அவனைக் கண்ட குணவதி இரு கண்களிலும் நீர் பெருகியவாறு, “நாதா! என்னுடைய அந்திய காலம் சமீபித்துவிட்டது. இந்த தருணத்திலாவது என் கண்முன் சந்தோஷமாக உங்கள் முக தரிசனங் கொடுக்க மாட்டீர்களா! இனியுமா என்மீது வர்மம்? என்னை இனி நீங்கள் வெறுத்து விலக்கினாலும் இன்னும் சில தினங்கள் வரையில் தான் வெறுக்கலாம், அதற்குமேல் என்னாவி இவ்வுலகை விட்டு மறையும், நாதா! உங்கள் அழகிய கரத்தைக் கொடுங்களேன். என் கடைசி ஆவலையாவது தட்டாது பூர்த்திசெய்ய மன மிரங்க வேண்டும்." என்று பின்னும் ஏதோ சொல்வதற்குள் பொன்னுசாமி அதிக ஆவேசத்துடன், "அடீ! எனக்குத் தெரியும் உன் கதைகளெல்லாம். சில தினங்கள் முன் என் பெற்றோருக்கு எதோ ஆபத்து வந்துவிட்டதென்று கூறி என்னை மடக்க எண்ணினாய்; இப்போது உனக்கே வந்துவிட்டதாக நாடகம் நடிக்கின்றாய்! இந்தக் கட்டுப்பாடான முன்னேற்பாடுகளை நானறியாத மூடனன்று, சீச்சி! பாசாங்குக் கள்ளீ! என் பெற்றோர்கள் இறந்தது போலத் தான் நீயும் இறப்பாய். வீணாக என் நேரத்தைக் கெடுக்கின்றாய் மூதேவி!" என்று வைதவாறு, சற்றும் இரக்கமற்று அவளுடைய பலஹீனமான நிலைமையில் அவனைக் காலால் எட்டி உதைத்துவிட்டு, அவ்விடம் விட்டு வேசி மனையில் புகுந்தான்.
அந்தோ! இவ் விபரீதமான :செய்கையைக் கண்ட அவன் பெற்றோர்கள் அவனைத் தாறுமாறாக வாயில் வந்தவாறெல்லாம் திட்டினார்கள். அன்று அவளுடைய கேவலமான நிலைமையில் அந்தச் சண்டாளன் முரட்டுத்தனமாக உதைத்ததால் உடனே அவள் மூர்ச்சையானாள். அன்று முற்றும் அம் மூர்ச்சை தெளியாது வெகு பயங்கரமாகிவிட்டது. இதே நிலைமையில் அடுத்த நாள் செல்ல, சற்று மயக்கம் தெளிந்ததும் "அம்மா! இந்த செய்கையை யாரிடமும் சொல்லவேண்டாம். வெட்கக் கேடு; வெளியாகா திருப்பதே நலம்......நான் இறப்பினும் இவ்விஷயத்தை வெளியிடா தீர்கள்." என்று உறுதியாகக் கூறினாள்.... அன்று இரவே மகா குணவதியாகிய அவ் வுத்தமியின் உயிர் மாயமாய் மறைந்தது.
-----
குணவதியின் ஆவி பறந்து போய்விட்டபின் மிச்சமான சவத்தின் மீது அவள் மாமியும் மாமனும் விழுந்து புரண்டு கதறுகின்றார்கள். "ஐயோ! குணவதி! எங்கு சென்றாயடீ! என் கண்ணே! எங்களைப் பரதேசியாக விட்டு விட்டாயே என் கண்மணீ! குணவதி! உன் முகத்திற்காக நாங்கள் உயிர் வாழ்ந்தோமே! எங்களை நட்டாற் றில் விட்டு விட்டாயே! ஐயோ! நாங்கள் என்ன