(Reading time: 29 - 57 minutes)

பின் சடங்குகள் ஆரம்பித்தது... பிரணதி அண்ணன் அண்ணி சேரும் வரை நம்ம கல்யாணத்தை தள்ளி வைப்போம் என்று வரூனிடம் கேட்டுக் கொண்டதால்... அவனும் அவன் பெற்றோரிடம் அனுமதி வாங்கினான்... அதனால் கல்யாண தேதி முடிவு செய்யாமலேயே திருமண ஒப்பந்தம் ஐயர் மூலமாக வாசிக்கப்பட்டு... இருவரின் பெற்றோரும் தாம்புல தட்டை மாற்றிக் கொண்டார்கள்...

அதன்பின் வரூனும் பிரணதியும் மோதிரம் மாற்றிக் கொள்ள... புகுந்த வீட்டு சார்பாக சீராக எடுத்து வந்த நகையை பிரணதியிடம் வரூனின் பெற்றோர் கொடுத்தனர்..

சடங்குகளெல்லாம் முடிந்ததும்... தேவாவும் கவியும் வாங்கி வைத்திருந்த கேக்கை கட் பண்ண சொன்னார்கள்... பின் பெரியவர்கள் கொஞ்சம் ஒதுங்கியிருக்க சிறியவர்கள் சூழ்ந்திருக்க வரூனும் பிரணதியும் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொண்டனர்...

அதுவரையிலுமே பிருத்வியும் யுக்தாவும் ஏதோ கட்டுண்டது போல் ஒன்றாகவே நின்றுக் கொண்டிருந்தனர்... இருவருக்குமிடையே பார்வை பரிமாற்றங்கள் இல்லையென்றாலும்... பேசிக் கொள்ளவில்லையென்றாலும்... இருவருக்கும் விலகிச் செல்ல தோன்றாமல் அப்படியே நின்றுக் கொண்டிருந்தனர்... அவர்களை ஜோடியாக பார்த்த வரூனின் உறவினர்கள் கூட அவர்களின் ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்கு என்று பேசிக் கொண்டனர்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த சப்னாவிற்கு பொறாமையில் உடம்பெல்லாம் எரிந்தது... யுக்தா வீட்டை விட்டுப் போனதில் இருந்து பிருத்வியோடு திரும்பவும் நட்பாக முயற்சி செய்துக் கொண்டிருந்த அவளுக்கு... இந்த நிச்சயதார்த்தம் சாதகமாக இருந்தது... ஆனால் யுக்தா திரும்பி வந்த செய்தி இவள் அறியாதது... இவர்கள் ஜோடியாக நிற்பதை பார்த்தாலும் அத்தோடு அமைதியாக இருக்கவில்லை அவள்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்... 

நிகழ்ச்சி முடிந்து சாப்பாடு பந்தி நடக்க... சாப்பாடு பரிமாற ஆட்கள் இருந்தாலும் பிருத்வியும் தேவாவும் அந்த இடத்தில் இருந்து கவனித்துக் கொண்டார்கள்.... சப்னாவும் அங்கிருந்து பிருத்வியோடு பேச முயற்சித்தாள்... ஆனால் அவளை விட்டு அவன் விலகிப் போனான்...

வரூன், பிரணதியை வைத்து போட்டோகிராபர் போட்டோ எடுக்க... பிரணதியின் தோழிகள் அவளோடு இருந்ததால் கவியும் யுக்தாவும் சாவித்திரியோடு அமர்ந்துவிட்டனர்... சுஜாதா, செந்தில், மதி மற்றும் வரூனின் பெற்றோர் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தனர்...

அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த இரண்டு பெண்கள் தேவாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்க... அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கவி... அதை கவனித்த யுக்தாவோ சாவித்திரியிடம்...

"சாவிம்மா அங்கப் பாருங்களேன்... நம்ம தேவாக் கிட்ட அந்த பொண்ணுங்க அப்பப்போ பேசறத நான் கவனிச்சேன்... தேவா கருப்பா இருந்தாலும் பொண்ணுங்களுக்கு தேவாவை பிடிக்குதுல்ல..." என்றாள்.

அதற்கு சாவித்திரியோ... " நம்ம தேவா கருப்பா இருந்தாலும் கலையா இருப்பான்... அவனுக்கென்ன குறைச்சல்..." என்றாள்.

"ஆமாம் சாவிம்மா தேவாவை கல்யாணம் பண்ணிக்க எந்த பொண்ணுக்கு தான் பிடிக்காது..." என்றதும்...

"ம்ம் தேவாவை கட்டிக்க போற பொண்ணு கொடுத்து வச்சவ..." என்று சாவித்திரி சொல்ல... ஏனோ அதை கேட்கப் பிடிக்காமல் கவி பிரணதி இருக்கும் இடத்திற்கு சென்றாள்...

அதைப் பார்த்த யுக்தாவிற்கு ஒரு யோசனை தோன்ற... அவள் தேவாவை தேடிச் சென்றாள்...

"தேவா நீ ஏன் இன்னும் கவிக்கிட்ட லவ்வை சொல்ல மாட்டேங்குற... ஒருவேளை அவளா சொல்லனும்னு எதிர்பார்க்கிறியா" என்று கேட்டாள்...

"ஹே அப்படியில்ல... யார் முதல்ல சொன்னா என்ன..?? இவ்வளவு நாள் அவ காதலை மறைச்சுக்கிட்டு என்கிட்ட பேசனப்போ எனக்கு எதுவும் தெரியல... ஆனா இப்போ அவ பேசினாலே அதுல லவ் தெரியுது அதான் கொஞ்ச நாள் ரசிச்சிட்டு சொல்லலாம்னு இருக்கேன்.." என்றான்..

ஆனால் உண்மையிலேயே அவன் இப்போது சொல்லாமல் இருப்பது யுக்தாவின் பிரச்சனை சரி ஆகட்டும் என்று தான்... கவிக்கும் இப்போது தன் சகோதரியை நினைத்து கவலையாகத் தான் இருக்கும் என்பதால் தான் அமைதியாக இருக்கிறான்... இப்போதைக்கு இவர்கள் காதலில் தன் அன்னையை தவிர எந்தப் பிரச்சனையுமில்லை... தன் அன்னையிடம் இப்போது எனக்கு பெண் பார்க்க வேண்டாம் என்று சொன்னதால் தான் கவலையில்லாமல் இருக்கிறான்... அதனால் யுக்தாவும் பிருத்வியும் சேர்ந்ததும் தன் காதலை சங்கவியிடம் சொல்லலாம் என்று காத்திருக்கிறான்...

"தேவா கவியே அவ லவ்வ உன்கிட்ட சொல்ல எனக்கு ஒரு ஐடியா இருக்கு..." என்று கூறி அவனின் சிந்தனையை கலைத்தாள் யுக்தா...

"என்ன..??" என்று அவன் கேட்டதும்...

"தேவா உன்னை ஒரு பொண்ணு லவ் பண்றதாகவும் நீ அதுக்கு என்ன சொல்லலாம்னும் கவிக்கிட்ட ஐடியா கேளேன்... உடனே பொறாமை வந்து அவளே உன்கிட்ட லவ்வ சொன்னாலும் சொல்லிடுவாள்..." என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.