(Reading time: 34 - 67 minutes)

வ் அதிகாரியிடம் பொன்னிவச்சானின் குடும்ப விவரங்களை குறிப்பிட்டு அவனது குடும்ப நிலம் இப்போது விற்கப்பட்டிருப்பதாக அவன் குறிப்பிட்ட நபர் பற்றியும் தெரிவித்து….. அந்த நிலவிற்பனை கிரைய ஆவணத்தை தேடி தருமாறு கேட்டான் பாண்டிய பராக்கிரமன்.

“ பொன்னிவச்சனாருக்கோ அல்லது  அந் நிலத்தை வாங்கியதாக தாங்கள் தெரிவிக்கும் அந்த செங்கையனுக்கோ அல்லாமல், அந்நிலத்தின் உரிமைக்கு சற்றும் சம்பந்தமில்லாத அயலாரிடம் அந் நில ஆவணத்தை காட்சிக்கு கொடுக்க எங்களுக்கு அதிகாரமில்லை” என்ற எதிர்மறை பதில் கிடைத்தது ஆவணகளரி அதிகாரியிடமிருந்து.

சிறு முறுவலுடன் தற்போது தன் முத்திரை மோதிரத்தை எடுத்துக் காட்டினான் மானகவசன்….. “பாண்டிய அரசவையிலிருந்து வருகிறேன்” என தன்னை அறிமுகமும் செய்து கொண்டான்.

இச் செயல்களின் மூலம் பராக்கிரமன் அந்த ஆவணகளரி செயல்பாடுகள் நியாயமாய் நடைபெறுகிறதா என்பதை பரிசோதிக்கிறான் என்பது ருயம்மாதேவிக்கு புரிய…. ‘அதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறார் போலும் இவர்’ என்று நினைகின்றாள் அவள்.…….

‘காலத்தை சற்றும் விரயமாக்கமல் எப்பொழுதும் நாட்டு நிர்வாகத்தை குறித்தே அக்கறைபடுகிறார்….’ என தன்னவன் குறித்த ஒரு சிலாகித்த நினைவும், ‘ஆனாலும் அந்த மஞ்சிகை விஷயத்தில் இவரது முடிவு நிச்சயமாய் தவறுதான்’ என்று அதற்கு எதிராக ஒரு சின சிந்தனையும் ஒருங்கே எழுகிறது இவள் அகமதில்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

இவ்வாறு காதலும் ஊடலும் இவள் மனதிற்குள் மாறி மாறி மோதிக் கொள்ள வெகு நேர அவகாசமெல்லாம் கொடுக்காது சிறிது நேரத்திலேயே இவர்கள் முன்பாக எடுத்து விரிக்கப்படுகின்றன அந்த குறிப்பிட்ட ஆவண சுருள்கள்…..

சற்று நேரம் அதை கவன சிதறிலின்றி ஊன்றி வாசித்த மானகவசன்…….. “வச்சனார் குறிப்பிட்டதைப் போல் நிலம் செங்கையன் என்பவருக்கு நியாயமாகவே கிரயத்திற்கு கொடுக்கப்பட்டிறுக்கிறது……மகனுக்கே தெரியாமல் வச்சனாரின் தந்தை விற்றிருப்பாரா என ஒரு ஐயம் கொண்டிருந்தேன்…..ஆனால் விற்பனை  நடந்திருக்கிறதுதான்…..ஏதோ அவசர தேவைக்காய் நடந்திருக்கும் போலும்….. தற்போது வச்சனாரின் தந்தை உயிருடன் இருந்திருந்தால் இக் குழப்பத்திற்கு இடமின்றி போயிருக்கும்” என தன் நினைவுகளின் திசை திக்கை வெளியிட்டான்.

அதை செவியுறவும் ‘ஓ….இதற்குத்தான் இங்கு வந்தாரா இவர்…. வச்சனாருக்கு மரணதண்டனை விதிக்க நேரிடும் என அங்கு மிரட்டிவிட்டு……இங்கு அவர் நிலத்தை மீட்க வழி தேடினாராக்கும்…’ என மனதிற்குள் முறுக்கினாள் பராக்கிரமன் பால் காதல் கொண்டவள்.

 “தங்களைப் பொறுத்தவரை ஒரு மனிதனுக்கு அவன் காதலைவிட நிலம்தான் மிக முக்கியம் போலும்….” மானகவசரின் செவியில் மாத்திரம் விழும்படி முனுமுனுக்கவும் செய்தாள்.

ஒரு மர மேசையில் ஆவண சுருளை விரித்து பரப்பி…. இரு கைகளையும் அதன் இரு புறமுமாயும் ஊன்றி… தலை மாத்திரமாய் குனிந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த பராக்கிரமனோ…… இவளது வார்த்தையில் சற்றும் முகமாறுதல் காட்டாமல், இவளை நிமிர்ந்தும் பாராமல்

 “நான் காதலில் அரிச்சுவடி கூட அறியாதவன்….. ருயம்மாவிடம் காதல் கற்றபின் நீர் சொல்வதெல்லாம் விளங்கும் போலும்…” என ஒரு விடை கொடுத்தான் இவள் கூறிய அதே முனுமுனுப்பு குரலில்…

அமுத சுரப்பென்பதும்……அது அடிவயிற்றில் வெடிப்பதென்பதும் என்னவென்று அனுபவமாய் அறிந்தாள் ருயம்மாதேவி…..

