(Reading time: 25 - 49 minutes)

07. மார்பில் ஊறும் உயிரே!!! - மது

பாறைகளின் பாதையில் பூக்குவியல் நீ!!!

Marbil oorum uyire

"ம்மா டாடி எப்ப மா வருவாங்க"

பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு முடிந்ததும்  கிறிஸ்துமஸ் விடுமுறை ஆரம்பம் ஆகி விட்டபடியால் அபூர்வா வீட்டிலேயே தன் தங்கை நிலாவோடு  விளையாடிக்  கொண்டிருந்தாள்.

புதிய ஊர் பழகாத குளிர் என்பதால் ரத்னாவதியால்  வெளியில் எங்கும் குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியவில்லை.

"டாடி இன்னும் நாலஞ்சு நாள்ல வந்துருவாங்க அபி"

நிலா மெல்ல கைப்பிடித்து நிற்க தொடங்கி இருந்தாள். இன்னும் நடை பழகவில்லை... தங்கை நிற்க தொடங்கியதில் இருந்தே அபூர்வா அவளை நேரே நிற்க சொல்லி குழந்தை முன் தானும் நின்று ஒரு கையை சல்யூட் செய்வது போல வைத்து "ஜெய் ஹிந்த் சொல்லு ஜெய் ஹிந்த் சொல்லு" என்று நிலாவிற்குச் சொல்லிக் கொடுத்தாள்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரத்னாவதி மனதிற்குள் தன் கணவரை நினைத்து கர்வம் கொண்டார்.

"அம்மா ஆல்பம் எடுத்து குடுங்கம்மா" அபூர்வா அன்னையிடம் ஓடி வந்து அவர்கள் குடும்ப போட்டோ அடங்கிய ஆல்பத்தைக் கேட்கவும் தானும் அதை மீண்டும் பார்க்க ஆவல் கொள்ளவே அதை எடுத்து வந்தார்.

அபூர்வா அந்த ஆல்பத்தை எடுத்துக் கொண்டு நிலாவை அமர வைத்து அதில் இருக்கும் ஒவ்வொரு படமாய் காண்பித்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

அதில் இருந்த முதல் படத்தைப் பார்த்ததுமே ரத்னாவதிக்கு அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்...

ழு வருடங்களுக்கு முன் ரத்னாவதி மதுரை லேடி டோக் கல்லூரியில் காமர்ஸ் படித்துக் கொண்டிருந்தார். மதுரை மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் ஆசிரியராக பணி புரிந்து வந்தார் ரத்னாவதியின் தந்தை மணியன்.

உறவுகள் பல...ஒவ்வொரு உறவுக்கும் ஒவ்வொரு தனித்துவம் ஓர் சிறப்பம்சம் உண்டு.

அந்த வகையில் ஓர் ஆண் அவனது வாழ்வினிலே  சகலத்தையும் சமர்ப்பித்து அடியோடு பணிந்து பொக்கிஷமாய் தெய்வமாய் வழிபடும் ஓர் உறவு அவன் மகள்.

இரண்டு மகன்களுக்குப் பிறகு தவமிருந்து பிறந்த மகளுக்கு அச்சமயம் படித்துக் கொண்டிருந்த ஓர் சரித்திர நாவலின்  நாயகி பெயர் ரத்னாவதி என்றிருக்கவும் ரத்தினத்தைப் போன்றிருத்த குழந்தைக்கு அப்பெயரையே  சூட்டினார் மணியன்.

"வந்து வீட்டு வேலையிலே ஒத்தாசையா இருன்னு சொன்னா என்னவோ கவிதை எழுதறேன்னு திரியறா...எல்லாம் இவர் குடுக்குற இடம்...என்னத்த சொல்ல" மகளை குறை கூறும் ரத்னாவதியின் தாயார் கிராமத்திலே பிறந்து வளர்ந்தவர். பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற ஒரு வட்டத்தினுள் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடனே....மகன், மகள் என்று பிரித்துப் பார்க்காமல் அறிவுச் செல்வத்தைப் பிள்ளைகளுக்குச் சமமாய் வாரி வழங்கினார் ஆசிரியர் மணியன்.

பாரதியின் கவிதைகளை மிக அழகாக ரசித்துப் பாடி பொருள் சொல்லிக் கொடுத்து பாட வைப்பார் மணியன்.

பாரதி. அவன் வெறும் கவிஞனா...அந்தக் கலைவாணியே தமிழ் மேல் ஆசை கொண்டு மண்ணுலகில் அவதாரம் எடுத்தாளோ என்றே தோன்றும் படியான காவிய நாயகன்.

அன்பு, காதல், பாசம், தவிப்பு, பிரிவு, சோகம், தைரியம், வீரம்,ஆதங்கம், எழுச்சி, நாட்டுப்பற்று, எதுவென்றாலும் அந்த உணர்வுகளின் அனைத்து எல்லைகளையும் தொட வைத்து அதன் அடி ஆழத்திற்கு இழுத்துச் சென்று விடுபவன் பாரதி.

ஒரு முறை பாரதியின் சுவை அறிந்தபின் தேன் நாடும் வண்டாய் அவன் கவிதைகளை மொய்த்துக் கொண்டே இருப்பது திண்ணம்.

அப்படி பாரதியின் கவிதைகளில் தன்னையே தொலைத்து தனது அடையாளத்தை உருவாக்கி இருந்தார் ரத்னாவதி. முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்ட தன் மகள் இன்னும் பரந்து விரிந்த உலகினை அறிந்து கொள்ள வேண்டும் என்றே மதுரையின் தலை சிறந்த கல்லூரியில் சேர்த்து விட்டார் மணியன்.

கல்லூரியில் தமிழ் கட்டுரை, பேச்சு போட்டிகள் போன்றவற்றில் பங்கெடுத்து பரிசுகள் பெற்று தனித்துவமான பெண்ணாக விளங்கினார் ரத்னாவதி.

இறுதி ஆண்டு பரீட்சைகள் முடிவடைந்திருந்த சமயம். தங்களுடன் படித்த தோழி ஒருத்தியின் திருமணத்திற்கு கல்லூரித் தோழிகள் அனைவரும் சென்றிருந்தனர்.

ரத்னாவதி உடன் படித்த மற்ற தோழிகளுக்கும் திருமணதிற்கு வரன்  பார்த்துக் கொண்டிருந்தார்கள் அல்லது நிச்சயம் முடிந்திருந்த நிலை.

"ரத்னா. உனக்கு மாப்பிளை பார்க்க ஆரம்பிக்கலையா உங்க வீட்ல"

"இவளுக்கு அந்த பாரதியார் மறுபிறவி எடுத்து மாப்பிள்ளையா வந்தா தான் உண்டு" தோழிகள் ரத்னாவதியை வம்பிழுத்துக் கொண்டிருந்தனர்.

"எனக்குன்னு சில எதிர்ப்பார்ப்புகள் இருக்கு. பார்ப்போம்" ரத்னாவதி தோழிகளின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.