(Reading time: 25 - 49 minutes)

வீட்டிற்கு சென்றதுமே தன் தந்தையிடம் நடந்ததைத் தெரிவித்து விட்டிருந்தார் ரத்னா. மணியனை தனிமையில் விஜயகுமார் முதலில் சந்தித்து அவரது விருப்பத்தை தெரிவிக்க மணியனும் சம்மதித்தார்.

"என்னைப் பற்றி பரிபூரணமாக விசாரித்து தெரிந்து கொள்ளுங்க" விஜயகுமார் மணியனிடம் சொன்னார்.

"அந்த காலத்தில் நாட்டின் அரசன் தேசத்தின் காவலனாக இருந்தான். இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று மக்களாட்சி கொண்டாடும் போது ஒவ்வொரு குடிமகனும் தேசத்தின் காவலனாக இருக்க வேண்டும். அந்த வகையில் நீங்க விருப்பமுடன்  நாட்டைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர். என் மகளையும் போற்றி காத்து நிற்பீங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு மாப்பிள்ளை. உங்க வீட்ல சொல்லி சம்மதம் கேட்டு நல்ல நாளா பார்த்து நிச்சயம் பண்ண வர சொல்லுங்க"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

ரு சுபயோக தினத்தில் ரத்னாவதி விஜயகுமார் திருமணம் எளிமையாக நடைபெற்றது. திருமணத்திற்கு என மணியன் செய்ய முற்பட்ட எந்த சீர் வரிசையையும் விஜயகுமார் ஏற்றுக் கொள்ளவில்லை.

"மாமா உண்மையில் உங்க மகளுக்கு சீதனம் கொடுக்கணும்னு நீங்க நினைத்தால் அதோ அங்க பத்திரமா பாதுகாத்து வச்சிருக்கீங்களே தமிழ் புத்தகங்கள் அதைக் கொடுங்க. அந்த சீர் தான் எங்கள் வாழ்க்கைக்கு வழி காட்டுதலா அமையும். உங்கள் மகள் விரும்பும் சீரும் அதுவா தான் இருக்கும்" விஜயகுமார் இதைச் சொல்லவும் ரத்னாவதி பூரித்துப் போனார்.

திருமணம் முடிந்ததும் விஜயகுமார் தனது பணிக்கு திரும்ப வேண்டியிருந்தது. அச்சமயம் பதான்கோட் விமானப் படை தளத்தில் பணியில் இருந்தார்.

"நான் உங்க வீட்லேயே இருக்கேனே" ரத்னாவதி சொல்லவும்

"இல்ல ரதி. சென்னையில் என் பிரண்ட் ஆபீஸ் இருக்கு. அக்கவுண்ட்ஸ் செக்ஷன்ல ஒரு ஜூனியர் போஸ்ட் காலியா இருக்குன்னு சொன்னான். அவன்கிட்ட பேசிட்டேன். நீ அங்க போய் தங்கி வேலை பாரு. உன் சொந்த காலில் நிற்க பழகிக்கோ. நீ படித்த படிப்பும் வீணாகக் கூடாது. உனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள். "

"டாக்டரோட மனைவி, ஜட்ஜ் மனைவி, கலெக்டரோட  மனைவின்னு கணவனைச் சார்ந்த அடையாளம் இல்லாம தானே ஒரு டாக்டரா, ஜட்ஜா, கலெக்டரா ஒரு பொண்ணு சுய அடையாளத்தோடு இருக்க வேண்டும்" தன் தோழிகளிடம் ரத்னாவதி எப்போதும்  சொல்வதுண்டு.

"அப்படினா குடும்பத் தலைவியா இருந்தா பெண்ணுக்கு சுய அடையாளம் இல்லையா உன்னோட கருத்து படி"

"குடும்பத் தலைவி ஒரு பெண்ணுக்கு மிகச் சிறந்த அடையாளம் அங்கீகாரம். ஆனால் குடும்பத்தில் அந்தப் பெண்ணின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் இருக்கணும். முக்கியமான முடிவுகளில் அவள் பங்களிப்பு இருக்கணும்.  குடும்பத் தலைவியா தன்னோட கடமைகளை பூர்த்தி செய்தது போக பெண்ணுக்குத் தன் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்பு இருக்கணும். விருப்பமான லட்சியங்களை அடைய வழி இருக்கணும்"

"இப்படி எல்லாம் லட்சியம் அடையாளம்னு கனவு தான் காணலாம். யாரும் அதுக்கு சப்போர்ட் எல்லாம் பண்ண மாட்டாங்க"

"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. மொதல்ல நமக்குள்ள பொறி இருக்கணும். மற்றது தானே அமையும்" தன் தோழிகளிடம் ரத்னாவதி சொல்லிவிட்டாலும் வரப் போகும் துணையைப் பற்றிய  கலக்கம் மனதில் இருக்கத் தான் செய்தது.

இன்று விஜயகுமார் தன் துணைவியின் கனவுகளுக்கு லட்சியங்களுக்கு அவள் கேட்காமலேயே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது ரத்னாவதியின் மனதில் கணவன் பால் காதலையும் மதிப்பையும் பன் மடங்கு பெருக்கி விட்டிருந்தது.  தான் விஜயகுமாரின் மனைவி என்று சொல்லிக் கொள்வதைப் பெருமையாக எண்ணினார்.

ஒரு வருடம் சென்னையில் ஒரு ஹாஸ்டலில் தங்கி வேலை செய்து கொண்டிருந்தார் ரத்னாவதி. பின்னர் விஜயகுமாருக்கு எலஹங்கா (பெங்களூரு ) ஏர் போர்ஸ் ட்ரைனிங் அகடெமியில் பணி உயர்வுடன் கூடிய மாற்றம் கிடைத்ததும் வேலையை விடுத்து அங்கு குடி ஏறினர்.

"ன்னங்க நீங்க யாராச்சும் பார்த்தா என்னை நினைப்பாங்க"

"யார் இருக்கா இங்க. அப்படியே பார்த்தாலும் என்ன இப்போ. என் பொண்டாட்டிக்கு நான் இதுவும் செய்வேன் இன்னமும் செய்வேன் " மனைவியை சேரில் அமர வைத்து அவரது நீண்ட கூந்தலுக்கு எண்ணை தடவி சிக்கெடுத்து கொண்டிருந்தார் அந்த விமானப் படை தளபதி.

தங்கள் அன்பின் காதலின் அடையாளமாக ஏழு மாதக் குழந்தையைக் கருவில் சுமந்து கொண்டிருந்தார் ரத்னாவதி.

குழந்தை உண்டாகியது அறிந்ததுமே விஜயகுமார் தரையில் நிற்கும் நேரத்திலும் ஆகாயத்தில் பறந்து கொண்டே தான் இருந்தார்.

அவரது பணி இலகுவாக இருக்கவே மனைவியுடனும் கருவில் உருவாகிக் கொண்டிருக்கும் குழந்தையுடனும் அதிக நேரம் செலவழிக்க முடிந்திருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.