(Reading time: 20 - 40 minutes)

ப்பொழுதுதான் நிம்மதியாய் மூச்சு வருகிறது நிலவினிக்கு. ஹப்பா…. தப்பிச்சேன்பா சாமி… மெல்ல மெல்ல தான் நிற்கும் கோலமும் செய்து கொண்டிருக்கும் வேலையும் கூட உறைக்கிறது அவளுக்கு…

யவ்வன் தாடையைப் பிடித்து அவன் கன்னத்தை அவன் கர்சீஃப்ஃபால் துடைத்த படி இவள்…..

அம்மாடியோவ்….. தூக்கி வாரிப் போட சட்டென அவனை விட்டு விலகினாள்….

உதடுக்குள் சிரித்தபடி அவளைப் பார்த்தபடி அவன்….

“அது….வந்து….இ இங்க…லிப்ஸ்டிக்….” தடுமாறிய நிலவினி….அழுத்தமா பேசலைனா இன்னும் தொக்காயிடும் நிலமை என அறிவு முனுமுனுப்பது காதில் விழவும்…

“இப்ப இங்க எதுக்கு வந்தீங்க? மேனர்ஸ் இல்லை…. மேல வந்து இடிச்சுகிட்டு…. வர்றப்ப முன்ன என்ன இருக்குன்னு பார்த்து வரமட்டீங்களா?”

‘சைட்ல இருந்து ஓடி வந்து படி ஏறுனவ நீ….நேர நடந்து வந்த அவனுக்கு அது எப்படி தெரியுமாம்?’ மனசாட்சி உள்ளே இருந்து மெல்ல முனங்கியது.

“அதான் சொன்னேனே….சொல்லிட்டு கிளம்ப வந்தேன்…. அதோட இப்பவும் உன் வகைல  இந்த வெட்டிங்கை நிறுத்த நீ என்ன செய்தாலும் என் சப்போர்ட் அதுக்கு உண்டு…..என்னாலதான் எனக்கு உன்னைப் பிடிக்கலைனு சொல்ல முடியாதுன்னு சொல்ல வந்தேன்….. “

அவன் குரல் அவன் உண்மையை உணர்ந்து சொல்கிறான் என காண்பிக்கிறது. அவன் உதட்டிற்குள் இருந்த அந்த சிரிப்பையும் காணவில்லை.

‘ஆக அவனுக்கு என்ன பிடிக்கலை போல…. என்னைப் போல கல்யாணம் வேண்டாம்னு சொல்ல பயப்படுறான் போல…. அதான் என்னையவே சொல்ல சொல்றான்…’ மனதிற்கு விஷயம் இப்படியாய் புரிய…உள்ளுக்குள் வலியும் சோர்வும்….’உனக்கு என்னை பிடிக்கலியா…?’ அடி மனம் கணக்கிறது. அவள் முகம் அதுவாக வாடுகிறது.

“உங்களுக்குத்தான்  என்னைப் பிடிக்கலையே அப்றம் எதுக்கு சம்மதம்னு சொல்லி தொலச்சீங்க?”

 மன வலியை கோபமாக மாற்றி அவனிடம் எரிந்து விழுந்தாள். அவள் முகத்தையே தானே பார்த்திருந்தான் அவனும்.

“புல் தடுக்கி பயில்வான்…. பொண்ணு பின்னால வந்து ஒளிஞ்சுகிட்டு…. இவருக்கு பிடிக்கலைனு சொல்ல முடியாதாம்…அதுக்கு பலி நானாம்….” உள்ளுக்குள் சுரு சுருவென ஏதோ ஏற புசு புசுவென்கிறது மூச்சு இவளுக்கு

“ஏய் “ என ஆரம்பித்தவன் பின் எதோ உணர்ந்தவனாய் ஒரு முழு நொடி அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து “உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வினி….” என்றான். ஒரு சிலீர் அமுத சுரப்பு அவள் உயிர் வரையிலுமாய்……

இப்படி ஒரு நிலையில் முன் நின்றிருக்கிறாளா என்ன ? என்ன செய்ய வேண்டும் என  எதுவும் புரியாமல் மொத்த கண்ணையும் திறந்து, நிமிர்ந்து அவன் முகத்தையே பார்த்தாள் நிலவினி. அவள் ஈரக் கண்களும் அதற்குள் தெரியும் அந்த தவிப்பும்….

