(Reading time: 35 - 69 minutes)

து எப்டியோ இன்னைக்கு மதியம் உங்கள ஹால்ல பார்த்த மாதிரி பார்க்றது எனக்கு மனசுக்கு சந்தோஷமா இல்ல சரன்….” இதை மகன் போன்றவனிடம் அப்பொழுது எப்படி சொல்ல என்ற ஒரு தவிப்பில் தவிர்த்திருந்தாலும், மீண்டுமாய் இளையவர்கள் இருவரையும் தனியாய் சற்று நெருக்கத்தில் பார்த்ததில் அவரால் இதைப் பற்றி பேசாமலும் இருக்க முடியவில்லை.

“சாரி அத்தை…..தப்பா நினைக்காதீங்க…அவ ரொம்ப அழுதா…..இன்னொரு தடவை இப்டி நடக்காது…..”

“அவ என் சொந்த பொண்ணு கிடையாது…..ஆனா என் பொறுப்ல இருக்றவா……அப்டித்தான் நீயும்….என் நிலைய ரெண்டு பேரும் புரிஞ்சிகனும்….”

“என்ன அத்த நீங்க…..நான் உங்க பையந்தான்…என்னை கண்டிக்க எல்லா உரிமையும் இருக்கு உங்களுக்கு….”

“ஒரு பொண்ண மனசுகுள்ள இச்சித்தாலே அது ப்ராஸ்டிடூஷன் பைபிள் சொல்லுது….அந்த விதிக்கு விலக்கு உள்ள ஒரே ரிலேஷன்ஷிப் வைஃப் தான்….ஃபியான்சின்னு கூட இல்லை….தினமும் அத படிச்சு, நம்பி, வளந்தவா நான்….எனக்கு இது கஷ்டம்… ” சட்டென திரும்பி நடந்தார்.

அவசரமாக அவர் பின் சென்று அவர் கையைப் பற்றினான். “ இது அப்டில்லாம் எதுவும் இல்ல அத்த…..ஸ்டில் இன்னொரு தடவை இப்டி ஆகாது…”

அந்த விஷயம் அதோடு முடிந்து போனதாகத்தான் அவர்கள் இருவரும் நம்பிக் கொண்டனர். ஆனால் அது வேறு ஒரு பின் விளைவைக் கொண்டு வந்தது.

வர்கள் பேசிக் கொண்டதை கேட்ட மூன்றாவது நபர் தன் அறைக்குள் சென்றிருந்த ஷாலு. அவள் கதவை உள்ளே தாளிட்டுருந்தால் இது எதுவும் கேட்டிருக்காதுதான். அப்படி அவளுக்கு கேட்காது என்ற நம்பிக்கையில்தான் அவளது சித்தியுமே இதைப் பேசியது.

அறைக்கு உள்ளே சென்று உடை மாற்ற நினைத்த ஷாலுவுக்கோ வருங்கால மாமியார் ஆசையாய் கொடுத்திருந்த நகையை கழற்றி எங்கே வைக்கவென தெரியவில்லை.

இவாஞ்சலினே அதை இவள் கழுத்திலும் கையுலுமாக அணிவித்திருந்ததால் அதற்கான பெட்டிகள் கூட இவளிடம் இல்லை. அதைப் பற்றி  சித்தியிடம் கேட்பதற்காக கதவைத் திறந்து கொண்டு வெளியே வர நினைத்தவள் காதில்தான் இந்த உரையாடல் விழுந்து வைத்தது.

ஏற்கனவே அவன் அணைத்து முத்தமிட்டது ஞாபகம் வரும்போதெல்லாம் ஒரு உதறலை உணர்ந்து கொண்டிருந்தவள் இப்பொழுது மொத்தமாய் மிரண்டு போனாள்.

