(Reading time: 25 - 49 minutes)

"டாடி மிஸ் வாச் யுயர் பாதர் கேத்தா...அபி மை பாதர் இச் வின் காமாந்தர், ஜெய் ஹிந்த் சொன்னா... அல்லாம் கிளாப் பண்ணா" இரண்டரை வயதிலேயே பள்ளி சென்ற மழலை தந்தையின் பெருமை பாடினாள்.

பூர்வா மூன்று வயது குழந்தையாக இருக்கும் போது ரத்னாவதி மீண்டும் கருவுற்றார். அச்சமயம் விஜயகுமாருக்கு சென்னை தாம்பரம் ஏர் போர்ஸ் ஸ்டேஷனில் பணி. அடிக்கடி கடலோர எல்லை பாதுகாப்பு பணி நிமித்தமும் அந்தமான் தீவுகளுக்கு ரோந்து பணி நிமித்தமும் பல நாட்கள் குடும்பத்தைப் பிரிந்திருக்கும் நிலை ஏற்பட்டது.

"பூக்குட்டி.. டாடி நம்ம நாட்டை பத்திரமா பாத்துக்க போய்ட்டு சீக்கிரம் வந்திருவேனாம். நீ அம்மாவையும் பாப்பாவையும் பத்திரமா பாத்துக்குவியாம்" மூன்றரை வயது மகளிடம் தன் பணியைப் பற்றி சொன்னதும் இல்லாமல் அவளது பொறுப்பினையும் உணர்த்தி விட்டிருந்தார் விஜயகுமார்.

"நான் அம்மாவையும் நிலா பாப்பாவையும் பத்திரமா பாத்துக்குவேன்" தனக்கு அந்த வானத்து நிலவைப் போல அழகான தங்கச்சி பாப்பா வேண்டும் என்று அபூர்வா மிகுந்த ஆசை கொண்டிருந்தாள். தங்கை பிறக்க இருக்கிறாள் என்று விஜயகுமார் மகளுக்கு சொல்லி வைத்திருந்தது தான் அவளது ஆர்வத்திற்கு காரணம்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"என் வீட்டில் மூன்று தேவிகளும் இருக்க வேண்டாமா...கலைமகளா நீ இருக்க... சக்தி ஸ்வரூபமா பூக்குட்டி இருக்கா...இப்போ அந்த மஹாலக்ஷ்மி எனக்கு மகளா வந்து பிறப்பா" தனக்கு அடுத்த குழந்தையும் மகள் வேண்டுமென்று கணவன் விரும்ப தான் பெண் என்றே பிறந்ததற்குப் பெருமை கொண்டார் ரத்னாவதி.

இருப்பினும் சிறு குழந்தையிடம் தங்கை தங்கை என்று சொல்லிவிட்டு ஒரு வேளை தம்பி பிறந்தால்...சந்தேகமாய் கணவனை கேட்டார் ரத்னாவதி.

"ரதி...நம்ம அபி பொறுப்பான அக்காவா இருப்பா. அந்தக் கவலை வேண்டாம். நாம இருக்க சொசைட்டியில் இன்னமும் ரெண்டு பெண் குழந்தைகள் இருந்தா ரெண்டும் பொண்ணா போச்சா!!! பையன் இல்லையான்னு கேக்குற நிலைமை. நாளைக்கே நாம ஊர் பக்கம் போனா சொந்தம் முழுக்க இதுவும் பொண்ணான்னு கேக்கும். அபி மனசுல அவளோட தங்கச்சி பாப்பான்னா உயர்வு சிறப்புன்னு பதிஞ்சு இருக்கணும்.மத்தவங்க சொல்றது அவ மனசுல பதிஞ்சு போய்ட கூடாது.  தம்பி பிறந்தா ஊரே கொண்டாடும் போது குழந்தையும் கொண்டாட ஆரம்பிச்சிருவா. என்னால சமூகத்தைப் போய் மாத்த முடியாது, ஆனா என் வீட்ல என்ன செய்யணுமோ அதை செய்ய முடியும்"

