(Reading time: 16 - 32 minutes)
Vata malli
Vata malli

தலையைத் தலையணையில் வைத்துவிட்டு எழுந்தாள். கரங்கள் இரண்டையும் முன்பக்கமாகவும், பின்பக்கமாகவும் கட்டிக் கொண்டு நடந்தாள். அவ்வப்போது சுயம்புவின் வாயை - வாயை மட்டுமே பார்த்தாள்.

  

சுயம்பு தலையைப் பிடித்துக்கொண்டே யோசித்தான். அவள் துடித்த துடிப்பை அழுத அழுகையைத் தாயினும், சாலப் பரிந்த நேர்த்தியை நினைத்துப் பார்த்தான். இவள் வெறும் தாயாக மட்டும் தெரியவில்லை. ஆதிபராசக்தி... லோகமாதா... பெறாமல் பெற்றவள்.

  

சுயம்புவின் கண்களில் தாரை தாரையாக நீர், எலும்பு கசிந்து கண் வழியாய் திரவமாவது போன்ற தெளி நீர். உதடுகள் துடித்தன. நாடி நரம்புகள் ஒவ்வொரு அணுவும் பூரித்துப் பூரித்துப் புது மெருகாகிறது. உடம்புக்குள் அவனை இதுவரை துன்புறுத்திய ஒன்று, அவன் உடம்பு முழுவதும் ஒய்யாரமாக வியாபிக்கிறது. ஒரு ராட்சஸி, வேடம் கலைத்து தேவதையாகிறாள். ஆனாலும் அவளை ஒரு அசுரன், ஒற்றைக் கொம்பன் ஈட்டியால் குத்தப்போகிறான். இதோ நிற்கிறாளே... இந்தத் தாய், இவள் ஆவியாகி அவன் வாய் வழியாய் உள்ளே போகிறாள். அந்த அசுரனை, துவம்சம் செய்கிறாள். அவள் வெட்டிப் போட்ட ஒவ்வொரு துண்டுகளையும், வாய் வழியே வெளியே வீசுகிறாள். பிறகு வெளியே வருகிறாள். உஷ்ண சூரியனாய் நிற்கிறாள். நெருங்க நெருங்க எரிக்காத பெண் சூரியன், இந்தக் கட்டாந்தரைக்கு வாழ்வளிக்கும் சூரியத்தாய்...

  

சுயம்பு, ஒரு குழந்தை எப்படி முதலில் அந்த வார்த்தையை உச்சரிக்குமோ அப்படி உச்சரித்தான்.

  

அம்..ம்.மா...அ.ம்.மா. அம்மா. அம்மா..."

  

அவள், அப்படியே ஓடிவந்தாள். அந்தக் கட்டில் சட்டத்தில் முகம் போட்டு அவன் மார்பில் சாய்ந்தாள். அவன் கைகளை எடுத்துத் தன் கழுத்தில் கோத்துக் கொண்டாள். ‘மகளே... என் மகளே’ என்று ஒரே ஒரு தடவை ஒரு சின்னச் சத்தம். அப்புறம் தாயும் மகளும் அதே நிலையில், அதே பிடிவாரத்தில். காலத்தையும் பிடித்து வைத்துக் கொண்டது போன்ற பிடி வாழ்வில் பிடிபடாத ஒன்றைப் பிடித்துவிட்ட திருப்தி. மூத்தவளுக்கு ஒரு ஆறுதல். சின்னதுக்கு ஒரு அடித்தளம்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.