உனக்கான செலவிற்குப் பணமனுப்புகிறேன். நான் திரும்பிவந்தவுடன் உன்னை அழைத்துக்கொள்கிறேன். நீ இங்கு ஏன் தனியாக வாடவேண்டும்?" என்று வெகு அனுதாபத்துடன் கூறினாள்.
-----
இது கேட்ட குணவதி கண்ணீர் வழிந்தவண்ணம் "அம்மா! நீங்களறியாத விஷயம் நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. என்னுடைய தலைவிதி இவ்விதமிருக்கிற-தென்பதை உலகமே அறியும். எனினும் எதற்கும் ஒரு மதிப்பென்பது பொது உடைமையாக இருக்க வேண்டும். அந்த உடைமை எப்படி இருந்தால் இருக்கு மென்பதும் நீங்களறிவீர்கள். எனக்கு ஆயிரம் சிறுமையும் மனக்கிலேசமும் இருப்பினும் என்னுடைய உரிமையுள்ள வீடாகிய தங்கள் வீட்டில், தங்கள் பாதுகாப்பில் இருந்தால் தான் எனக்கு மதிப்பேயன்றி பெற்ற அன்னையாயினும் நான் அங்கு சென்றால் என் வருத்தம் பதின்மடங்கு அதிகரித்து இன்னும் சிறுமை யுண்டாகுமேயன்றிப் பெருமை இல்லை. இதைக் கண்முன்பாக எத்தனையோ பேர்களிடத்தில் பார்த்திருக்கிறேன். கணவன் வீட்டி விருந்து தாய்வீடு செல்கிறவர்களுக்குக்கூட, உடனே திரும்பிவிடக் கூடியவர்களுக்கு அதிகமான மதிப்பும் தடபுடலான உபசாரமும் நடக்கின்றன. பின்னும் நான்கு நாள் தங்குகின்றவர்களுக்கு சற்று ஏற்றம் குறைந்து சிடுசிடுப்புப் பாணத்தை அவர்கள்மீது ப்ரயோகிக்க வாரம்பித்து விடுகிறார்கள். தாய் வீடே கதி என்று கணவன் விலைக்கிவிட்ட பெண்ணின் பரிதாபத்தைக் கூறவேண்டுமா! அந்தோ! அவ்வாறு சிறுமைபட்டு வாடுவதைவிடத் தற்கொலை செய்துகொண்டு இறந்து விடலாம். எந்தெந்த காலத்தில் யார் யார் ஆதீனத்திலிருக்க வேண்டுமோ, அவ்வாறு இருந்தால்தான் பெற்ற தாயாயினும் தந்தையாயினும் மதிப்புடன் பெயரைச் சொல்லியழைப்பார்கள். இல்லையேல் மதிப்பெல்லாம் கால் மிதிப்பாய் விடும். நான் கண் கண்ட அனுபவத்தின் வரையில் எல்லா விஷயங்களையும் பார்த்தாய் விட்டது. என்னுயிர் போவதாயினும் இந்த இடத்தில் இப்படியே போய்விடட்டும். நான் உங்களை விட்டுப் போகமாட்டேன். என் கணவன் இவ்விதமிருந்தபோதிலும் அவருடைய நிழலில் இருந்து அவர் இடும் கூழோ கஞ்சியோ குடித்து என் காலத்தைக் கடத்தி விடுகிறேன். அம்மா! என்னை கைவிட்டு விடாதீர்கள். என் கதி உங்கள் பாதத்தில் முடியட்டும்." என்று வெகு உருக்கமாகக் கூறினாள்.
-----