(Reading time: 31 - 61 minutes)

திருச்சியில்,

அதிகாலையிலிருந்தே பரபரப்பாக சுற்றிக்கொண்டு வந்த கோகிலவாணியின் நடவடிக்கைகள் எதுவும் ருணதிக்கு சரியாக படவில்லை…

“என்னாச்சு… இந்த கோகிக்கு?... ஒருமாதிரி நடந்துக்குறா?... ஹ்ம்ம்… சரி கேட்டேப் பார்த்துடுவோம்…” என எண்ணி,

“ஹேய்… கோகி… எதுக்கு இப்படி குட்டிபோட்ட பூனை மாதிரி வாசலையேப் பார்த்துட்டு நடந்துட்டிருக்குற?...”

“நான் நடந்தா உனக்கு வலிக்குதா?... போயேண்டி… போய் வேலையைப் பாரு….”

“இதோடா அப்படி எல்லாம் என் வேலையைப் பார்க்க போயிட்டா ஊரில யாரும் என்னை மதிக்கமாட்டாங்களே….”

“என்னடி மௌனம் பேசியதே சூர்யான்னு நினைப்பா உனக்கு மனசுல?... அவன் சொன்ன டையலாக் எல்லாம் சொல்லிட்டிருக்குற?...”

“ஓ… கண்டுபிடிச்சிட்டியா?.. ரைட் விடு… நேத்து தான டீவியில பார்த்தோம் ரெண்டு பேரும்… மறந்துட்டேன்… சரி அது போகட்டும்… நீ மேட்டருக்கு வா…”

“ஒரு மேட்டருக்கும் வர வேண்டாம்… போடி…”

“ஓய்… கோகி… என்ன கொழுப்பா?...”

“ஆமாடி நீ நேரா நேரத்துக்கு எனக்கு நெய்யும், வெண்ணையுமா சாதத்துல கலந்து வடிச்சி கொட்டுற பாரு… கொழுப்பு எனக்கு வர்றதுக்கு?... அடிபோடி இவளே…”

“அதுசரி… ஃபுல் பார்ம்ல இருக்குற போலயே நீ?...”

“ஆமாடி… அப்படித்தாண்டி…”

“ஓ… அப்போ இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் என்னவோ?...”

“ஆ… மண்ணாங்கட்டி… போயேண்டி….”

“என்னது?...”

“உன் தலை… சும்மா சும்மா கேள்வி கேட்குறதை நிறுத்துடி… கடுப்பேத்தாத… நானே எரிச்சலில் இருக்கேன்…”

“எது நான் கடுப்பேத்துறேனா?... நீ இதுவும் சொல்லுவ… இதுக்கு மேலேயும் சொல்லுவ… உன்னைக் கேள்வி கேட்டேன் பாரு… எனக்கு தேவை தான் இது… எல்லாம் என் நேரம்….”

“புரிஞ்சிகிட்டா சரி…” என கோகியும் சொல்லவும் அங்கிருந்து அகன்றாள் ருணதி கோகியினை பார்த்து முறைத்துக்கொண்டே செல்லமாய்…

ருணதி உள்ளே சென்றதும், வாசலில் கார் சத்தம் கேட்க, விரைந்து சென்றார் கோகிலவாணி…

“வாங்க… வாங்க… உங்களைத் தான் எதிர்பார்த்திட்டிருந்தேன்…”

“ஹ்ம்ம்ம்… ருணதி இருக்குறாளா பாட்டி?...”

‘உள்ளே தான் இருக்குறா… நீங்க வாங்க….”

“நான் வந்ததை சொல்ல வேண்டாம் பாட்டி…. ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்….”

“ஹ்ம்ம்ம் சரி…” என்ற கோகிலவாணியும் வந்தவனை உள்ளே அழைத்து சென்றார்..

சில நிமிடத்திற்குப் பிறகு,

ஹாலில், பேச்சு சத்தமும், கூடவே மகனின் குதூகல உரையாடலும் கேட்க, ஹாலுக்கு விரைந்தாள் ருணதி…

“அப்பா… என்னைப் பிடிங்க… நான் இங்க இருக்குறேன்…” என தத்தி தத்தி ஓடியபடி குட்டி துருவ் இருக்க, அவனைப் பிடிக்க முற்பட்டுக்கொண்டிருந்தான் ஜிதேந்தர்…

அவனைப் பார்த்ததும், கண்கள் விரிந்துவிட்டது ருணதிக்கு…

அவள் பார்வையினை கண்டு கொண்ட ஜிதேந்தர், அவளருகில் வந்து, “எப்படி இருக்குற ருணதி?...” எனக்கேட்க

“நீங்க….” என அவள் இழுத்த வண்ணம் நிற்க,

“என்னை நீ எதிர்பார்க்கலைன்னு உன் பார்வையிலேயே தெரியுது… பட் எனக்கு உன்னைப் பார்க்கணும் போல இருந்துச்சு… அதான் உடனே வந்துட்டேன்…” என அவன் சொல்ல அவள் அமைதியாக இருந்தாள்…

