(Reading time: 25 - 50 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

இதுகேட்ட பரிமளா தனது சொந்த தந்தையைப்போல எண்ணி இருக்கும் பொன்னுசாமியின் இரு கரங்களையும் பிடித்துக்கொண்டு சிறிய குழந்தையைப்-போல் கோவெனக் கதறியவாறு "என்னரிய பெரியாரே! நான் உருவத்திலும், வயதிலும் சிறுமியேதான். ஆனால் மனோ துயரத்தில் மிகமிகப் பெரியவளாகி விட்டேன். என்னுடைய சுகத்தையும் துக்கத்தையும் சமமாகக் கவனிக்கக்-கூடியவர்கள் தாங்களும், என் தாயுமே ஆவீர்கள். ஆதலால் எனக்குற்ற விசனத்தை நீங்கள் அறிவதால் எனக்கு நன்மையேயன்றி தீமை இல்லை, அதோ என் தாயும் வருகிறாள். அம்மா! உட்காருங்கள். போஷகரே! இதோ இக்கடிதங்களை நீங்க ளிருவரும் பாருங்கள்." என்று பணிவாகக் கூறி, அதையவர் கையில் கொடுத்தாள்.

   

-----

   

கடிதத்தை வாங்கிய பொன்னுசாமி படித்து முடித்து மனந் தாங்காத துயரத்தை யடைந்து அதைப் பார்வதியம்மாளிடத்தில் கொடுத்தார். அந்த அம்மாளும் அதைப் படித்துத் திடுக்கிட்டாள். இருவரின் மனமும் கடிதங்களினால் கலங்கின. இதையறிந்த பரிமளா அதிகாரியை நோக்கி “என் பிதாவுக்குச் சமமானவரே! என் விசனத்திற்குக் காரணம் தெரிந்ததா! இதுபோன்ற கடிதங்கள் விஷபாணங்கள் போன்று வரத்தொடங்கி வெகுநாட்களாயின. அன்றுமுதல் இன்றுவரையில் அந்த பாணங்களாலேயே என் மனமும் தேகமும் மெலிவுற்று மிக்க வேதனைக் குள்ளாகிக்கொண்டே இருந்தது. நான் இந்நாள்வரையில் பொறுத்துப் பார்த்தேன். இனி என்னால் பொறுக்க முடியாது. நான் எனது இளமைப் பிராயத்தின் வருத்தத்தை முன்னிட்டு நாடகத்தில் நடிக்க வாரம்பித்தது எனக்குப் பெருத்த புதைபாணம் போன்ற துன்பங்கள் நேரிடும்போலிருக்கிறது. என் தாயே!... பெரியவரே! நான் இனி நாடகத்தில் நடிக்க விரும்பவில்லை. என்னுடைய பிற்காலத்தின் நன்மையைக் கோரி நான் விலகிக்கொள்கிறேன். என்னை மன்னிக்க வேண்டும்." என்று மிக்க நயமாகச் சொன்னாள்.•

   

பொன்னு- ஹா! என் கண்மணி! பரிமளவல்லீ! உன்னறிவுக்கு என்னுள்ளம் பொங்கிக் களிக்கின்றது. நீ புத்தியிலும் தீர்க்காலோசனையிலும் மகா பெரியவள். உன்னுடைய அபாரமான அறிவை நான் பன்முறைகளில் கவனித்திருக்கிறேன். இன்று பூர்ணமாகப் பார்த்துவிட்டேன். அந்தோ! நாடகம் என்பது பூர்வம் எத்தகைய மேன்மையான நோக்கங்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது தெரியுமா!

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.