1990 ஆம் ஆண்டு

ராஜியின் அலறலைக் கேட்டு ஓடி வந்த அதி தேவையான முதலுதவிகள் செய்து தன் காரிலேயே மலர்விழியை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றான். அவனே முதலில் புரிந்து கொண்டது அது தற்கொலை முயற்சி எனதான். மலர்விழி மயங்கிப் போயிருந்ததால் அவளிடம் எதையும் யாராலும் விசாரிக்கவும் முடியவில்லை.

மருத்துவமனையிலும் அது தற்கொலை முயற்சி என்றே பதிவாகியது அவள் வரவு. பல மணி நேர போராட்டத்துக்குப் பின் மலர்விழி பிழைத்து கண்விழித்தாள். அப்படி அவள் கண்விழித்த நேரம் சிவந்த கண்களுடன் அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்த வசீகரன் சாகாமல் செத்திருந்தான்.

மலர் உடல்நிலை சீர்நிலை அடையும்வரை அவளுக்குத் தேவையான அனைத்தையும் கவனித்து செய்தானே தவிர அவளிடம் எதையும் தேவைக்கு மீறி பேசவே இல்லை வசீகரன். ஆனால் அவன் ஆடிப் போயிருந்தான். சர்வமும் இழந்து தானே தனக்கு பாராமாயிருப்பது போல் உள்ளுக்குள் பலமாய் சோர்ந்து ஒரு இமாலய விரக்தியில் இருந்தான்.

அது சுயநினைவு திரும்பிவிட்ட மலர்விழிக்குப் புரிந்தாலும் காரணம் மட்டும் புரியவில்லை. அடுத்து அவளை சந்திக்க வந்த பியூலாவும் அதியும் தற்கொலை முயற்சி எவ்வளவு தவறான காரியம், வசீகரன் அவளை எவ்வளவாய் விரும்புகிறான் எப்படி அவன் இவள் நிலை கண்டு துடித்துப் போனான் என அறிவுரையாய் சொல்லி விளக்கியபின்தான் வசீகரன் மட்டுமல்ல அனைவருமே ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர் என்பது மலர்விழிக்குப் புரிந்தது.

“எந்த கஷ்டத்திலயும் உங்கட்ட மனசுவிட்டு பேசினேனே….இப்ப எதனால உங்கட்ட எதையும் சொல்லாம இப்டி ஒரு முடிவுக்குப் போவேன்னு நினச்சீங்க…..?” வசீகரனைப் பார்த்துக் கேட்டாள் மலர்.

ஏனோ அவனிடம் எதைஎதையெல்லாமோ வெளிப்படையாக உடைத்துப் பேசமுடிந்த மலர்விழிக்கு “உன்னை விட்டுட்டு எங்க போவனாம் நான்….?” என வெளிப்படையாக கேட்கமுடியாவில்லை.

வெறும் வெட்கம் மட்டும் காரணம் இல்லை. அவனிடமே இன்னொருவனை காதலிக்கிறேன் என்று வெளிப்படையாய் சொன்ன வாயல்லவா இது? தவித்தாள் மலர் மறுபடியும்.

இந்நிலையில் அதி, பியூலா, ராஜி என இவர்கள்தான் மாறி மாறி வசீகரனுக்கும், மலர்விழிக்கும் மருத்துவமனையில் இருக்கும் வரைக்கும் உணவும் இன்னபிறவும் என எல்லாம் கொண்டு வந்து கொடுத்து கவனித்தனர். இதில் அதியும் பியூலாவும் இவளுக்கு அறிவுரை வழங்கினார்கள். வசீகரனுடன் மனம் விட்டுப் பேச சொன்னார்கள். இவள் அது தற்கொலை முயற்சியே இல்லை என மறுத்தாள். ஏற்றுக் கொண்டு அந்த பேச்சை அதோடுவிட்டுவிட்டார்கள். ஆனால் யாரும் இவளுக்கும் வசீகரனுக்கும் இடையில் என்ன நிகழ்கிறது என எதுவும் கேட்கவில்லை.

