(Reading time: 25 - 49 minutes)

திருமணம் முடிந்து மண்டபம் ஓரளவு காலியான நிலையில் இறுதி பந்தியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என தோழிகள் அனைவரும் ஒன்று கூடி அரட்டைக் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தனர்.

"அப்படி என்ன எதிர்பார்ப்பு. நாங்களும் தெரிஞ்சுக்குறோமே"

"என் சுய அடையாளத்தை இழக்க வேண்டிய நிர்பந்தம் இல்லாத பந்தமாக இருக்கணும்"

"கல்யாணம்னா அட்ஜஸ்ட்மெண்ட்ஸ் இருக்க தான் செய்யும்"

"அனுசரித்து வாழ்வது வேறு, தன்னை தொலைத்து வாழ்வது வேறு...இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு"

இப்படியாக ரத்னாவதிக்கும் அவரது தோழிகளுக்கும் இடையே விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் "நீ என்னென்னவோ சொல்ற எங்களுக்கு ஒன்னும் புரியல" தோழிகள் சொல்ல

"ஆனா எனக்கு நல்லா  புரிஞ்சிருச்சுன்னு நினைக்கிறேன்" திடீரென பின்னால் இருந்து ஆளுமை நிறைந்த கம்பீர  குரல் ஒன்று கேட்கவும் பெண்கள் அனைவரும் திகைத்து போய் யாரது என பார்த்தனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

ம்பீரமான நிமிர்வுடன் முழுக்கை சட்டை வெள்ளை பட்டு வேட்டியில் ஆணழகனாய் நின்று கொண்டிருந்தவரின் விழிகள் ஸ்நேகமாய் சிரித்தன.

"ஐ ஆம் விஜயகுமார். பிளைட் லெப்டினன்ட். இந்தியன் ஏர் போர்ஸ்" அங்கிருந்த பெண்களுக்குத் தனது அறிமுகம் சொன்னாலும் அவரது பார்வை முழுதும் ரத்னாவதியிடமே இருந்தது.

தான் ராணுவ வீரன் என்று விஜயகுமார் சொன்னதுமே ரத்னாவதியின் கண்களில் மின்னல் பளிச்சிட அதைக் கண்டு கொண்ட விஜயகுமார் மனதிலும் கோடைச் சாரல்.

அதற்குள் விஜயகுமாரின்  நண்பர்கள் அங்கு வரவே நண்பனின் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் என்று அனைவரும் தெரிந்து கொண்டனர்.

ரத்னாவதியும் அவர் தோழிகளும் பேசிக் கொண்டிருந்ததை அருகில் நண்பர்களோடு அமர்ந்திருந்த விஜயகுமார் தற்செயலாக கேட்க நேர்ந்தது. ரத்னாவின் தெளிவான தீர்க்கமான பேச்சினில் ஈர்க்கப்பட்டு சிந்தனைக்குச் சொந்தக்காரியைப் பார்க்கும் ஆவலில் தானே முன்வந்து அறிமுகம் செய்து கொண்டார்.

சற்று நேரம் பொதுவாக பேசிவிட்டு ஆண்கள் விடை பெற்றனர்.

திருமண மண்டபத்தில் இருந்து அனைவரும் கிளம்பும் நேரம் ரத்னாவதியின் கண்கள் மண்டபத்திற்குள் யாரையோ தேட தேடலின் நாயகனோ இரு கைகளையும் மார்பிற்கு குறுக்கே கட்டி ரத்னாவதியின் முன் புன்னகையோடு நின்று கொண்டிருந்தார்.

"நேரடியாகவே சொல்லிடறேன். எனக்கு உங்கள பிடிச்சிருக்கு. உங்க சிந்தனை பிடிச்சிருக்கு. ஒரு நண்பனா இப்போதைக்கு என்னை ஏத்துக்கோங்க. என்னைப் பற்றி தெரிஞ்சு உங்களுக்கும் பிடிச்சிருந்தா மேற்கொண்டு முடிவு செய்யலாம்"  இப்படி நேரடி தாக்குதலை ரத்னாவதி சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தான்.

தைரியம் அதே சமயம் நேரடியான கண்ணியமான அணுகுமுறை  ரத்னாவதியைக் கவரவே சரி என்று தலையாட்டினார்.

மீனாட்சி அம்மன் கோவில் தெப்பக்குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து தனது கனவுகளைப் பற்றி இருவரும் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

"நான் ராணுவத்தில் சேர போறேன்னு சொன்னதும் என் வீட்டில் ரொம்பவே எதிர்ப்பு. அதை மீறித் தான் என் இலட்சியத்தை நான் அடைஞ்சேன்" விஜயகுமார் சொல்லிக் கொண்டிருந்தார்.

"பொதுவா ராணுவத்தில் சேருவதுன்னா பெருமையா தானே நினைப்பாங்க"

"என் உயிருக்கு உத்திரவாதம் இல்லை அப்படின்னு அம்மாக்கு கவலை. அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு தெரியாத இந்த வாழ்க்கையில தாய் நாட்டுக்காக உயிரை கொடுக்கும் சந்தர்ப்பம் கிடைப்பது பாக்கியம்னு அவங்களுக்கு புரியலை"

"அப்பாவோ பெண் எடுக்கும் இடத்தில ராணுவத்தில் இருக்கேன்னு சொன்னா யோசிப்பாங்க. நீ இஞ்சினியரிங் படிச்சதுக்கு நல்ல வேலையில சேராம எதுக்கு வீணா மிலிட்டிரில சேர்ந்திருக்கன்னு ஒரு படி மேல போயிடுவார்"

"நீங்க இஞ்சினியரா”

"ஆமா மெக்கானிக்கல் இஞ்சினியரிங் முடிச்சேன். காலேஜில் என்.சி.சி கேம்ப் போன போதே முடிவு பண்ணிட்டேன். என் லட்சியம் ராணுவம்னு"

"எனக்கு ராணுவ வீரர்னா சின்ன வயதில் இருந்தே ரொம்ப பிடிக்கும்" ரத்னாவதி இயல்பாய் சொல்லிவிட

"அப்போ என்னை பிடிச்சிருக்கா" விஜயகுமார் ஆழ்ந்த குரலில் கேட்கவும் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட பாவை சம்மதமாய் இமையைத் தரை நோக்கி தாழ்த்தி அந்த ராணுவ வீரனுக்கு தனது மரியாதையையும் சம்மதத்தையும் ஒரு சேர தெரிவித்தார்.

"ரதி. உன் வீட்டிலே ஒரு ராணுவ வீரனை ஏத்துப்பாங்களா"

"அப்பா ரொம்ப சந்தோஷப் படுவார். நீங்க வந்து பேசுங்க" விஜயகுமார் ‘ரதி’ என்று பெயரை சுருக்கிக் கூப்பிடவும் ரத்னாவதியின் கன்னங்களில் செம்பருத்திகள் பூத்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.