கமலாவுக்கு உதவியாகப் பாத்திரங்களையும், கோப்பைகளையும் அலம்பி ஒழுங்கு படுத்தும் வேலையில் முனைந்தாள். சரசரவென்று பீங்கான் கோப்பைகளை அலம்பி அவள் ஒழுங்கு படுத்துவதே ஒரு அழகாக இருந்தது.
கூடத்தில் நீலா தன் அழகுப் பையைத் திறந்து அதிலிருந்து சிறிது 'மாவு' எடுத்து முகத்துக்கு ஒற்றிக் கொண்டாள்.உதடுகளுக்குச் சிவப்புச் சாயத்தை லேசாகத் தடவிக் கொண்டாள். இப்படி வந்த இடம் போன இடம் இல்லாமல் நாகரிகம் முதிர்ந்த பெண்கள் அலங்காரம் பண்ணிக் கொள்வது சிறிது அருவருப்பைத் தரக்கூடிய விஷயம்தான்.
சங்கரன் கூடத்துக்கும், கொல்லைப் பக்கத்துக்கும் இடையில் இருந்த தாழ்வாரத்தில் நின்று காமுவையும், நீலா வையும் மாறி மாறிப் பார்த்தான். “காமு பட்டின வாசத்து நாகரிகத்தைத் தெரிந்து கொண்டாலும் அதற்கு ஓர் அளவு கொடுத்து வைத்திருக்கிறாள். பண்டையப் பண்பாட்டுடன் நவீனத்தின் அழகும் கலந்து அவளிடம் பிரகாசிக்கிறது” என்று எண்ணினான் சங்கரன். களைத்துப் போன தன்மனப் தோழி கமலாவுக்காக உதவும் அவள் பான்மை அவளுடைய பழைய கிராமிய வாழ்வைக் காட்டியது. நாலு பேருடன் சரளமாகப் பழகும் அவள் சுபாவம், புது நாகரிகத்தின் பழக்கத்தைக் காட்டியது.
காமு பாத்திரங்களை அலம்பி முடித்ததும் முகத்தில் அரும்பிய வியர்வையைக் கைகுட்டையால் துடைத்துக் கொண்டு கூடத்துக்கு வந்தாள். வரும் போது, வராந்தாவில் தனியாக நிற்கும் சங்கரனை அவளால் கவனிக்காமல் செல்ல முடியவில்லை.
''காமு! என்னை நினைவிருக்கிறதா உனக்கு? பட்டினத் துக்கு எப்போது வந்தாய்?" என்று சங்கரன் மெதுவாகக் கேட்டான். காமு அவள் பெற்றோருடன் பட்டினம் வந்திருக்கிறாளா அல்லது அவளுக்குக் கல்யாணமாகிக் கணவனுடன் வந்திருக்கிறாளா என்று அறிந்து கொள்ள வேண்டுமென்கிற காரணத்தாலேயே சங்கரன் அவளை அவ்விதம் கேட்டான்.
"நாங்கள் பட்டினம் வந்து கிட்டத் தட்ட ஒரு வருஷத்துக்கு மேல் ஆகிறதே. கிராமத்தில் வீட்டை விற்று விட்டோம். அந்தப் பணத்தை வைத்து அப்பா ஒரு கடை வைத்திருக்கிறார். நான் 'டிரெயினிங்' படிக்கிறேன்". காமு பழைய சம்பவங்களை மறந்துவிட்டு அவனுடன் பேசினாள். பிறகு, "அம்மாவுக்குத்தான் உடம்பு சரியாக இல்லை. அவளுக்கு ஒரே கவலை என்னைப்பற்றி, எனக்குக் கல்யாணம் ஆக வில்லையாம். உருகிப் போகிறாள்!" என்றாள்.