“உனக்கும் என்னை பிடிச்சிருக்கு வினி…..” அவன் சொல்ல அவளுக்குள் அழுத்தமும் இறுக்கமுமாய் ஒரு ஆம் என முத்திரையிடுகிறது ஒரு  ஆழ்ந்த சந்தோஷ சாந்தம்.

“என்ன ப்ரச்சனைனு  என்ட்ட சொல்லு வினி…. கண்டிப்பா எல்லாத்தையும் தீர்த்து வைப்பேன்னு சொல்ல நான் கடவுள் கிடையாது…. ஆனா என்னால முடிஞ்ச அளவு சால்வ் பண்ண ட்ரை பண்றேன்….அதுக்கும் மிஞ்சினதை நான் உன்னை கண்டிப்பா தனியா ஃபேஸ் பண்ண விட மாட்டேன்…. இந்த மேரேஜை நடக்கவிடு…. நம்ம ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கப்ப…. ரெண்டு வீட்லயும் எல்லோருக்கும் பிடிச்சிருக்கப்ப……எதுக்கு தேவையில்லாம வேண்டாம்னு சொல்லி எல்லோரையும் கஷ்டபடுத்தனும்…..?”  அவனது குரலா அல்லது வார்த்தைகளா இல்லை இரண்டுமேயா…. அவளது மனதை எங்கோ எப்படியோ வருடுகிறது என்றால்…. இன்னொருபுறம் எரியும் எரிமலை குழம்பாய் கொதித்துக் கொண்டிருக்கும் ஒரு  ரணமான ரகசிய மன அறையில் தாகம் தீர்க்கும் தாய்மையுடன் தண்ணீர் நதி ப்ராவகம்.

அவன் சொல்வதுதான் சரி என முழுவதுமாய் தோன்றுகிறது….. ‘இந்த மேரேஜ் நடக்கட்டும்…’ இந்த நொடி வெட்கம் தயக்கம் கூட தோன்றவில்லை… அவளிருந்த மன நிலையில் அவனைப் போல மனம் திறந்து வாய் திறந்து சொல்லியே இருப்பாள் ‘இந்த மேரேஜ் நடக்கட்டும்’ என

அதே நேரம் இவள் காதில் விழுகிறது “நிலுக் குட்டிய பார்த்துட்டு போலாம்னு வந்தேன்…. வந்த பிறகுதான் விஷயம் தெரியுது…” சரோஜினி ஆன்டியின் குரல்.

அவ்வளவுதான் இவள் இதயம் தட தடக்க…. இடம் பொருள் ஏவல் புரிய… இயல்புக்கு வந்தாள் நிலவினி. மை காட் என்ன செய்துட்டு இருக்கேன்…. சட்டென அவன் முகத்திலிருந்து பார்வையை எடுத்துக் கொண்டாள் “சும்மா தேவையில்லாத கற்பனை…” சிடுசிடுத்தாள்.

“நீ தேவையில்லாம எதையோ போட்டு குழப்பிகிற வினி… பயப்படுற….” அவனோ குரலின் தன்மை மாற்றாமல் பேசினான்.

“ஆமாம் அப்படியே இவங்கெல்லாம் சிங்கம் புலி…..நாங்கல்லாம் பயந்தாங்கொள்ளி….இவங்களப் பார்த்து பயந்து நடு நடுங்கித்தான் போய் நிக்றோம்…… நானும் படிச்சிருக்கேன்…எங்கப்பா ஆஃபீஸ்லயே எனக்கு எவ்ளவோ ஆப்பர்சுனிட்டி இருக்குது…. என் வாழ்க்கைய என்னால பார்த்துக்க முடியும்…இதுல நான் எதுக்கு சார் கல்யாணம்ன்ற பேர்ல உங்கட்ட வந்து நிக்கனும்…? இதுல பயந்து  நடுங்குறேன்னு இப்பவே சர்டிஃபிகேட் வேற….” சீறினாள்.

அவனை நம்ப வைத்தே ஆக வேண்டும், அவளுக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என…. ஏனென்றால் அது தானே உண்மை…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.