(Reading time: 28 - 55 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

எனினும் நான் கேட்ட விஷயங்கள் மெய்தானா என்பதை அறியும் பொருட்டு ஒரு வண்டியமர்த்திக் கொண்டு மெல்ல இரவு இவ்விடம் வந்தேன். நேரில் பார்க்கும் எண்ணத்துடன் நான் வந்த சமயம் பாலா ஏதோ சங்கீதம் கர்ணாமிருதமாகப் பாடிக் கொண்டிருந்தாள். நீ படுக்கையில் கேவலமான நிலைமையில் கிடந்ததை வெளிப் புறத்துப் பலகணி வழியாகக் கண்டேன்.

   

-------

   

நீ என்னை மணந்த உத்தமி கோமதி என்பதை அறிந்ததும் உள்ளே வர நினைத்தேன். ஆனால் என் மனச்சாக்ஷி என்னைத் தடுத்தது. உடனே நான் வீடு திரும்பி இரவு முற்றும் யோசனை செய்தேன். எந்த விதமாக உன்னைக் காண்பது என்று புலப்படாது தத்தளித்தேன். பிறகு இந்த யோசனை தான் சரி என்று பட்டதும் காலையில் கடிதமனுப்பினேன். கடிதத்தைக் கண்டு எங்கே அலக்ஷியமாய் வராதிருந்துவிடப் போகிறாளோ! என்று போலீஸ் பயங்காட்டி எழுதினேன்; பிறகு உங்களை அடைந்தேன்.

   

கோமதீ! உனது பொன்னுரைகளை ஆதியில் கேளாது அனாதரித்ததற்குக் கடைசீப் பலனாக கொலைக் குற்றத்தையும், பெற்ற பெண்ணைப் பெண்டான நினைத்த பரம பாதகத்தையும் அடைந்தேன். கடவுள் எனக்கு அறிவு கொடுத்திருந்தும் என் மதி யழிந்தது; மான மழிந்தது, மாண்பு குலைந்தது, மதிப்பு மடிந்தது, மகிழ்ச்சி ஒழிந்தது. எல்லாம் அழிந்த கட்டையானேன். என் வாழ் நாள் முற்றும் நரகக் குழிக்கு நாற்றங்காலாகிவிட்டேன். பாழ் நாளாகக் கழித்தேன்.... பாலா!.... இனியேனும் என்மீது நம்பிக்கை பிறந்ததா! என்னைப் பிதாவென்று ஏற்றுக் கொள்வாயா?" என்று கெஞ்சிக் கேட்டான்.

   

இது கேட்ட பாலா ஒருவிதமான நகைப்புடன் "இந்த பூமியில் ஒரு உயிர் ஜெனித்த வளவிலேயே அதற்குத் தாய் என்றும் தந்தை என்றும் இரு பொருள்கள் முன்பே இருக்க வேண்டும் என்பது கடமையல்லவா! அக் கடமையின்படிக்கு என் தாயை இது காறும் தெரிந்துகூட எனக்குத் தாய் தந்தையர் சாக்ஷாத் அம்பிகையும் பரமேச்வானும்தான் என்று நான் நினைத்திருக்கிறேன். அவனன்றி தாய் தந்தையர்கள் வேறில்லை என்பதே என் துணிபு. உம்முடைய உதரத்தில் ஜெனித்ததை யறியா முன்னர் கவலையற்றிருந்தேன். அதை யறிந்ததும் என்னைப் பெருங் கவலை வந்து சுற்றிக் கொண்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.