அந்த ஆசாமியின் உயிர் நீங்கி இருக்குமாயின் நான் தூக்கு மேடை ஏறவும் தயாராக விருக்கிறேன். என் கற்பை நான் அற்பமாக எண்ணமாட்டேன். அம்மா! என் செய்கை கடினமானதுதான்; எனினும் அதை விடக் கொடிய செய்கையைச் செய்யவந்த கள்ளனுக்கு இதுவே தக்க சிக்ஷை என்று என் மனச்சாட்சி கூறியதால் நான் செய்தேன். என் தாயே! இதனால் எனக்கு எந்த நேரம் எத்தகைய ஆபத்து வந்தாலும் வரும். நீ கலங்காதே; கவலைப்படாதே" என்று கூறினாள்.
--------
இந்த எதிர்பாராத சம்பவத்தைக் கேட்ட கோமதிக்கு ஒரு புறம் ஆச்சரியமும், ஒரு புறம் துக்கமும் தொண்டையை அடைத்துக் கொண்டது. அந்த விஷயங்களில் முக்கியமாகத் தான் எதைக் கவனித்துப் பேசுவது என்பதையே அறியாது தியங்கினாள். பின்னர் பாலாவை நோக்கி, "பாலா! உன் மனோ தீரத்திற்கும் வீரத்தனமான செய்கைக்கும் மெச்சினேன். இன்னிலைமையில் உன்னை யாரேனும் வந்து கண்டு பிடித்து விடுவார்களோ! அப்படிக் கண்டு பிடித்துக் கைதியாக்கி விட்டால் நான் என்ன செய்வேன். என்னுடைய நிலைமையோ மிக்க கேவலமாகி விட்டது. நாளைக்கு நாள் பேசவும் கூடவில்லை. அத்தகைய பலஹீனமாகிக் கொண்டே வருகிறது. இது சமயம் நான் எவ்வாறு உன்னையும் பிரிந்து உயிர் வாழ்வேன்? அதற்குத்தான் நான் வருந்துகிறேன்." என்றாள்.
பாலா:- அம்மா! நீ என்ன கோழையாகப் பேசுகிறாய் + என்னுடைய விதியின் படிக்குத்தான் யாவும் முடியும். என்னைக் கண்டுதானா நீ உலகத்தில் உயிர் வாழுகிறாய்! நம்மைக் காப்பதற்குக் கடவுள் ஒருவரில்லையா! அவரை மறந்து விட்டாயா! அவரை மறந்து விட்டால் பிறகு நாம் வாழுவதெங்ஙனம்? அம்மா! உன்னுடைய தேக நிலைமையைப் பார்த்தால் நீ கட்டாயம் பிழைப்பாய் என்று கூறுவதற்கு இடமில்லை. இந்த விஷயத்தைக் குறித்து நீயும் நானும் மனோ தைரியமா யிருக்க வேண்டியது நமது கடமை யாகிவிட்டது.. உலகத்தில் சகலமான பிராணிகளையும் படைத்தலும், காத்தலும், அழித்தலும் ஆகிய எல்லாவற்றையும் செய்யும் கர்த்தா எவனோ அவனது தாள் தொழுது போற்றுவது-தான் நாம் செய்யக் கூடிய வேலையாகும்.
-------