(Reading time: 33 - 66 minutes)

"ஹாய் " -திவ்யா. இதற்குள் அவள் கைகள் சில்லிட்டு போய்விட, அவள் கரம் பற்றியிருந்தவனால் அதை உணர முடிந்தது. அவளை பார்த்து சிநேகமாக புன்னகைத்தவன் தன்னுடைய மற்றொரு கையால் மது அறியாவண்ணம் அவள் கைகளை அழுத்தி பின் விடுவித்தான். கண் விரிய அவன் செல்வதையே பார்த்து கொண்டிருந்தாள் திவ்யா.

அவனை பார்க்கும் முன்பு அவளிடம் இருந்த கொஞ்ச நஞ்ச திடமும் இப்போது காணாமல் போயின. அவனிடம் அவள் முழுதாக சரணடைந்தாள்.

சரணுக்கும் அவளின் கண்ணா சிவப்பும் கண்களின் தவிப்பும் அவன் மேல் அவளுக்கும் காதல் இருப்பதை சொல்ல காலையில் இருந்து ஓடி ஓடி கலைத்திருந்தவனுக்கு 1000 வாட்ஸ் பவர் வந்தது போல அந்த படிகளில் துள்ளி ஓடினான்.

மாலை சரியாக 6 மணிக்கு எல்லோரும் தயாராக கீழே வந்தனர். அவர்கள் வீட்டின் முன்பு இருந்த அந்த மிக பெரிய தோட்டத்தில் அழகான வேலைபாடுகளுடன் கேக் கட் செய்வதற்கும் உட்கார்ந்து டின்னெர் சாப்பிடவும் அழகாக மஜைகள் அலங்கரிக்கப்பட்டு அந்த இடமே மலர்களும் வண்ண விளக்குகளும் சூழ ஜொலித்தது.

இந்த விழாவின் கதாநாயகியான மது அடர்ந்த சிவப்பு நிறத்தில் சரிகைகளும் கற்களும் பதிக்கப்பட்ட பாவடையும் அதே போல டிசைனில் ப்ளவுசும் நார்த் இந்தியான் ஸ்டைலில் கட்டியிருந்த அழகிய சோளியுடன் அதற்க்கு பொருத்தமான நகைகளும் தலை அலங்காரமும் என அந்த மலர்களின் கூட்டத்தில் அன்று மலர்ந்த சிவப்பு ரோஜாவை போல பூத்திருந்தாள். அவளை போலவே மஞ்சளும் நீளமும் கலந்த பட்டுபுடவையில் ஜொலித்தாள் திவ்யா. சரணின் கண்கள் அவளையே சுற்ற அவளின் கண்கள் அவன் காணாதபோது அவனையே சுற்ற என அங்கே ஒரு அழகிய காதல் நாடகம் அரங்கேறிக்கொண்டிருந்தது.

விருந்தினர்கள் ஒவ்வொருவராக வர தொடங்க மதுவின் கண்கள் ஆர்வமுடன் ஒவ்வொருவர் முகத்தையும் பார்ப்பதும் பின் அவன் இல்லையென்று விரிந்த அவள் விழிகள் சுருங்குவதுமாக இருந்தது.

சிறிது நேரத்திலேயே கந்தசாமி, அவருடைய மனைவி என அவர்கள் குடும்பத்தில் அனைவரும் வந்து சேர்ந்தனர் மதியை தவிர. அவர்களை கண்ட மது ஆவலுடன் அவர்களின் அருகில் சென்றவள் கண்களாம் அவனை தேடினாள். அவர்கள் ஆர்வமுடன் அவளிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறினாலும் அவன் அங்கே இல்லை என்பதை அறிந்த அவளால் அவர்களுடன் மகிழ்ந்து உரையாட முடியாமல் மெதுவாக அவள் தாயின் அருகே வந்தவள்

"அம்மா பன்க்சன் ஸ்டார்ட் ஆக இன்னும் டைம் இருக்கு இல்லையா " என்க, "ஆமாண்டா ஏன் என்ன ஆச்சு முகம் டல்லா இருக்கே " என்று மங்களம் அவள் கன்னங்களை வருட, "ஒண்ணும் இல்லைமா லைட்டா தல வலிக்குது நான் ஒரு 2 மின்ஸ் ரூம்க்கு போயிட்டு வந்திடறேன்" என்று கூறி விட்டு உள்ளே சென்றாள்.

