் நம்பர்….நெக்ஸ்‌ட் ஃப்ளைட்ல இங்க ஓடி  வந்துட்டேன்….”

“ம்”

வார்த்தையற்ற காதலில் மௌனமாய் கரைந்தன இரு உயிர்களும் சில நொடிகளும்.

மெல்லவெனினும் சூழலை முதலில் உணர்ந்தது அவன்தான். நடுஹாலில் நம்பிவிட்டுப் போன அத்தையின் மகளை….”ஷாலு கண்ண துடைச்சுகோ….அத்த வருவாங்க….”

சட்டென சூழல் உணர துள்ளிப் போய் விலகி அமர்ந்தாள் அவளும். அவனுக்காய் அத்தனை நாளாய் அலையாய் அலைந்திருந்தவளுக்கு, அவன் இனி அவளுக்கு இல்லை என பயந்திருந்தவளுக்கு அவனைக் கண்டதும், அதுவும் அவளவனாய் கண்டதும் இருந்த உணர்ச்சிப் பெருக்கில் தோள் சேரல், நீர் வார்த்தால், இதழ் தீண்டல் எதுவும் எதாவகவும் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது? அத்தனையும் அதது அதுவாகத் தெரிய அரண்டு போனாள்.

சரித்ரனுமே திருமணம் வரை விலகிப் பழகுவதில் முழுநம்பிக்கை உள்ளவன்தான் ஆனால் இந்த சூழலின் வேகமும் காதலின் தாக்கமும் அவனுக்கும் புதிது. நடந்து முடிந்தவைகளை மாற்றவா முடியும்? இனி கவனமாய் இருக்க வேன்டும் என தீர்மானித்துக் கொண்டான்.  ஆக அவனுக்கு ஷாலுவின் இப்போதைய இந்த மிரண்ட பார்வை துல்லியமாக புரியத்தான் செய்கிறது. ஆனால் ஏனோ சிரிப்பு வந்துவிட்டது.

“ஏய் எஸ் எஸ் நான் இன்னும் அதே சரன்தான்….ஜந்துவப் பார்த்த மாதிரி துள்ளிப் போய் தூரமா உட்கார்ந்திருக்க…?”

ஏதோ நெருடியது ஷாலுவுக்குள்.

ன்று மாலையே தன் அண்ணனை அலைபேசியில் தொடர்பு கொண்டார் ஷாலுவின் சித்தப்பா. காரணம் சரித்ரனின் பெற்றோர் சென்னை வந்திருந்தனர். ஷாலுவைப் பார்க்கவும் திருமணம் குறித்து பேசவும்.

ஆல்வின் சித்தப்பா ஷாலுவின் அப்பாவிடம் முதலில் அறிமுகமாய்  பேசிவிட, அதன் பின் சரித்ரனின் பெற்றோர்  அப்படியே தென்கோட்டை சென்று திருமணம் பேசிமுடித்திட வேண்டும் என வந்திருந்தனர். ஆக சித்தப்பா தன் அண்ணனை அலைபெசியில் அழைத்தவர், நல விசாரிப்புகளுக்குப் பின் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

“அண்ணா நம்ம வீட்ல பெண்ணெடுக்க ஆசப்பட்டு ஒரு நல்ல இடம் வந்திருக்குது….உங்க மனசுல என்ன இருக்குதுன்னு கேட்கலாம்னு நினச்சேன்….”

“ம்…இங்கயும் நிறைய பேர் கேட்டு வந்துட்டுதான் இருக்காங்க ஆல்வி……எனக்கும் ஒரு இடம் பிடிச்சிருக்குது..... பெரியவ படிப்ப முடிக்கட்டும் அப்பதான் சரியா வரும்….பையனுமே படிச்சுகிட்டுதான் இருக்கான்….”

“ஓ அப்படியாண்ணா….இங்க என் மச்சான் மகனுக்குன்னு விரும்பி கேட்கிறாங்க…..உனக்கே தெரியும்….பையன் குணத்துக்கு நான் கேரண்டி…..நான் பார்க்க வளந்தவன்….எம்பிஏ முடிச்சிட்டு அவங்க அப்பா பிஸினஃஸை கவனிச்சுகிட்டு இருக்கான்…மத்த எல்லாமே நம்ம வீட்டுக்கு சமமா இருப்பாங்க….பெண்பிள்ள இல்லாத வீடு…..நம்ம பிள்ளய மகளா வச்சுப்பாங்க….”

“யாரு பாம்பேல இருக்காரே அந்த ஜோசஃப் ஜெயராஜ் அவர் மகனையா சொல்ற…? அவர் வைஃப் இவாஞ்சலின் கூட உன் அண்ணி தயாவுக்கு அப்ப ரொம்ப க்ளோஸ்….தயா போன பிறகு யார்ட்டயும் நான் டச்லயே இல்லனு இப்பதான் தெரியுது….”

“அதுக்கென்னண்ணா இனிமே வச்சுகிட்டா போகுது….”

“ம்….அப்டிங்கிற….? எனக்கு கொஞ்சம் யோசனையா இருக்கேடா….? நான் பார்த்துருக்க பையனும் ரொம்பவே நல்ல பையன்டா….”

சித்தப்பாவிற்கு திக்கென்கிறது. அண்ணாவின் பிடிவாதம் அவர் அறியாததா? பிள்ளைக்கு இந்த இடம்தான் விருப்பம் என்று இவருக்குத் தெரியும். அதை அண்ணனிடம் சொன்னால் இப்பொழுது காது கொடுத்து கேட்கும் அளவிற்காவது கேட்பாரா?

“என்னடா செய்யலாம்? ஒரு பக்கம் பார்த்தா உன் மச்சான்…இன்னொரு பக்கம் தயாவுக்கு பிடிச்ச இடம்….பையனை நான் பார்த்தது இல்லனாலும் நீ சொல்றதே போதும்….ம்….. பையனுக்கு என்ன வயசுடா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.