செய்வோம்? இனி எவ்விதம் உயிர் வாழ்வோம்? மதியை இழந்த வானம் போலவும் நீரற்றப் பயிர் போலவும் ஆய் விட்டோமே! ஹா! குண மணியே! குணக்குன்றே! கோதிலா மாணிக்கமே!" என்று தன்னிறையழிந்து புலம்பி முட்டிக் கொள்கிறார்கள்.
அண்டை அயலில் உள்ளவர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறவும் மாட்டாது குணவதியின் அபாரமான குணத்திற்கும், பொறுமைக்கும் கண்ணீர் விட்டார்கள். இந்த உத்தமி இறந்த செய்தியை அச்சண்டாளனுக்குச் சொல்லி யனுப்பினார்கள். அவன் ஊரிலில்லை என்றும், எங்கு சென்றான் எப்போது வருவான் என்பது ஒன்றுமே தெரியவில்லை என்றும் பதில் கிடைத்தது.
சவத்தை வைத்துக்கொண்டு புலம்பும் இருவருக்கும் "அவனை எங்குத் தேடுவது, எந்த விடத்திற்குத் தந்தி யடிப்பது? ஐயோ! வேசிக் கள்வனின் இருப்பிடத்தை எங்கு கண்டு பிடிப்பது?" என்கிற பெரும் விசனமும் கூடப் பாதித்தது. குணவதியினுடைய மரணத்தினால் அவ்வூரே அல்ல கல்லோலப்படுகின்றது. "அவளை இழந்த பின் இனி உயிருடனும் உலவ வேண்டுமா!" என்று கிழவர்கள் துடித்தவாறு சவத்தைக் காத்தார்கள்.
பொழுது விடிந்ததும், வேசி வீட்டிற்குப் பலதரம் ஆளனுப்பிப் பார்த்தும் தகவலே கிடைக்கவில்லை; கதவு பூட்டப்பட்டிருந்தது. அந்தப் படுபாவியின் தகவலை யறியக் கூடாது தத்தளித்தவாறு அன்று இரவு வரையில் பிணத்தை வைத்துக் கொண்டிருந்தார்கள். அக்கம் பக்கத்திலுள்ளோர் பிணத்தை சீக்கிரம் எடுத்துவிட வேண்டும் என்று கூறியதோடு சவத்தின் நிலைமையும் கேவலமாகி, அசங்கியமாகி விட்டதால் "அவன் வந்தாலும் வராவிடினும் சவத்தை எடுத்து விடுவது" என்று தீர்மானித்துச் சகல காரியமும் செய்து எடுத்து விட்டார்கள்.
------
அந்தோ! குணவதியின் உடலில் உயிரிருந்த காலையில் அவளுக்கு ஒரு வினாடியும் நிம்மதி என்பதே இல்லாது தவித்தாள். அத்தகைய உத்தமி இந்த உலகைவிட்டு மறைந்த பிறகே -- சவமாகிய பிறகே - நிம்மதியான நிலைமையை அடைந்து விட்டாள். அவளுடைய சவ ஊர்வலத்திற்கு கொட்டு முழக்கும், காந்த விளக்குகளும் நிரம்பி விட்டன. கதறித் துடிக்கும் ஜனங்கள் வெகு பேர் திரள் திரளாகப் பின்னே செல்லலாயினர்.