(Reading time: 29 - 58 minutes)

ஞ்சனாவை நினைத்தாலே அவன் கை தானாக அந்த எண்ணை அழுத்தி விடும்... இன்றும் அதே தவறைத் செய்திருக்க..

தன் சிறு சிறு செயல்களில் கூட கலந்து விட்டவளை  எண்ணியதுமே அவன் உதடுகளில் மெல்லிய முறுவல்!

தாங்கள் செல்ல வேண்டிய தள எண்ணை அழுத்தியவனின் நெஞ்சம் முழுக்க அவள் பூ முகமே நிறைந்திருக்க...

‘அவளை ஏமாத்திட்டு... உன்னாலே எப்படி இருக்க முடியுது?’ , என்று அவன் மனம்  கேள்வி எழுப்பியது.

You might also like - Kanaamoochi re re... A romantic comedy...

ஸ்ருதிக்கு இன்னும் நெஞ்சில் பதைபதைப்பு அடங்கவில்லை....

‘உங்க அக்கா ஆபிஸ்க்கு வந்துட்டாங்களான்னு மட்டும் கேட்டுட்டு பேசாம போனை வைச்சிருக்கணும்டா.. வாயை விட்டேனே.. மப்புல இருக்கியான்னு!’,

மானசீகமாக தன் நண்பனிடம் புலம்பிய படியே... அதே அலுவலகத்தில் பணி புரியும் அவனின் அக்காவைப் பார்க்க சென்றாள்.

“சசி அக்கா!”, கணினியை தீவிரமாக வெறித்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்து ஸ்ருதி அழைக்கவும்.. பார்வை அதிலிருந்து அகற்றி  நிமிர்ந்த சசி அவளைக் கண்டதும் “ஹே... ஸ்ருதி!!!!”, என்று மகிழ்ச்சியுடன் முகம் மலர்ந்தாள்.

ஒரு வாரம் சசி விடுப்பில் இருந்ததால், இன்று தான் ஸ்ருதியால் நேரில் பார்க்க முடிந்தது. புது அலுவலக அனுபவம் எப்படி இருக்கிறது என்று  சசி விசாரிக்க... ஸ்ருதியோ  ஆர்யமனை பற்றி விசாரித்தாள்..

“அக்கா, சி.டி.ஓ. ஆர்யா பயங்கர ஸ்ரிக்ட் ஆபிஸரோ?”, என்று கேட்க..

அவன் பெயரை உதிர்த்ததுமே சசியின் முகம் மாறியது..... 

ஆர்யமனின் மீது அவளுக்கு அவ்வளவு ஆத்திரம்... இவன் வேஷத்தை கிழிக்கணும்... என்று தினம் தினம் அல்லாடி கொண்டிருந்தவளுக்கு  தனக்கு நன்கு பழக்கமான தன் தம்பியின் தோழி ஸ்ருதியிடம் புலம்பினால் சற்று தேவலாம் என்பது போல தோன்றியது....

ஸ்ருதியை தனியறைக்கு அழைத்து சென்றவள்...

“அந்த ஆர்யமனை என்ன சொன்ன? சி.டி.ஓ.ன்னா? அவர் எல்லாம் ஒரு சி. டி. ஓ.. பத்தி எரியுற வீட்டில் திருடனும்ன்னு யாருக்காவது தோணுமா? இவரை  மாதிரி பதவி ஆசை உள்ள ஆளுங்களுக்கு அப்படி மட்டும் தான் தோணும்... ”, என்றாள் வெறுப்பு மேலிட..

அவள் செயலும் பேச்சும் ஸ்ருதி சற்றே திகைக்க வைத்தது..

“ஏற்கனவே பலரும் பலவிதமா அவரைப் பத்தி சொல்றாங்க. குழம்பி போயிருக்கேன். இதில் நீங்க வேற இன்னும் குழப்புறீங்க சசிக்கா”

அலுத்துக் கொள்வது போல சொல்ல..

“நான் குழப்பலை ஸ்ருதி! உண்மையைச் சொல்றேன்!  ஒரு ப்ராஜெக்ட்டோட டெலிவரி மேனேஜராக இருந்த ஆர்யமன்.. இப்போ சி.டி.ஓ. ஆர்யா ஆனது ஒரு அப்பாவி பொண்ணோட வாழ்க்கையை நசுக்கி...” என்ற பொழுதே சசிக்கு அழுகை வரும் போல இருக்க....

அதிர்ந்த ஸ்ருதி,

“இந்த அளவுக்கு ஃபீல் பண்ண அந்த பொண்ணு உங்களுக்கு தெரிஞ்சவங்களா?”, என்று  யோசனையுடன் கேட்க...

“இல்லாமலா பின்ன... அவ என் ஃப்ரண்ட் அஞ்சனா!!! இப்போ மிசஸ் அஞ்சனா ஆர்யா!”, என்றாள் வருத்தத்துடன்...

“ஓ.... அவங்க நம்ம ஓனரோட கசின்னு கேள்வி பட்டேனே!”, என்று ஸ்ருதி யோசனையாக கேட்க...

