(Reading time: 20 - 39 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

வெளிப்படுவதாக இருந்தது. அப்பா சிறிது அமைதியாக இருந்தபிறகு, "எல்லாம் அவரவர்கள் கேட்டு வந்தபடிதான் நடக்கும், சும்மா கவலைப் பட்டுப் பயன் இல்லை. படிக்க வைத்துப் பெரிய உத்தியோகத்துக்கு அனுப்பிப் பெருமையாக வாழலாம் என்று பார்த்தார்கள். என்ன ஆயிற்று, பார்த்தாயா? அதனால்தான் பெரிய படிப்பே வேண்டா என்று ஒவ்வொரு வேளையில் எண்ணிப்பார்க்கிறேன். என்னவோ போ" என்று சுருக்கென்று முடித்தார். அது என் படிப்பைப் பற்றி அவர் கொண்ட வெறுப்பையும் அதற்கு ஒரு முடிவையும் புலப்படுத்துவதுபோல் இருந்தது. இருந்தாலும், அப்பா என் படிப்பைத் தடுக்கமாட்டார். தடுத்தாலும் அம்மாவிடம் அழுது கண்ணீர்விட்டு எண்ணியதை முடித்துக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கை எனக்குள் இருந்தது. அதனால் அவருடைய சொல் என் உள்ளத்தைக் கலக்கவில்லை.

  

ஆனால் சந்திரனைப் பற்றிய எண்ணம் அடிக்கடி எழுந்து என் உள்ளத்தில் அமைதி இல்லாமற் செய்துவந்தது. மூன்று ஆண்டுகள் எங்கள் தெருவில் அவன் தங்கியிருந்து, குடும்பத்தோடு குடும்பமாய் நெருங்கிப் பழகி, ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் ஒரே பெஞ்சில் இருந்து காலை முதல் மாலை வரையில் தொடர்ந்து பழகிய பழக்கத்தை எளிதில் மறக்க முடியவில்லை. நான் மறந்தாலும் எங்கள் தெருவும், திண்ணையும், வேப்ப மரங்களின் நிழலும் பாக்கிய அம்மையாரின் வீடும், இலுப்பை மரச் சாலையும் அடிக்கடி எனக்குச் சந்திரனையே நினைவூட்டி வந்தன. அந்த நினைவு மகிழ்ச்சியான நினைவாக இருந்தால் கவலை இல்லை. அது என் உள்ளத்தில் வேதனையைத் தூண்டுவதாக இருந்தது. கல்லூரி விடுதியில் பக்கத்து அறையில் இருந்துகொண்டு அவனுக்காகக் கவலைப்பட்டதைவிட, வேப்ப மரத்தடியில் திண்ணையில் சாய்ந்து தனியே இருந்தபடி நான் பட்ட கவலை மிகுதியாக இருந்தது. அவனுடைய அழகும் அறிவும் அன்பும் நட்பும் இப்படித் துன்பத்தை வளர்ப்பதற்குத்தானா பயன்படவேண்டும்.

  

இந்தத் துன்ப நினைவு ஒருவாறு மாறுவதற்கு இரண்டு வாரங்கள் ஆயின. சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு திருமணப் பேச்சும், நாதசுர ஒலியும் அடிக்கடி கேட்கும் நிலைமை வந்தது. பாக்கியத்தின் தம்பி விநாயகத்திற்குத் திருமண ஏற்பாடுகள் தொடங்கின. குண்டலேரி என்னும் கிராமத்தில் அவர்களின் பழைய உறவில் ஒரு பெண்ணைப் பார்த்து முடிவு செய்தார்கள். அப்போது திருமணக் கடிதங்கள் எழுதுவதற்கும் அங்கே இங்கே போய் வருவதற்கும் என் உதவியைக் கோரினார்கள். அம்மா பெரும்பங்கான வேலைகளை எடுத்துக்கொண்டு செய்தார். அந்த வீட்டிலும் வந்த உறவினரிலும் வாழ்வரசியாக யாரும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.