(Reading time: 19 - 37 minutes)

வேண்டாம் அது நடக்க வேண்டாம். ஸ்ரீனிவாசன் எனக்கு செய்த உதவிக்கு என் தந்தையை இவனுடன் அனுப்பி வைப்பதுதான் நன்றிக்கடன்!!!

வயதான காலத்தில் தந்தையை அடுப்பின் முன்னால் வேக வைத்த ஹரிணிக்கும்  பெரிதாய் எந்த அதிகாரமும் இல்லை அவரிடம். கண்டிப்பாய் விவேக் என் தந்தையை அருமையாய் கவனித்துக்கொள்வான். அவனது அன்பில் அவரும் உருகித்தான் போவார்.

‘ஒரு வேளை இவருக்கு நினைவு திரும்பி ஹரிணியின் பெயரை சொல்லிவிட்டால் என்ன செய்வது???’ சற்றே குழம்பியது மனம்.

பார்க்கலாம். என்னால் இயன்ற வரை ஹரிணிக்கு எந்த தகவலும் செல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். இவரை விவேக்குடன் எப்படியாவது அனுப்பி வைத்து விடுகிறேன். ஒரு வாரம் அவனுடன் அவர் இருந்துவிட்டால் கூட போதும் அவனது காயம் கொஞ்சமேனும் ஆறிப்போகும். விவேக்கின் அன்பில் திளைப்பவர் அவனுடனே இருந்துவிட முடிவெடுத்துவிட்டாலும் வியப்பதற்கு இல்லை.

மனம் மெல்ல மெல்ல ஒரு முடிவுக்கு வர விவேக்கை பார்த்து புன்னகைத்தாள் ஹாசினி. இவர் அவளது தந்தை என மூச்சுகூட விடவில்லை அவள்.

தெரிந்தால் என்ன செய்வானோ??? அவர் ஹரிணிக்கும் தந்தை என்ற விஷயம் அவனுக்கும் சில நாட்களுக்காவது. தெரியாமலே இருக்கட்டுமே.

‘நீங்க கவலை படாதீங்க விவேக். அவர் வீட்டிலேயும் கண்டிப்பா ஒத்துக்குவாங்க. எல்லாம் சரியா நடக்கும்’ என்றாள் உறுதியான குரலில்.

‘எல்லாம் சரியா நடக்குமில்லையா ஹாசினி??? எனக்கும் அப்படிதான் தோணுது. தேங்க்யூ ஹாசினி. தேங்க் யூ ஸோ மச்.’ அவனது குரலில் மகிழ்ச்சி தாண்டவம்.

அதே நேரத்தில் அப்பாவுடன் சில நிமிடங்கள் தனியாக இருக்க சின்னதாய் ஒரு ஆசை பிறந்தது மகளுக்கு. அவன் சற்று நேரம் எங்காவது வெளியில் சென்றால் நன்றாக இருக்குமே என்று தோன்றவும் செய்தது.

அவன் முகம் பார்த்து புன்னகைத்தவள் மெல்லக்கேட்டாள் ‘நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்க. மதியம் எதுவும் சாப்பிடலையோ??? யூனிஃபார்ம் கூட மாத்தலை போலிருக்கே. போங்க போய் ஏதாவது சாப்பிட்டுட்டு வாங்க”

‘நீங்க வேறே. நான் தாமோதரன்ங்கிற பேரை கேட்டதும் ஏர்போர்ட்லேர்ந்து அப்படியே ஓடி வந்திட்டேன். அதுக்கு அப்புறம் எனக்கு வேறே எதுவும் தோணவே இல்லை. இப்போ இருக்கிற சந்தோஷத்திலே எனக்கு பசியே இல்லை, அப்புறம் சாப்பிட்டுக்கறேன் விடுங்க’ என்றான் விவேக்.

‘நோ... நோ.. விவேக். அப்புறம் இவர் கண் முழுச்சுட்டார்ன்னா என்ன செய்வீங்க??? நீங்க அவர்கிட்டே பேச வேண்டாமா??? போங்க போங்க. ஒடுங்க. சீக்கிரம் ஏதாவது சாப்பிட்டு வந்திடுங்க’ அவள் செல்லமாய் விரட்ட

‘நீங்க சொல்றது கூட கரெக்ட்தான். இதோ வந்திடறேன்..; நகர்ந்தான் அங்கிருந்து.

அவன் விலகியவுடன் அப்பாவின் அருகில் அமர்ந்துக்கொண்டாள் ஹாசினி. அவள் இறுக்கமாக பற்றிக்கொண்டு நடைப்பயின்ற கரத்தை, மெல்ல பற்றிக்கொண்டாள் அவள். அவர் நிச்சியமாக மகாராஜா இல்லைதான் என்றாலும் என்னை இளவரசி போல்தான் பார்த்துக்கொண்டார். ஆனால் நான்???

அவள் விழி ஈரம் கன்னம் தொட்டது. பல நூறு முறை மன்னிப்பு கேட்க விழைந்தது மனம். தோள் சாய்ந்து கூட அழுதிட தோன்றியது அவளுக்கு. இப்போது எதுவும் செய்யவும் இயலாது. செய்தாலும் எந்த அர்த்தமும் இல்லை. இது வரை நான் அவருக்கு தந்த வலிகளை அது அழிக்கவும் போவதில்லை. பெருமூச்சு ஒன்று எழுந்தது அவளிடம்.

அடுப்பில் அவிந்ததற்கும், பாத்திரங்களோடு தேய்ந்ததற்கும் சாட்சியாய் அவரது உள்ளங்கை சுரசுரப்பாய் இருந்தது.

‘நாங்க ரெண்டு பேரும் உங்களை தவிக்க விட்டுடோம்பா. சரியா கவனிச்சுக்கலை. தப்பு. ரொம்ப தப்பு. சாரிப்பா ஆனா இப்போ உங்களுக்கு ஒரு பையன் வந்திருக்கான். அவன் உங்களை ரொம்ப நல்லா பார்த்துப்பான். நீங்களும் ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க பாருங்களேன்’ வாய் விட்டு சொன்னவள்

அவரது வலது கையை எடுத்து தனது கன்னத்தில் வைத்துக்கொண்டாள். மெல்ல முத்தமிட்டாள். சிறிது நேரம் அப்படியே அவருடனேயே அமர்ந்திருந்தவள்,

விவேக் வந்ததும் அவரது மருத்துவ அறிக்கைகளை எடுத்து பார்த்து எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்பதை உறுதி செய்துக்கொண்டு, அவனிடம் விடைபெற்றுக்கொண்டு  எதுவுமே நடவாதது போல் அங்கிருந்து அகன்றாள்.

வம்!!! இரவு முழுவதும் அவர் எப்போது கண் விழிப்பார் என அருகிலேயே தவம் இருந்தான் விவேக். அவனே அறியாமல் அவன் சிறிது கண் அசந்துவிட்ட நேரமது!!! காலை ஏழு மணி.

மெது மெதுவாய் கண் திறந்தார் தாமோதரன். உறக்கமும் மயக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக தெளிய தான் மருத்தவமனையில் இருக்கிறோம் என்பது மெல்ல மெல்ல தெளிவாகியது.

அந்த விபத்து அவர் நினைவில் வந்து போக அவர். ஹரிணி வந்திருக்க கூடுமோ என்ற யோசனையில் சுற்றுமுற்றுமாய் பார்வையை சுழற்றினார். அவள் கண்ணிலே தென்படவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.