வீட்டின் உள்ளே யாரும் இல்லை. எல்லோரும் வெளிய இருக்க, இவள் மெதுவாக அங்கே இருந்த டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.

"ஏன் எனக்கு என்ன ஆச்சு , அவன் வரவில்லையென்று நான் ஏன் இப்படி இருக்கிறேன். இத்தனை நாளாக என்னை நானே ஒன்றும் இல்லை என்று ஏமாற்றி கொண்டிருந்தேனா ? அவனை காணப்போகிறேன் என்ற எண்ணத்தில் தான் இத்தனை நேரம் சந்தோசமாக இருந்தேனா. இப்போது பார்க்க முடியாது என்றவுடன் என் மனம் ஏன் இப்படி வருந்துகிறது என்று ஏதேதோ என்னிகொண்டிருந்தவளின் காதருகே "மேனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஒப் தி டே " என்ற குரல் கேட்கவும் அவள் வாடியிருந்த பூமுகம் மலர்ந்து விசுகசித்தது. கண்கள் மகிழ்ச்சியில் மின்ன சட்டென திரும்பி பார்த்தாள். கைகளில் பெரிய கிப்ட் பேக்குடன் மதி நின்றிருந்தான்.

அவளின் முகத்தில் இருந்த சந்தோசத்தையும் அவள் விழிகளின் மொழியையும் கண்டவன் இதோ இது தான் என் காதலை நான் அவளுக்கு உணர்த்தும் தருணம் என்று உணர்ந்தான்.

"நான் யாரென்று தெரிந்ததா? " -மதி

"ஹ்ம்ம்..ஆனா...இவ்வளவு வருஷத்துல.. நீங்க…என்னை... ஆனா ஏன்?" -மது அவனை நோக்கினாள் என்னை உன் மனதில் சுமந்தாயா என்ற கேள்வி அதில் ஒளிந்திருப்பதை தோன்ற, மெல்ல அவள் முன் ஒரு காலை மடித்து மண்டியிட்டவன், அவளிடம் அந்த கிப்ட்டையும் ஒரு செந்நிற ரோஜா பூங்கொத்தையும் கொடுத்தான். அந்த ரோஜாவிற்கு இணையாக சிவந்த அவள் கன்ன சிவப்பு அவனை கள்வெறி கொள்ள செய்தது. நீண்ட ஒரு மூச்சை இழுத்து விட்டவன் அவள் முகம் நோக்கினான். அவள் விழி விரித்து அவனையே பார்த்திருந்தாள்.

"மது உன் பிறந்தநாளில் நான் உன்னிடம் இருந்து எனக்கான ஒரு பரிசை பெற விரும்புகிறேன். என் மனதில் ஊஞ்சல் கட்டி ஆடும் அந்த தேவதையின் முன்னே இன்று ஒரு வரமாக கேட்கிறேன். என்னை நீ மணந்து கொள்வாயா? உனக்கு நான் வாக்களிக்கிறேன் என்னுடைய பிறவி முழுவதும் நான் உன்னை விரும்புவேன். உன்னை மட்டுமே காதலிப்பேன். நீ முதுமையை அடையும் போதும் உன்னை காதலிப்பேன். உன்னை காதலிக்கும் அந்த ஒரு வரம் வேண்டும் எனக்கு. ஏழேழு ஜன்மங்களிலும் நீதான் என்னுடைய மனைவியாக வர வேண்டும். இது தான் நம்முடைய முதல் ஜென்மம். இதில் உனக்கு சம்மதமா ?" மதுவின் வலக்கையை பற்றி மென்மையாக அவன் விரல்களை வருடியபடி அவளின் விழி நோக்கி கேட்டான் மதி.

சத்தியமாக இது போன்றதொரு நிகழ்வை எதிர்பார்க்கவில்லை மது. அவள் விழிகளிலும் காதல் பொங்கி வழிந்தது. ஆனால் மதிக்கு அவளின் வாய்மொழி தேவையாயிருந்தது.

"பெண்ணே உன் விழி எனும் கடலில் மூழ்கி முத்து குளிக்கிறேன். உன் விழி பேசும் பரிபாஷை புரியாமல் அல்ல. ஆனால் உன் குயில் போன்ற குரலால் ஒரு வார்த்தை சொல்லிவிடு" என்று அவன் கண்கள் அவளிடம் இறைஞ்சுவது அவளுக்கும் புரிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.