“நான் வர்றேன்னு பாட்டிக்கு போன் பண்ணி சொல்லிட்டேன் அன்னைக்கே…” என்றதும், அவள் கோகியை முறைக்க,

கோகியோ, அவளிடம் சற்று முன் வாயளந்ததற்கும், ஜிதேந்தர் வருவதை மறைத்ததற்கும் நன்றாக வாங்கப்போகிறேன் இவளிடம், என மனதிற்குள் கவலைப்பட்டுக்கொண்டவர், வெளியே அதை மறைத்தபடி,

“ஏண்டி மாப்பிள்ளையை நிற்க வைச்சே பேசிட்டிருக்க… உட்கார சொல்லுடி….” என சொல்ல, நினைவு வந்தவளாய் “உட்காருங்க…” என்றாள் ருணதியும்…

“அத்தையும் மாமாவும் நல்லா இருக்குறாங்களா?...”

“நல்லா இருக்குறாங்க ருணதி… அம்மாகூட வரேன்னு தான் சொன்னாங்க…”

“மாமா வேண்டாம்னு சொல்லிருப்பாங்க அதானே….” என்று அவள் சட்டென்று சொல்லிவிட, ஜிதேந்தர் தலை குனிந்து கொண்டான்…

“கிராதகி… வாயை வச்சிகிட்டு சும்மா இருக்குறாளா பாரு… மாப்பிள்ளை கிட்ட என்ன பேசணும், ஏது பேசணும்னு புரியுதா இவளுக்கு?... சே…” என தனக்குள் ருணதியை அர்ச்சனை செய்துகொண்டிருந்தார் கோகிலவாணி…

“நீங்க தலை குனியனும்னு நான் சொல்லலை… எதார்த்தமா தான் சொன்னேன்… ஆனா இப்போதான் தோணுது நான் சொன்னது நிச்சயம் பொய்யில்லைன்னு….”

“இல்ல ருணதி… நான்….”

“என்ன இல்ல…. உங்க அப்பா… அப்படியே தான இருக்குறார்… எதாவது மாற்றம் இருக்குதா?... அதை சொல்லுங்க முதலில்…”

“இல்ல அப்பா இன்னும் பிடிவாதமா தான் இருக்குறார்…”

“அப்புறம் என்ன?... இங்க வந்து என்னை சமாதானம் செய்ய வந்தீங்களா?... அப்படி எண்ணத்தோட மட்டும் நீங்க வந்திருந்தா மன்னிச்சிடுங்க அதுக்கு நான் ஆள் இல்ல….”

“படுபாவி… கொஞ்சமாச்சும் தன்மையா பேசுறாளா பாரு… இப்படி பேசினா எப்படி இவ வாழ்க்கையை நான் சரி பண்ண?...” என நொந்து கொண்டார் கோகிலவாணி…

“சாரி ருணதி… நான் உன்னை சமாதானம் செஞ்சு கூட்டிட்டு போக வரலை… உன்னையும், துருவனையும் பார்க்கணும்னு தோணுச்சு… அதான்… வந்தேன்… பார்த்துட்டேன்…. கிளம்புறேன்…” என அவன் எழுந்து கொள்ள,

“இந்த காஃபியை குடிங்க முதலில்… உட்காருங்க… சொல்லுறேன்ல…” என கோகி அழுத்தம் கொடுத்து பேச,

“இல்ல பாட்டி… இருக்கட்டும்… ருணதிக்கு என் மேல கோபம் இன்னும் போகலை… அவளுக்கு என்னைக்கு கோபம் போகுதோ அப்போ இந்த வீட்டுல நான் சாப்பிடுறேன்… அதுவரை எதுவும் வேண்டாம் எனக்கு…”

“அதான் வேண்டாம்னு சொல்லுறார்ல பாட்டி… விடு… முதலில் அவர் அப்பாவை அவர் சமாதானப்படுத்தட்டும்… அப்புறம் காஃபி என்ன, விருந்தே சமைச்சிக்கொடு நல்லா சாப்பிடுவார்… அப்படித்தானே ஜிதேந்தர்?...” என அவள் பட்டென்று கேட்க

“என் மேல நீ கோபமா இருக்குறேன்னு தெரியும்… ஆனா இந்த அளவு இருப்பன்னு எனக்கு தெரியாது… நிஜமாவே உன்னைப் பார்க்கணும், உங்கூடயும் துருவன் கூடயும் கொஞ்ச நேரமாவது இருக்கணும்னு தான் இங்க வந்தேன்… இப்பதான் புரியுது நான் வந்ததே உனக்கு பிடிக்கலைன்னு…” என அவன் நகர,

“மாப்பிள்ளை நில்லுங்க…” என கோகிலவாணி சொன்னதை பொருட்படுத்தாது,

துருவனைத்தூக்கி முத்தமிட்டுவிட்டு அவன் விருட்டென்று வெளியேறினான் வேகமாக…

“அப்பா…” என அழுத துருவனின் அழுகையை நிறுத்தி, அவனை தூங்கவைத்து விட்டு வந்த ருணதி, கோகியிடம்,

“யாரைக் கேட்டு ஜிதேந்தரை வர சொன்ன?...” என்றாள் கோபமாக…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.