(Reading time: 19 - 37 minutes)

"ம்மாடி உங்க அப்பா சொல்லிருப்பாரு எனக்கு சென்னைல கொஞ்சம் பிசினெஸ் இருக்கு. நாங்க ஒரு ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் நடத்திட்டு இருக்கோம். இதுவரைக்கும் அவங்கள வெளியில இருக்கற ஸ்கூல்ஸ்க்கு தான் அனுப்புனோம். ஆனா அங்கே அந்த குழந்தைகளுக்கு சரியான கவனிப்பு இல்லை. அதனால முரளி அந்த குழந்தைகளுக்கு நாமே ஒரு ஸ்கூல் தொடங்கலாம்னு இருக்கான். அதை பொறுப்பா பார்த்துக்க ஒரு ஆள் வேணும். இப்போதைக்கு வெறும் ஐந்தாம் வகுப்பு வரை தான். போக போக பெருசாக்கிக்கலாம். உன்னை பத்தி உங்கப்பா நெறைய சொல்லிருக்காரு. உனக்கு இந்த மாதிரி சேவை மனப்பான்மை இருக்குனு. நானும் முரளிக்கிட்ட இதெல்லாம் சொல்லிருந்தேன். முரளியும் நானும் என்ன நினைக்கிறோம்னா நீ அந்த பொறுப்புக்கு சரியா இருப்பெனு. உனக்கு சம்மதம்னா நான் அதுக்கான ஏற்பாடுகளை செய்வேன் " என்றவரை வியப்புடன் நோக்கினாள் மது. அவர்கள் இருவரும் அவளுடைய கண்ணுக்கு மிகவும் உயர்ந்தவர்களாக தெரிந்தனர்.

இந்த பள்ளியும் இதை கவனிக்கும் பொறுப்பும் இவர்கள் தனக்கெனவே உருவாக்கியுள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள இயலாத அளவுக்கு அவள் ஒன்றும் முட்டாளில்லையே. இது வரை தன்னை பார்க்க வந்தவர்கள் எல்லாம் பார்த்து நடை. பார்த்து உட்கார். பார்த்து பேசு என்றே சொல்லி சொல்லி தன்னுடைய மன தைரியத்தை முழுவது இழந்திருந்தவளுக்கு முதலில் இவர்களை பார்த்த போது இவர்கள் வேறா என்று தான் தோன்றியது. ஆனால் வந்ததில் இருந்து அவளின் உடல் நிலை குறித்தோ விபத்து குறித்தோ ஒரு வார்த்தை பேசவில்லை. அவளின் படிப்பு பொழுதுபோக்கு அவளுக்கு பிடித்தது என்று பல விஷயங்களை பேசி அவளையும் அவர்களின் பேச்சில் இணைய செய்து இயல்பாக இருக்க வைத்தார்கள் என்றால் இப்போதோ தன் மேல் நம்பிக்கை வைத்து எவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள் என்று தோன்றியது.

மெல்ல திரும்பி தன் தந்தையை நோக்கினாள். சம்மதம் சொல் என்பதாய் அவர் கண்களில் சொல்ல, அவளுக்கும் இந்த சூழ்நிலையை விட்டும் மதியை விட்டும் சற்று தூரம் தள்ளியிருப்பது நல்லது என்று தோன்றவே அவளும் ஒப்பு கொண்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்... 

அவள் சம்மதிக்க காத்திருந்ததை போல அடுத்து நிகழ்ந்தவை எல்லாம் கண்மூடி திறப்பதற்குள் நடந்தது. மங்களத்தை சமாதானம் செய்து வீட்டில் உள்ளவர்களிடம் பேசி என்று ஒற்றை ஆளாக நின்று எல்லாவற்றையும் செய்தார் சிவசண்முகம். மதுவை மருத்துவமனை அழைத்து சென்று சென்னையில் அவள் உண்ண வேண்டிய மருந்துகள் ரெகுலர் செக்க்கப்பிற்கு அவள் போக வேண்டிய மருத்துவமனை அதற்கான தலைமை மருத்துவரின் கடிதம் என்று அனைத்தையும் பம்பரமாக சுற்றி செய்து முடித்தார். இந்த வயதிலும் தனக்கென ஓடும் தன் தந்தையை எண்ணி மதுவின் மனம் நெகிழ்ச்சியுற்றது.

அந்த தந்தைக்கோ பட்டாம் பூச்சியென பாடி திரிந்த தன் செல்ல மகள் சிறகிழந்த பறவையாய் அறையிலேயே அடைந்து கிடப்பதும் தான் சென்று நோக்கும் போது வெளியே வெறித்த பார்வையுடன் தன்னை மறந்து அமர்ந்திருப்பதையும் கண்டவருக்கு பெங்களூரில் நடந்ததும் அதன் பின்னணியும் தெரிந்து கொள்வது முக்கியமாக படவில்லை. அவர் உணர்ந்ததெல்லாம் தன் மகளை ஏதோ ஒன்று அரித்து கொண்டிருக்கிறது, உடனடியாக அவளை அதிலிருந்து வெளிக்கொண்டு வரவில்லை என்றால் திரும்பவும் அவளை அவளாய் காண்பது இயலாது என்று தோன்றியது. ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் அவர் திணறிய போது தான் ஆபத்பாந்தவனாக அவருடைய நண்பர் விஸ்வநாதன் வந்தார். அவர் வந்த காரணம் வேறு. ஆனால் மதுவின் நிலையை அறிந்தவர் தன் மகனுடன் சேர்ந்து இப்படி ஒரு திட்டத்தை உருவாக்கி மதுவின் தந்தையின் மனதில் நம்பிக்கை ஊட்டினார்.

அதன் பின் உண்மையிலேயே மதுவிற்கு நேரம் ரெக்கை கட்டி பறந்தது என்று சொல்லலாம்.

அந்த இல்லம் அங்கிருந்த குழந்தைகள் என்று எல்லாமே மதுவின் மனதில் ஒரு நிலையான இதத்தை பிடித்தது. முதல் முதலில் அந்த இல்லத்திற்கு சென்ற போது பாலுக்காக ஆளும் குழந்தையை கையில் ஏந்தி கொண்டு அக்குழந்தை என்ன பாவம் செய்தது இப்படி ஒரு தண்டனை அதற்கு என்று அவள் அழுததும் அவளை சமாதானம் செய்து அங்கே அவளை ஒன்றை செய்ததும் முரளி தான். நிர்வாகத்தை குறித்து அவளுக்கு விளக்குவதும் அந்த பள்ளி அவளுடையது என்று உணர செய்வதும் என்று அவளுக்காக முரளி செய்த அனைத்தும் மதுவினால் ஏழேழு ஜென்மமும் மறக்க இயலாது. பள்ளி நட்பு ஒரு வகை கலோரி நட்பு ஒரு வகை என்றால் வாழ்வின் விளிம்பில் நிற்கும் போது நம் கைபிடித்து அதன் எதிர் திசையில் நம்மை அழைத்து செல்லும் ஒரு நண்பன் எல்லோர் வாழ்விலும் உண்டு. அப்படி ஒரு நண்பனாக மதுவின் வாழ்வில் வந்தவன் முரளி. அவள் வாயை திறந்தாள் முரளியின் பெயர் ஒரு நூறு முறையேனும் வரும். அந்த அளவுக்கு முரளியின் மேல் அளவு கடந்த நம்பிக்கை கொண்டவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.