ஓர்விதமான அன்பு அவன் இதயத்தில் பதிந்துவிட்டதனாலும் அவ்வன்பாகிய கயிற்றால் கட்டுப் பட்டு பரிமளாவுக்குப் பாடம் சொல்லுவது, சங்கீதம் கற்பிப்பது முதலியன செய்துவந்தான். அவனுடைய அன்பிற்குக் காரணம் அவனுக்கே தெரியாது. அன்று பரிமளாவினுடைய மாறுதல் கேசவனுக்குச் சிறிதும் தெரியாது. தன் போக்காக வந்த கேசவன் பரிமளாவின் மாறுதலையும், முக-வாட்டத்தையும், புலம்பிய கண்களின் குன்றிய ஒளியையும் கண்டு திடுக்கிட்டு "பரிமளா! என்னவிது! அன்றலர்ந்த தாமரையைப்போன்றிருக்கும் உனது வதனம் கலக்க முற்றுக் கண்ணீர் வடித்திருக்கின்றதே! காரணம் என்ன? நான் அறியலாகுமா!" என்று கேட்டான்.
பரிமளா.- உட்காருங்கள். நான் தங்களை எல்லாம் விட்டுப் பிரியுங்காலம் வந்துவிட்டது. அதை எண்ணியே விசனிக்கின்றேன். நாம் ஓர் நாடகம் நடிப்பதுபோலக் கடவுள் நம்மையே ஓர் நாடகமாக நடிக்கிறார். நமது பிரிவுக்காக என் மனம் வருந்துவது சகஐ மல்லவா!
------
கேசவன் - என்ன! என்ன! பரிமளா! நீ பேசுவது எனக்குப் புரியவில்லையே! நாம் பிரியவேண்டுமா! ஏன்! என்ன காரணம்? நான் எனக்குத் தெரிந்து ஒருவிதமான குற்றமும்- தவறுதலும்- உன்பால் செய்ததாகத் தெரியவில்லையே! பரிமளா! அவ்வாறு நான் ஏதேனும் என்னை யறியாது செய்துவிட்டேனா! அதை விளக்கிக் கூறு. என்னை நான் திருத்திக்கொள்கிறேன். உன் முகவாட்டங் கண்டு என் மனம் பதறுகின்றதே!
பரிமளா - ஹா! தாங்கள் குற்றமிழைத்ததாகவா நினைக்கின்றீர்கள். அப்படிக் கொன்றுமில்லை. இதோ! இந்தக் கடிதங்களாகிய பாணங்களினால் நான் வெதும்பிப் போய்விட்டேன். நான் கேவலம் பெண்பிள்ளை. அதிலும் ஓர் நாடகக்காரி. நான் இனி கலங்காது சந்தோஷமாக விருப்பதற்கு எவ்விதம் இடமுண்டு.
கேசவன்.-(கடிதங்களைப் படித்துவிட்டு) ஹா! பரிமளா! இப்போது விளங்கியது. உனக்கு நமது கம்பெனியினின்று எழுதிய ஆசாமி யார் என்பது. நாராயணன்தான் நம்மிருவர் பேரிலும் பெரும் பகை வைத்திருக்கிறான். அவனுடைய பகையின் பாணம் தான் இது.... இதற்காக நீ ஏன் பிரிவு காலம் என்று கூறினாய்?