(Reading time: 19 - 37 minutes)

"தே கேள்விகளை நீயும் ஆயிரம் முறை கேட்டுட்டே நானும் ஆயிரம் முறை பதில் சொல்லிட்டேன். அவர் ஒரு முடிவு பண்ணுனா அதில் முழு மனதோடு தான் இறங்குவார். நிச்சயம் கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டார்னா அவர் மனைவியுடன் முழு மனதுடன் தான் வாழ்க்கையை தொடங்குவார். " - மது

"மது நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்கமாட்டைல " -பைரவி

"சொல்லு" -மது

"இவ்வளவு கஷ்டம் தேவையா. உன்னை நினைச்சு உன் பாமிலி மதி அண்ணா அவரை நினைச்சு அவருடைய பாமிலி  இப்படி இத்தனை பேர் கஷ்ட படும்போது நீ பேசாம உண்மையை எல்லாம் அவருகிட்ட சொல்லி அவரையே கல்யாணம் பண்ணிக்கலாமே ? " -பைரவி

நீயுமா என்பதை போல ஒரு பார்வை அவளை பார்த்தவள், "நான் அப்படி செய்தா மட்டும் எல்லோரும் சந்தோசப்படுவாங்களா ? சொல்லு பைரவி அப்படி எல்லோரும் சந்தோசப்படுவாங்கனா நான் இப்போவே அவரை கல்யாணம் பண்ணிக்கிறேன். கல்யாணம் அப்படிங்கறது நம்ம நாட்டை பொறுத்த வரை இரண்டு பேருக்கு நடப்பது இல்லையே. இது இரண்டு குடும்பங்களுக்கு இடையில் உருவாகிற பந்தம். எல்லோருக்கும் இந்த திருமணத்தை பத்தி அதன் எதிர்காலத்தை பற்றி கனவு இருக்கும். என்னால யாருடைய கனவும் சிதைய கூடாது. " என்றவளை பார்த்து

"மதி அண்ணா கனவை தவிர இல்லையா" என்ற பைரவியின் கேள்விக்கு பதில் சொல்ல தெரியவில்லை மதுவிற்கு.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்... 

அவள் மனதிற்கு நடந்ததையெல்லாம் மறந்து மதியை திருமணம் செய்வது அவ்வளவு எளிதாக இல்லை. நிச்சயம் தன்னை மறந்து வேறொரு பெண்ணை மணந்து கொள்வான் என்று நம்புகிறாள்.

"மது இத்தனை நாட்களில் நீ யாரையும் காதலிக்கலைனு அவரு கண்டுபிடிச்சிருக்க மாட்டாரா? எனக்கு என்னமோ அவருக்கு உன்னை பற்றிய எல்லா உண்மையும் தெரிந்திருக்கும்னு நெனைக்கிறேன். நீயா சொல்லணும்னு அவரு எதிர்பார்க்கிறாரோ என்னவோ " -பைரவி

"ஹேய் நீ என்னை குழப்பாமல் இரு. " என்ற மதுவை நோக்கி மர்ம புன்னகை புரிந்தால் பைரவி, பின்னே குழம்பிய குட்டையில் தானே மீன் பிடிக்க முடியும்.

தான் வந்த வேலை முடிந்தது என்று எண்ணிய பைரவி "சரி மது நான் கிளம்பறேன். இல்லைனா ஸ்டாப் ரூம்ல இருக்கற ஒவ்வொருத்தர் காதுல இருந்தும் வர புகையிலை நம்ம ஸ்கூல் புத்திக்கும் " என்று கூறிவிட்டு மதுவின் குழம்பிய முகத்தை சற்று திருப்தியோடு பார்த்து விட்டு கிளம்பினாள் பைரவி.

பைரவி சொன்னதை போல மதிக்கு என்னை பற்றி தெரிந்திருக்குமோ. என்னை பற்றிய உண்மை சரண், ரகு, திவ்யா முரளி அப்பறம் இந்த வாயாடி தவிர வேற யாருக்கும் தெரியாதே.  ஒரு வேளை அண்ணா சொல்லிருப்பாரோ. இல்லை நிச்சயம் சொல்ல மாட்டாங்க. இவங்க எல்லாருமே சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணிருக்காங்க. ஒரு வேளை நான் யாரையும் லவ் பண்ணலைன்னு தெரிஞ்சா நிச்சயம் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாரு. என்று பலவாறாக குழம்பியவள் இதுக்கு எல்லாம் ஒரே வழி முரளி தான் என்று முடிவு செய்து முரளியின் எண்ணை அழைத்தாள்.

தன் கன்னம் வருடி செல்லும் இந்த தென்றல் காற்றின் இனிமை என்றுமே மதுவிற்கு தெவிட்டியதில்லை. சென்னை வந்ததில் இருந்து மதுவின் மனதின் வருத்தங்களை அழுத்தங்களையும் மறக்கடிக்கும் சில மணி நேரங்கள் என்றால் அது எப்போதும் சென்னையில் இருந்து கோவை செல்லும் இந்த அதி காலை பயணங்கள் தான். இந்த ஒரு காரணத்திற்காகவே மது தன்னுடைய பயண நேரத்தை என்றுமே மாற்றி கொள்ள முயலவில்லை.

விடிகாலையில் குளிர் தென்றலும் வானில் மின்னும் விடிவெள்ளியின் அழகும் பின்னணியில் ஒலிக்கும் மெல்லிய பாடலும் மதுவின் மனதில் ஒரு இனம் புரியாத நெகிழ்வை உண்டாக்கி இருந்தது.

எத்தனை சுவை மிகுந்த இனிப்பாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அது திகட்டிவிடும். ஆனாலும் நம் வாழ்வில் திகட்டாத பல விஷயங்கள் உள்ளது.

தாயின் மடி

தந்தையின் அரவணைப்பு

உடன் பிறந்தோருடன் உண்டாகும் சின்ன சின்ன சண்டைகள்

பள்ளி பருவம்

கல்லூரி கொண்டாட்டம்

இதை போல மதுவின் இந்த பயணமும் என்றென்றும் அவளுக்கு திகட்டாதவை தான்.

இவளின் மனம் புரிந்தார் போல எந்த வித இடையூறும் இல்லாமல் காரை ஓட்டி செல்லும் கந்தசாமி தாத்தாவின் மீது எப்போதும் போல இப்போதும் மதுவின் மனதில் மரியாதை தோன்றியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.