(Reading time: 25 - 49 minutes)

ருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்து, களைப்போடு சோபாவில் பொத்தென்று அமர்ந்தாள் சரயூ…

அவள் அமர்ந்ததும் அதுதான் சமயம் என்றெண்ணி அவளின் மடியில் வந்து விழுந்தாள் பிரேமிதா…

மகளின் தலையினை மெல்ல வருடி விட்டவள்,

“என்னடா செல்லம்?...” என்றாள்…

“ஏன்ம்மா இவ்வளவு நேரம்?...”

“அது ஒன்னுமில்லடா… அம்மா டாக்டரை பார்த்துட்டு வர லேட் ஆகிட்டு….”

“ம்… உனக்கு ஊசி எல்லாம் போட்டாங்களா?...” என விழிகளை உருட்டியபடி கேட்ட மகளின் கன்னத்தினைப் பிடித்துக்கொண்டு

“அதெல்லாம் இல்லடா… மாத்திரை மட்டும் தான் கொடுத்தாங்க….” என்று சொன்னதும்,

சரயூவின் இரண்டு கைகளிலும் தடவிப் பார்த்தாள் பிரேமிதா…

“என்னடா செய்யுற?...”

“இல்லம்மா உனக்கு டாக்டர் ஊசி போட்டுருப்பாங்க கண்டிப்பா… அதான் அது எந்த கையா இருக்கும்னு பார்க்குறேன்…”

“இல்லடா எனக்கு ஊசி போடலை…”

“நீ எனக்காக பொய் சொல்லுறம்மா… உண்மையாவே உனக்கு ஊசி போட்டாங்க தான?... வலிச்சதாம்மா?..” என விசும்பாத குறையாக கேட்ட மகளை அள்ளி அணைத்துக்கொண்டாள் சரயூ…

சற்று நேரம் கழித்து மகளிடம், “பூஜா எங்கடா?...” என்று வினவியதும்,

“அவ தாத்தா கூட கடைக்குப் போயிருக்காம்மா…” என்றாள் பிரேமிதா…

“ஓ சரிடா… உனக்கு அம்மா பிஸ்கெட் எடுத்துட்டு வரட்டா?.. பசிக்குதாம்மா?...”

“இல்லம்மா… விசாலம் பாட்டி பிஸ்கெட் எடுத்து கொடுத்தாங்க… நான் சாப்பிட்டேன்…”

“அப்படியா? அப்போ என் பிரேமி சாப்பிட்டாச்சா?...”

“ஆமாம்மா அஞ்சு பிஸ்கெட் சாப்பிட்டேன்….” என தன் ஐந்து விரல்களை காட்டி சிரித்த மகளை சந்தோஷத்துடன் அவள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே,

“விசாலம் பாட்டி நீ டாக்டரைப் பார்க்க போனப்பவே வந்துட்டாங்கம்மா… வந்ததும் உன்னை கேட்டாங்க… நான் நீ எங்க போயிருக்கேன்னு சொன்னேன்னா, அப்புறம் பாட்டி எங்கூட விளையாடுனாங்க… அப்புறம் எனக்கு பிஸ்கெட் கொடுத்தாங்க…” என்று நடந்ததை சொன்னாள் பிரேமிதா….

“சரிடா… நீ போய் விளையாடு…. அம்மா போய் வேலையைப் பார்க்குறேன்…”

“சரிம்மா…” என சொல்லிய பிரேமி அங்கிருந்து விளையாடச் சென்றதும், அவள் விசாலத்தை தேடிச் சென்றாள்…

காய் நறுக்கிக் கொண்டிருந்த விசாலம் இவள் வந்த அரவம் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தாள்…

“கூட்டு மட்டும் வைக்கணும்… சாம்பார், ரசம் எல்லாம் வச்சிட்டேன்… அப்பளமும் பொரிச்சிட்டேன்… சாதம் மட்டும் லேட்டா வடிச்சிக்கலாம்னு விட்டுட்டேன்… இப்ப கூட்டு வைச்சிட்டு சாதம் வச்சிடவா?...” என விசாலம் தான் முடித்த வேலைகளை சரயூவிடம் சொல்ல

“தேங்க்ஸ்….” என்றாள் சரயூ புன்னகையுடனே…

“எதுக்கு தேங்க்ஸ் சொல்லுற?...”

“பாப்பாவை யாரும் சொல்லாமலே அவ பாட்டி மாதிரி பார்த்துக்குறீங்களே அதுக்குத்தான்…”

“அது என் கடமை… இது எங்க பெரியம்மா குடும்பம்….” என சொல்லியவளின் கண்கள் தானாகவே கலங்கியது…

தன்னை சரயூ இமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பதை புரிந்து கொண்டு,

“நான் வந்ததும் பெரிய்ய்யா பூஜாவை வெளியே கூட்டிட்டு போறதாவும், குட்டி பாப்பாவை பார்த்துக்கன்னும் சொல்லிட்டு போனார்… நீ எங்கன்னு குட்டிப்பாப்பா கிட்ட கேட்டதுக்கு டாக்டர்கிட்ட போயிருக்குறதா சொன்னா…” என சொல்லி முடித்த விசாலம், சரயூவினை இப்போது பார்க்க,

“ம்ம்… ஆமா… போயிருந்தேன்… தலைவலியா இருந்துச்சு ரொம்ப…”

சரயூ பதில் கேட்டு ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்டவள்,

“ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடணும்… நீ சாப்பிடமாட்ட… அப்போ அது இதுன்னு வரதான் செய்யும்… வேலையும் உனக்கு பாதி நான் பார்த்து வைக்குறேன்… இருந்தும் நீ சாப்பிடுற வேலையை கூட செய்ய மாட்டிக்குற…” என சலிப்புடன் கூற,

சரயூ அவளிடம், “ம்ம்… சாப்பிட்டாலும் உடம்புல ஒட்டணுமே…” என்றாள் மெல்லிய குரலில்…

சரயூவின் வார்த்தையில் சட்டென நிமிர்ந்த விசாலம் அவளையே சற்று நேரம் பார்த்திருந்துவிட்டு

“டாக்டர் என்ன சொன்னாங்க?...” எனக் கேட்டாள்…

“பெருசா எதுவும் சொல்லலை… வழக்கம் போல தான்…”

சரயூவின் பதிலில் சிறிது நேரம் அமைதியாக இருந்த விசாலம், “சரி சாதம் மட்டும் தான் வைக்கணும்… நான் வச்சுக்குறேன்… நீ போய் ரெஸ்ட் எடு…”

“இல்ல இன்னைக்கு சமையல் முழுக்க நீங்க தான் செஞ்சிருக்கீங்க… அட்லீஸ்ட் இந்த சாதத்தையாவது நான் வைக்கிறேன்…” என அவள் அடுப்பை பற்ற வைக்க முயல, விசாலம் அவளை அதன் பின் தடுக்கவில்லை…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.