ஆனால் ராஜி இவளிடம் பழகியவிதம் சற்று வித்யாசமாய் இருந்தது. அவள் அதிக நேரம் மருத்துவ மனையில் இவளுடன் தங்கி இருக்க, அதியும் பியூலாவும் வெறும் விசிட்டர்களாக வந்து போனதினாலோ? அதியும் பியூலாவும் எப்போதும் இணையாகவே இவளை சந்தித்துப் பேசிய போது ராஜி மட்டும் தனியாக இவளுடன் வந்து அமர்ந்திருந்ததாலோ? ஏனோ ராஜியிடம் எல்லாவற்றையும் மனம் விட்டுப் பேசமுடிந்தது மலர்விழியால். ஒரு அழகிய நட்பு உருவாகியது பெண்கள் இருவருக்குமிடையிலும்.

மலர் டிஸ்ஜார்ஜ் ஆகி தன் வீட்டிற்கு வசீகரனுடன் சென்ற பின்பும் பெண்கள் இருவருக்குமிடையில் சந்திப்பு தொடர்ந்தது. மலர் ராஜியின் வரவை ஆவலாய் எதிர்பார்ப்பதை கவனித்த வசீகரனும் கூடுமானவரை இந்த நட்பை ஆதரித்தான். ஆனாலும் மலருக்கு என்ன பிடிக்கும் என பார்த்து பார்த்து செய்தாலும் வசீகரனின் மௌனம் இரும்புச் சுவராய் கரையாமல் குலையாமல் குறுக்கே அப்படியேதான் நின்றது.

இப்பொழுதெல்லாம் மலர்விழியின் மனதில் வசீகரனை தவிர வேறு நினைவு எதுவும் இல்லை. அவனது மௌனத்திற்கு காரணம் கண்டுபிடிக்க முயன்றாள் மலர்விழி. முன்பு அவன் மறுக்க மறுக்க சமைத்து இவள் தன்னை காயப்படுத்திக் கொண்டபோதும் இப்படித்தான் இருந்தான். ஆனால் ஒருநாள் அளவு.

அப்படியானால் அன்று ஆக்சிடெண்டிற்குப் பின் பேசாமல் போனதும் இதே போன்ற காரணத்தினாலா? இவள் விருப்பத்திற்காக மட்டுமே வேலைக்கு அனுப்பினவன் அல்லவா? ஆக வீட்டில் பத்திரமாக இருக்காமல் வேலைக்குப் போய் காயம்பட்டுக் கொண்ட்தற்காகவா அந்த கோபம்? இல்லையே வேலை அவனது தேர்வுதான்…ஆனால் காரில் போகாமல் நடந்து போனதுதான் இவளது முடிவு. ஆக நடந்து போய் அடிபட்டுக் கொண்டாய் அதனால் உன் கூட டூ……இது முதல் காரணம்.

அடுத்து இப்பொழுது இன்னும் அவள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள் என எண்ணுகிறானாயிருக்கும்…அதனால் இன்னும் மௌனம். இவ்வளவு சொன்ன பின்பும் இவன் ஏன் இவள் தற்கொலைக்கு முயன்றதாக எண்ணுகிறான்? ஒருவேளை அந்த போட்டோவில் இருந்தது அதி என இவனுக்குத் தெரிந்துவிட்டதா?

ஆக அதியைப் பார்த்ததும், அவன் மேல் உள்ள காதலில் இவள்….கடவுளே அவன் வீட்டில் வேறு வைத்து நடந்திருக்கிறது நிகழ்ச்சி, ஆக இவள் காதல் கேட்டு அதி மறுத்து அதனால் இவள் இந்த முடிவுக்குப் போனாள் என நினைத்துவிட்டானோ? அதை தன்னால் அவனுடன் பகிரமுடியாது என்று நினைக்கிறானோ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.