அது உண்மை என்பது போல தலையசைத்த சசி...

“அதோடு மட்டும் இல்லை... அஞ்சு எப்பேர்பட்ட குடும்பத்தில் பிறந்தவ தெரியுமா? பார்ன் வித் சில்வர் ஸ்பூன்னு சொல்றதை விட... பார்ன் வித் டயமன்ட் ஸ்பூன்னே சொல்லலாம்!”

“பணம் இருக்கிற இடத்தில் குணம் இருக்காதுன்னு சொல்வாங்களே! அஞ்சுவை   பொறுத்தவரை அது சுத்த பொய்... அவ ஒரு பாச வலை! ஆனா, இப்போ இவன் விரிச்ச வலையில் சிக்கிக்கிட்டு ஏமாந்துகிட்டு இருக்கா!”,

தோழிக்காக வருந்திய சசி,  அவளை பற்றி சொல்ல ஆரம்பித்தாள்....

வம்பர் 5

தீபாவளி நன்னாளன்று காலை ஐந்தரை மணி...

மேற்கு தொடர்ச்சி மலையில்.. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத சிறிய ஊர் அது.

அதிகாலையில் எழும் பழக்கம் கொண்ட பவதாரணிக்கு அன்றும் விழிப்பு வர கண்களைத் திறந்தவர்...

தன்னைக் கழுத்தோடு கட்டிக் கொண்டு, காலை தன் மீது போட்டு கண்ணுறங்கும் மகளை பார்த்தவருக்கு கனிவு பொங்கியது.

இன்று தீபாவளி மட்டுமல்ல அவள் பிறந்த நாளும் கூட... இருபத்தியோரு வயதில் அடியெடுத்து வைத்தாலும்... அவள் இன்னும் அவருக்கு குழந்தை தான்! 

“கண்ணைப் பாரு கொள்ளை அழகு!  கண்மையே தேவையில்லை தாயி! அப்படியே பாட்டியோட கண்ணு தான் இவளுக்கு! பாட்டி அஞ்சனாட்சி பேரே  வைக்கலாம்!”, என்ற முப்பது நாள் குழந்தையான அஞ்சனாவின் பிஞ்சு முகத்தை ரசித்த படி பேசிய தன் தாத்தாவிடம்,

“போங்க தாத்தா! அஞ்சனாட்சி எல்லாம் அர்த்த கால பழசு... என் காலேஜ் ஃப்ரண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க... என் செல்லக்குட்டிக்கு அஞ்சனான்னு வேணும்னா பேர் வைங்க”,

பெயர் சூட்டும் விழாவில் தாத்தாவுக்கு கொடுத்த பொறுப்பில் இடை புகுந்து  தன் விருப்பத்தின் படி அவள் பெயரை வைத்த நினைவு மனதில் இன்னும் பசுமையாய் இருந்தது பவதாரிணிக்கு....

வருடங்கள் இத்தனை வேகமா ஓடுமா! அஞ்சனா வளர்ந்து விட்டாள்... திருமண வயதை நெருங்கி விட்டாள் என்பதை மூன்று மாதத்திற்கு முன் நடந்த தன் அண்ணன் மகன் திருமணத்தில் அவளை பெண் கேட்டு வந்த வரன்கள் அவரை  உணர வைத்தது!

நெடு நெடுவென வளர்ந்த ஒல்லியான தேகம் அவளது! எப்பொழுதும் பேன்ட், ஷர்ட் என்று ஆண்கள் உடுப்பையே விரும்பி அணிபவள் அன்று அந்த திருமணத்தில் முதல் முறையாக புடவையில் வலம் வர.... அனைவர் பார்வையும் இவள் மீதே இருக்க..

“என் ஆளு பக்கத்திலே ரொம்ப க்ளோஸ்ஸா நிக்காதே! ”, அஞ்சனாவை அழைத்து  ரகசியமாக சொன்னான்  மணமகனான அவள் மாமன் மகன் ஆதித்யா.

“ஏன் உங்க ஆளு டம்மியா தெரியுறாங்களா? என்னை கல்யாணம் பண்ணியிருந்தா இந்த கஷ்டம் வந்திருக்காதுல்ல”, பதிலுக்கு அவள் வார,

“ம்ம்ம்.... அதை செய்திருந்தா... ஒரேடியா கஷ்டமே பொண்டாட்டியா  வந்திருக்கும்! ”, என்று அவள் தலையில் தட்டி சிரித்தான் அவன்...

இப்படி பேச்சும், விளையாட்டும் என்று மேடையில் அவள் நின்று கொண்டிருக்க...

அவள் குடும்பத்தினரை சுற்றி வளைத்து வரன் பற்றி பேசிக் கொண்டிருந்தனர் அவள் உறவினர்கள்.

வீட்டின் ஒரே பெண் வாரிசு அஞ்சனாவிற்கு வீட்டோடு மாப்பிள்ளையாக தான் பார்க்க வேண்டும் என்பதில் பவதாரிணியின் அப்பா சொக்கர் மட்டுமல்ல... மொத்த குடும்பமுமே உறுதியாகவே இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.