(Reading time: 34 - 68 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

நற்குணத்தின் மாதிரியையும் கண்டு மாமியாரும் மாமனாரும் அவளைத் தம் சொந்த மகளாகவே பாவித்து, அன்பு காட்டி, வேண்டிய நகைகளைச் செய்து போட்டார்கள். பொன்னுசாமி தன் மனைவியை மிரட்டி, அடித்து, இம்சித்து நகைகளைக் கழற்றிக் கொண்டு போவதோடு தாயாருடைய உடம்பிலிருப்பதையும் லண்டத்தனம் செய்து வாங்கிக் கொண்டு போய்விடுவான். இந்த உபத்திரவத்திற்காகவே பொன்னுசாமியினுடைய மனைவி தனக்கு எதும் நகையே வேண்டாமென்று கூறிவிட்டாள். தினந்தோறும் தன் வேலைகளைச் சரிவரச் செய்வதும், மாமி மாமனை வணங்குவதும், தன் வருத்தத்தை எண்ணிப் புலம்புவதுமாகவே அவள் காலம் நடக்கின்றது.

   

-----

   

அந்தப் பெண்ணின் துயரத்தைக் கண்டு அவள் மாமியார் "அம்மா! குணவதீ! என் வயிறு செய்த பாபத்தினால் நீயும் இவ்விதம் கஷ்டப்படுகின்றாயே! உன்னுடைய இவ் வயதில் எத்தனை மேன்மை பாயும் இன்பமாயும் இருக்க வேண்டும், இக்காலத்தில் நீ தனித்த சன்யாசினி போல விருப்பதைக் காண என் மனம் துடிக்கின்றதே? நான் ஆதியில் என் மாமியிடத்திலும் நாத்தியிடத்திலும் பட்ட சிறுமையும் இம்சையும் அளவிட வியலாது. அத்தகைய இம்சையை அடைந்து தவித்தேன். ஆனால் என் பர்த்தா மட்டும் என்மீது பிரியமாக விருந்ததனால் நான் உயிர் தரித்து வாழ்ந்தேன். என் புருஷன் என்னுடன் பேசுகின்றார்; அன்பாயிருக்கிறார் என்கிற வயிற்றெரிச்சலால் எங்களிருவரையும் சாபமிட்டுக் கொட்டுவார்கள். நான் இம்சைப் படும் காலத்தில் "ஐயோ! நமக்கு இந்த இம்சை போதும். நமக்கொரு மருமகள் வந்தால் கண்மணியைப் போல வைத்துக் கொண்டு மகிழ வேண்டும்" என்று நினைப்பேன்.

   

அப்படியே மகன் பிறந்தான். மகன் பிறந்த பிறகே என் மாமி, மாமன் மாண்டார்கள். அவர்கள் காலத்திற்குப் பிறகு எனக்கு நல்ல காலமும் செல்வாக்கும் உண்டாயது, என்னுடைய அதிகாரத்தில் குடும்பம் நடக்கத்தலைப்பட்டது, என்ன சுகமுண்டாகி என்ன! பையன் ஆரம்பத்திலேயே பெரும் துயரத்தை விளைவிக்கும் கோடரிக்காம்பாகி விட்டான். எத்தனை சொல்லியும் கேட்க வில்லை. விவாகத்தைச் செய்தால் சற்று குணவானாக விருப்பானோ வென்று அதையும் செய்தோம். பலனில்லாது போயிற்று, நாளாக ஆக வரவா வெகுதூரம் விஞ்சிவிட்டது. இந்த உபத்திரவம் சகிக்கக் கூடவில்லை. ஆகையினால் நாங்கள் காசி முதலிய புண்ணிய க்ஷேத்திரத்திற்கு யாத்திரை போகலாம் என்று நினைக்கின்றோம். நீ இங்கிருந்து சுகப்படுவது கடவுளுக்குத்தான் பிரீதி! ஆகையினால் நீ உன் தாயாரகத்திற்குச் சென்றுவிடு. 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.