ஆயிரம் மணங்கு காதலை அது முன்பும் அவள் மானகவசன் மீது மனவெளியெங்கும் சுமந்தலைந்தாலும்…..சரீரத்தில் அதன் சஞ்சாரத்தை அவள் உணர்வது இதுவே முதல் முறை….

இவளிடம் காதலை கற்பாராமா??!!!

அவன் குரலும், அவ்வார்த்தைகளை அவன் குறிப்பிட்ட விதமும் அனேகமனேக உள்ளர்த்தங்களை அதுவாய் பிறப்பிக்க…….தேகமெங்கும் சில பல செங்கீற்று மின்னல்கள் சிதறியாட…. சுட சுட சுவாசம் சீரற்று துடிக்க….. செய்கையற்று இவள்.

வெளிரி நின்ற இவள் வதனத்தை இப்போது சற்றாய் ஒரு புறமாய் நிமிர்ந்து பார்த்துக் கொண்ட பராக்கிரமன் மீண்டுமாய் ஆவண சுருள் நோக்கி தன் தலையை குனிந்து கொண்டான்…

‘அவர் நகைப்பது போல் இருக்கின்றதோ…? மணக்க இருப்பவளின் சகோதரனிடம் பேசும் முறையாமா இது என சினம் சினமாயும் வருகிறது ருயம்மாவுக்கு….

வாட்டி வதைக்கும் வெட்கம் தாண்டி எங்ஙனம் ஆராய்வாளாம் அவர் முகத்தை இவள்? எனும் வண்ணம் வெட்க அபிஷேகமும் நடந்தேறுகிறது….

முடிந்தமட்டும் அவனைவிட்டு விலகிச் சென்று நின்று கொண்டாள் பாவை.

சற்று நேரம் செல்ல…..அது வரையும் தான் வாசித்துக் கொண்டிருந்த ஆவணத்தை முறைப்படி சுருட்டி முடியிட்டு ஆவணகளரி அதிகாரியிடம் சமர்பித்த மானகவசன்….

“இப்பகுதியில்…..குறிப்பிட்டு சொல்வதானால்….இந்த விற்கபட்ட பொன்னிவச்சான் நிலபகுதிக்கு அருகிலேயே…ஏதாவது நிலம் விலை கூறபடுகிறதா? உமக்கு எதுவும் அது குறித்து தகவல் தெரிந்தால் தெரிவியும்….” என அதே ஆவணகளரி அதிகாரியை விசாரித்தான்.

பொன்னிவச்சான் நிலத்தை குறித்து பராக்கிரமன் விசாரிக்க துவங்கவுமே இது போன்ற ஒரு எண்ணத்தை அவனிடமிருந்து எதிர்பார்த்திருந்த ருயம்மா தேவி இப்போதும் தன்னவனை முறைக்கத்தான் முயன்றாள்….

‘அங்கு காதலை பிரிக்க கங்கணம் கட்டிக்கொண்டு…….இங்கு இதென்ன வேலையாம்?’ இப்படியாய் இவள் சினம் பாராட்டிய நேரம்

“தாங்கள் குறிப்பிடும் இந்த பொன்னிவச்சான் நிலமே இப்போது விற்பனைக்கு விலை கூறப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது…. அதை வாங்கிய செங்கையனுக்கு ஏதோ தொழில் முதலீடுக்கு தேவை இருப்பதாக கேள்வி…” என விடையளித்தார் அதிகாரி….

அதில் அவ்வளவு நேரம் மானகவசன் மீதிருந்த சினம் தாண்டியும் சிலீரென எழும்புகிறது சுந்தர சந்தோஷம் ஒன்று இவளுக்கு….. ‘விரும்பிய விவாஹமும் நடந்து….அவர்கள் இழந்த விளை நிலமும் திரும்ப கிடைக்கப் பெற்றால்….அத்தம்பதியரின் சுகவாழ்விற்கொன்றும் குறை இருக்காதே….’ என நிறைகிறது இவளது தாய்மையாடும் நெஞ்சம்…

ஆனால் அதற்காகவெல்லாம் இந்த மானகவசரின் மீதிருக்கும் சினம் இவளுக்கு நீங்கிவிட்டதென்றும் சொல்ல இயலாது….

அப்படி என்ன தவறு செய்துவிட்டார்கள் என அந்த காதலர்களை இவர் பிரிக்க நினைக்கிறாராம்???

இவ்வாறாய் ஊடல் காலமாய் அன்றைய தினமும் கழிய…..

மறு தினம் பொழுது புலருகிறது மஞ்சிகை பொன்னிவச்சான் மணநாளுக்காய்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.