(Reading time: 20 - 39 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

சொல்லவேண்டும். அந்த நகைகளில் முக்கால் பங்கு இரவல் வாங்கியனவாக இருக்கவேண்டும் என்பது தானே தெரிந்தது. ஏன் என்றால், பெண் வீட்டார் பெரிய செல்வர் அல்ல என்பது, அவர்களின் வீட்டுக்குப் போய் வந்த எனக்கு நன்றாகத் தெரியும். தவிர, அந்த நகைகளில் சில, காலத்திற்கு ஏற்காத பழைய நகைகள், பொருட்காட்சியில் வைக்கத் தகுந்தவை. ஆகையால் மணமகள் இருந்த அழகும் குறைந்து விளங்கினாள். அந்த வீட்டில் விதவையாக வாழ்ந்த பாக்கியத்தின் இயற்கை அழகில் அரைக்கால் பங்கும் அவளுக்கு இல்லை. ஆனால் மணமகன் விநாயகத்தின் அழகை நோக்கியபோது, அந்தச் சிடுமூஞ்சிக்கு இவள் போதும் என்று தோன்றியது. மணப்பந்தலிலும் அவருடைய முகத்தில் ஒரு பொலிவோ புன்னகையோ இல்லை. வழக்கம் போல் உம்மென்று உட்கார்ந்திருந்தார். சொன்னதைச் செய்து சடங்குகளை முடித்தார். இப்படிப்பட்டவர் புதிய ஒருத்தியோடு பேசிப் பழகி எப்படி வாழ்க்கை நடத்தப் போகிறாரோ என்று எண்ணினேன்.

  

திருமணம் முடிந்த பிறகும் பகல் விருந்தின் போது சிறு குழப்பம் நடந்தது. தாலி கட்டுவதற்குமுன் எதற்காகவோ யாரையோ கேட்கத் தவறிவிட்டார்கள். அவ்வாறு செய்தது தப்பு என்று சிலர் கோபத்தோடு எதிர்வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்துகொண்டு அங்கே ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டார்கள். திருமணத்துக்கு வந்த உறவினர்கள், ஆளுக்கு ஒருவகை உதவி செய்து துணையாக இருந்து போவதை விட்டு, ஆளுக்கு ஒரு குழப்பம் செய்து கலகம் விளைவிக்கிறார்களே என்று வருந்தினேன். இவ்வளவு அறியாமை உடைய மக்களுக்கு இடையே வாழ்க்கை நடத்துவது எவ்வளவு துன்பம் என்றும் எண்ணி வருந்தினேன்.

  

திருமணம் முடிந்ததும் மணமகனும் மணமகளும் ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்து பாலும் பழமும் உண்டார்கள். பிறகு மறுநாள் மாலையில் பெண்வீட்டு மருவுக்குச் சென்றார்கள். அங்கிருந்து திரும்பி வந்தபிறகு, மணமகள் நடத்திய வாழ்க்கையைப் பார்ப்பதற்காகப் பாக்கியத்தின் வீட்டுக்குச் சிலமுறை போயிருந்தேன். பாக்கியம் பழையபடியே தம் கடமைகளைச் செய்துகொண்டிருந்தார். தம்பியின் திருமணத்தை முடித்தது பற்றிய மகிழ்ச்சி அந்தம்மாவின் முகத்தில் இருந்தது. மணமகள் சமையலறையிலேயே பெரும்பாலும் இருந்தபடியால் சரியாகக் கவனிக்க முடியவில்லை. நான் அடிக்கடி அங்கே போய் வருவதைக் கவனித்த என் தாய், "இளம் பெண் - புது மருமகள் வந்திருக்கும் வீட்டுக்கு நீ அடிக்கடி போவது நல்லது அல்ல. எப்போதாவது ஒரு முறை போய்விட்டு வந்தால் போதும்" என்றார். அதன்படியே நான் போவதைக் குறைத்துக் கொண்டேன். பாக்கியம் முன்னைவிட ஓய்வாக எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து பேசிக்கொண்டிருந்தார். "இனிமேல் எனக்குக் கவலை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.