(Reading time: 25 - 49 minutes)

தியம் திலீப் வீட்டிற்கு வந்ததும், அவனுக்கு சாப்பாடு பரிமாறிவிட்டு, தானும் சாப்பிட்டுவிட்டு திலீப்பை தேடிச் சென்றாள்…

“என்னங்க….”

“……………….”

அவள் கூப்பிட கூப்பிட அவன் அமைதியாகவே இருந்தான்… பின் அவளிடம்,

“தலைவலி ஏன் அடிக்கடி வருதுன்னு கேட்டியா?...”

“எதையோ யோசிச்சிட்டே இருக்கேன்னு சொன்னாங்க… அதனால தான் தலை வலிக்குதுன்னும் சொன்னாங்க…”

“ஓ…” என்றவன் அதற்கும் மேல் எதையும் சொல்லவில்லை…. கேட்கவும் இல்லை..

ஏனென்றால் அவனுக்குத் தெரியுமே… அவள் தலைவலிக்குண்டான காரணம்….

அவளும் அதற்கு மேல் அதைப்பற்றி அவனிடம் சொல்லவில்லை… அவனிடம் தனக்கு ட்யூமர் இருப்பதை கூட மறைத்து தான் வைத்திருந்தாள்…. சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வானோ என்ற பயமே அவளை ஆட்டி படைத்தது…

அதனாலேயே அவன் பிசியாக இருக்கும் நேரம் பார்த்து செக்கப் செல்வதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தாள்…

ஆரம்பத்தில் தலைவலி என்று சாதாரணமாக விட்டு விட்டது, பின்னர் ஒருநாள் செக் செய்ததில் தான் தெரிந்தது ட்யூமர் என்று… ஆனாலும் அது அவளுக்கு தற்போது இருக்கும் பிரச்சினையை விட மிக மிக சிறியதாக அமைந்திருந்தது தான் அவளுக்கு கிடைத்த ஓரே ஒரு ஆறுதலான விஷயம்…

அதுவும் இப்போது 6 மாதமாக ரெகுலராக மாதத்திற்கு ஒருமுறை செக்கப்பிற்கு போய் வருகிறாள் அந்த பெண் மருத்துவரிடம்…

அந்த டாக்டரும் அவளிடம் திலீப்பை பற்றி விசாரிப்பாள் இந்த முறை வரவில்லையா என்று… ஆனால் அதற்கும், வேலை அது இது என பொய் சொல்லி சமாளித்துவிடுவாள் சரயூ…

கட்டிலில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தினை எடுத்து புரட்டிக்கொண்டிருந்தவன், சரயூ தன் பக்கத்தில் வந்து அமர்ந்தும் கண்டு கொள்ளாமல் இருந்தான்…

“திலீப்…”

இருவரும் தனிமையில் இருக்கும் வேளையில் அவள் அவனை அப்படித்தான் அழைப்பாள்…

“ம்ம்…”

“திலீப் என்னைப் பாருங்க…”

“சொல்லு…. கேட்டுட்டுதான் இருக்குறேன்…”

“ப்ளீஸ் திலீப்… என்னைப் பாருங்க…” என அவள் கெஞ்சியதும், அவன் அவளைப் பார்த்தான்…

“சொல்லு…” என்ற பாவனை அவன் முகத்தில் தெரிய,

“ஏன் எங்கிட்ட இப்போ எல்லாம் பேசவே மாட்டிக்குறீங்க?...”

“பேசிட்டுதான இருக்குறேன் இப்போ கூட…”

“இல்ல திலீப்… நீங்க முந்தி மாதிரி இல்ல…. எல்லாமே மாறிப்போச்சு…” என கணவனின் வலது கையை எடுத்து மெதுவாக அவள் தனது கைகளுக்குள் வைத்துக்கொள்ள,

“தானா மாறலை… மாற வச்சிட்ட நீன்னு சொல்லுறதா?... இல்ல விதி அது மேல பழி போடுறதா?.. இல்லை என்னை நானே திட்டிக்கவா?.. எனக்கு எதுவும் தெரியலை… ஆனா இனி மாறப்போற விஷயம் மட்டும் தான் என்னை மாத்தும்னு என் மனசும் நம்புது… என்னால அதை ஏமாத்த முடியலை… நீயும் ஏமாத்திராத…” என மனைவியின் கைகளை அவன் தனது இடக்கையால் பிடித்துக்கொள்ள, அவளது கரம் தானாகவே அவனது வலக்கையை விட்டது…

அவனுள் இருந்த அவளது கரமும் தானாகவே விலக முற்பட, அவள் சட்டென தனது கைகளை உருவிக்கொண்டாள்…

அவள் கைகள் விலகியதும், அவனது முகத்தில் ஒரு வித கோபம் குடிகொண்டது…

“எனக்கு தெரியும்… நீ இப்படித்தான் செய்வேன்னு… இதனால தான் உங்கிட்ட இருந்து விலகி போனேன்… என்னை நீ நிம்மதியாவே இருக்க விடமாட்ட… அது மட்டும் எனக்கு நல்லாவே தெரியுது….”

“இல்லங்க… நான் சொல்லுறதை கொஞ்சம் கேளுங்க…”

“யார் சொல்லுறதையும் இனி நான் கேட்க தயாரா இல்லை… என்னை கொஞ்சம் தனியா விடுங்க ப்ளீஸ்… ஏன் இப்படி ஆளாளுக்கு பேசி பேசி என்னை சாகடிக்குறீங்க…” என தன் தலையைப் பிடித்துக்கொண்டு அவன் குனிந்து கொள்ள,

மெல்ல அவனருகில் வந்து நின்றவள், அவன் தலையை வருடி, அவனது முகம் நிமிர்த்த, அவனது விழிகளில் நீர்…

“எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியலை சரயூ… நான் உன்னைக் கஷ்டப்படுத்துறேன்னு தெரியுது… ஆனா என்னால….. வேற……” என சொல்லக்கூட முடியாது தடுமாறியவனை, ஒரு குழந்தை போல் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள் அவள்…

அவள் நெஞ்சில் முகம் புதைத்து, அவளது முதுகை சுற்றி படர்ந்திருந்தது அவனது கரங்கள்…

“திலீப்… ப்ளீஸ்…..” என அவள் அவனை சமாதானப்படுத்த முனைந்துகொண்டிருக்கும்போது தன் கன்னங்களைத் தாண்டி வழிந்து கொண்டிருந்தது அவளது கண்ணீர்த்துளிகள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.