"நேரமாகி விட்டது மாமா! நீங்கள் அவசியம் எங்கள் வீட்டிற்கு வாருங்கள். அப்பாவிடமும் சொல்லுகிறேன். காமுவையும் அழைத்து வாருங்கள். என் மனைவி அழைத்து வரச் சொன்னாள்" என்று கூறி விட்டு காமுவிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டான் சங்கரன்.
ஆகட்டும், பார்க்கலாம். மாமி சொன்னதை மனத்தில் வைத்துக் கொள்ளாதே சங்கரா! காமுவுக்குக் கல்யாணம் ஆகவில்லை என்று கண்டவர்கள் பேரில் எரிந்து விழுந்து கொண்டிருக்கிறாள் என்று இன்னும் ஏதேதோ சொல்லிக் கொண்டு வாசல் வரையில் வழி அனுப்ப வந்தார் ராமபத்திர அய்யர்.
----
காரில் சென்று கொண்டிருக்கும் போது சங்கரன் பல தமாக எண்ணமிட்டான்: காமு அவனை மறக்கவில்லை. அவன் கூறிய வார்த்தைகளை மறக்கவில்லை. சொல்லுக்கும், செயலுக்கும் மதிப்பு வைத்திருக்கிறாள். காமு அவனை மறக்காததைப் பற்றி அவன் மனம் சந்தோஷப் பட்டது. அந்தச் சந்தோஷம் அற்பமானது. தகாதது என்று அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது. இருந்தாலும் அவன் அதனால் திருப்தி அடைந்தான். காமு கன்னிகை யாகவே காலங் கழிக்கப் போகிறாளா? ஏன்? யாருக்காக அவள் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்கிறாள்? சங்கரனுக்காகவா? சங்கரனை விட அவள் படித்தவள் அல்ல. அவனை விட விஷயம் தெரிந்தவள் இல்லை. இருந்த போதிலும் காமுவின் மனம் உண்மைக்கும், அன்புக்கும் கட்டுப்பட்டிருக்கிறது.
சங்கரனின் மண்டை கனத்தது. காரின் "ஸ்டீயரிங் வீல்" கைப்பிடியிலிருந்து நழுவி விடுவது போன்ற பிரமை ஏற்பட்டது. அவன் இவ்விதம் எண்ணமிட்டுக் கொண்டு செல்லும் போது, கடற்கரை சமீபத்தில் வந்து கொண்டிருந்தான். மனத்தைச் சுதாரித்துக் கொண்டு மேலும் செல்லலாம் என்று வண்டியைக் கரையோரம் நிறுத்திவிட்டு, மரங்கள் அடர்ந்த இடத்தில் சென்று அமர்ந்தான் சங்கரன். மாலை சுமார் நான்கு மணி இருக்குமாதலால் கடற்கரையில் கூட்டம் அதிகமில்லை.
தொடரும்...