தன் கணவரை எண்ணி மிகுந்த பெருமிதம் கொண்டார் ரத்னாவதி. தந்தையால் மிகவும் சீராட்டலுடன் வளர்க்கப்படும் பெண் குழந்தைகளுக்குத் தங்கள் தந்தையே உலகத்தில் சிறந்த ஆண் மகனாக தோன்றுவார். திருமணம் முடிந்து கணவரின் அளவில்லா அன்பு கிடைக்கப் பெற்றாலும் தந்தையோடான ஒப்பிடுதல் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருக்கும். முதலில் ரத்னாவதி அப்படி ஓர் ஒப்பிடுதலை கொண்டிருந்தார் தான்.

"உன்னோட பெயருக்குப் பின்னாடி இனிஷியல் மாத்த வேண்டாம் ரதி. கல்யாணம் ஆகிட்டா நீ உன் அப்பாவோட பொண்ணு இல்லைன்னு ஆகிருமா"

திருமணம் ஆன புதிதில் கணவரிடம் தன் தந்தையின் சாயலைக் கண்டு மகிழ்ந்தார். ஒரு நல்ல கணவராக ரத்னாவதி மனதில் ஏற்கனவே இடம் பிடித்திருந்தவர் இன்று தன் குழந்தைகளின் நுண்ணுவர்களையும் யோசித்து அதன் படி அவர்களை நல்வழிப்படுத்தும் விதம் கண்டு மிகச் சிறந்த தந்தையாக உயர்ந்து நின்றார்.

என் குழந்தைகள் மிக பாக்கியசாலிகள் இப்படி ஓர் தந்தை கிடைக்க என்று அந்தத் தாய் மனம் பூரித்தது.

விஜயகுமார் ஆசைப்பட்டது போலவே நிலா பிறக்கவும் அந்த குடும்பத்தில் ஆனந்தத்திற்கு குறைவில்லாமல் பொங்கி நிறைந்தது.

"என்னால அபிக்கு குடுத்த சமயம் போல நிலாக்குக் கொடுக்க முடியல ரதி" விஜயகுமார் பணி நிமித்தம் குடும்பத்தைப் பிரிந்திருக்கும் சமயங்களில் கவலை கொள்வதுண்டு. 

இதை எல்லாம் நினைத்து பார்த்த ரத்னாவதி "உங்க இடத்தை நம்ம அபி நிரப்பிட்டு இருக்கா. நீங்க அவளுக்கு சொல்லிக் கொடுத்ததை எல்லாம் அவ நிலாக்கு சொல்லி குடுத்துட்டு இருக்கா" என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார்.

ரியாக ஆங்கிலப் புத்தாண்டிற்கு முதல் நாள் வீட்டிற்கு வந்து சேர்ந்தார் விஜயகுமார்.

"டாடி" தந்தையிடம் ஓடிச் சென்று அவரை அணைத்துக் கொண்டாள் அபூர்வா.

அவளுக்குத் தன் தந்தையிடம் நிறைய கதை சொல்ல வேண்டி இருந்தது..

ஒரு தோளில் அபியை தூக்கிக் கொண்டு  இன்னொரு கையினில் நிலாவை ஏந்திக் கொண்டார் விஜயகுமார்.

"உலகத்துலேயே மிக அதிர்ஷ்டசாலி நான் தான்" மனைவியிடம் பெருமையாக கூறினார்.

"நீங்க டயர்டா இருப்பீங்க. வாங்க ரெஸ்ட் எடுங்க.. நாளைக்கு காலையில் சீக்கிரம் எழுந்து கோயிலுக்குப் போகணும்" ரத்னாவதி குழந்தைகளை அவரிடம் இருந்து இறக்கி விட்டு சொல்லவும்

"ஏன் டாடி நாளைக்கு கோயிலுக்கு போகணும்" அபூர்வா தந்தையிடம் கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.