சென்றேன். கைமருந்து களையே போட்டுக் கட்டு கட்டிக்கொண்டேன். அன்று அதிக நோய் தெரியவில்லை; எனினும் ரத்தம் பெரும்பாகமாகச் சென்றதால் களைப்பு மேலிட்டுவிட்டது. கால் நடக்கக்கூடவில்லை. என்னையறியாத மயக்கம் வந்துவிட்டதால் படுத்துவிட்டேன்.
இரவு முற்றும் அவ்வீரப் பெண்மணியின் உருவமும், அவள் சொல்லிய மொழிகளும், அவள் காட்டிய தீரச்செயலும் என் கண் முன்பு தோன்றி நாடகமாடிக்கொண்டே இருந்தன. இந்த சிற்றின்பப் பேயை ஒட்டுதற்கே அச்சிற்றிடை மாதரசி தோன்றினாள் என்று என் மனத்தில் பட்டுவிட்டது. அத்தகைய நாரீமணி யார்? அவனைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற மனவெழுச்சியும் உண்டாகியது. உடனே நான் அதை எவ்விதமாயினும் அறிவதென்கிற தீர்மானங்கொண்டேன். இரவு தொலையப் போகின்றதா! என்று எதிர் பார்த்து அதைத் தொலைத்தேன்.
-------
நேற்று பொழுது விடிந்தது. எனக்கு இக்காயங்களின் வலி அதிகமாய்விட்டது. கூடியவரையில் பொறுத்தும் நடக்கக்கூட வில்லை. பிறகு இரவு வரையில் பொறுத்தேன். தடுக்கி விழுந்து அடி பட்டதாகவும் லீவு வேண்டுமென்றும் எஜமானுக்கு எழுதியனுப்பினேன். நான் எழுதியது உண்மையாயல்லவா! என்று பார்ப்பதற்கு ஓர் கங்காணி வந்தான் அவன் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தான். அவனிடத்தில் பேசும்போது வார்த்தைப் பராக்கில் பாலா விஷயத்தைப்பற்றிக் கேட்டேன். அவன் உங்கள் சகலமான வரலாற்றையும் கூறினான்.
அந்தோ! அதைக் கேட்டதுமே, என்னாவி துடித்தது. என் பழைய கதைகள் முற்றும் நினைவிற்கு வந்தன. என்னுடைய தீச் செயல்கள் கண் முன்பு தாண்டவமாடின. எல்லாவற்றையும் விடப் பெற்ற மகளையே பெண்டாள நினைத்த பெரும் பாதகமே ஆயிரக் கணக்கான அம்புகள் போல என் அங்கம் முற்றும் குத்தியது. என்னுடைய சகலமான நாடிகளும் அடங்கிவிட்டன. அப்போது தான் சிற்றின்பத்தின் கேடும், "காமம் செத்த நாயையும் பெற்ற பெண்ணையும் விடாது" என்கிற பழமொழியும் என் இதயத்தில் தைத்தன. என் மாறுதலை அவர் அறியாதவாறு சமாளித்துக் கொண்டு பின்னும் சற்று பேசிவிட்டு அவரை யனுப்பிவிட்டேன்.