அவனுக்குக் குற்றமாகத் தோன்றலாம். வருவது வழியில் தங்கி விடாது. நான் இன்று பயந்து கொண்டு போகாது வீட்டிற்குள்ளேயே புகுந்து கொண்டிருப்பின் என்னை நாளை போலீஸ் காரர்கள் வந்து வாரண்டுடன் அழைத்துச் சென்றால் அப்போது என்ன செய்வது? அது மட்டும் சரியானதா! ஆகையினால் நீ சற்றும் கவலைப்படாதே!
--------
அம்மா! உயிருடன் என்னருமை கேசவனை இழந்தோம். மூத்த அண்ணனையும் பிரிந்தோம். அவ்விருவர்களை இழந்த உனக்கு என்னைப்பற்றிக் கவலை ஏன்? என் விதி முடிவின்படி என்னையும் நடத்து. இதற்கெல்லாம் ஏன் வருத்தப்படுகிறாய்? நான் கட்டாயம் சென்று வருகிறேன். எதற்கும் பயப்படவேண்டாம். விதியை வெல்ல எவராலுமாகாது; தைரியமாக இரு. நான் சென்று வருகிறேன்." என்று கூறித் தைரியம் சொல்விவிட்டு அவ்விடம் விட்டு வெகு துணிகரமாயும் பரபரப்புடனும் கடிதத்தில் கண்டுள்ள விலாசத்திற்குச் சென்றாள்.
அங்கு கடிதம் கொண்டு கொடுத்த கிழவியே வாசலிலிருந்தாள். "வாருங்கள். " என்று மரியாதையாகவே அழைத்துக் கொண்டு சென்று உள்ளே படுத்திருக்கும் ஆசாமியிடத்தில் பாலாவின் வருசையைத் தெரிவித்தாள். உடனே அவன் "இங்கே யனுப்பிவிட்டு வெளிக்கதவைத் தாளிடு" என்று உத்தரவு செய்தான். இவ்வார்த்தைகள் நமது பெண்மணியின் செவியில் விழுந்ததும் அவள் குலை ஈடுங்கியது. "ஹா! ஏதோ மோசம் வந்துவிட்டதே!” என்று வயிற்றில் இடி இடித்தது. அவ்வறையின் கதவருகிலேயே பாலா நின்று "கதவை ஏன் தாளிடவேண்டும்? நான் இவ்விடத்திலேயே நின்று பேசுகிறேன். என்னை வரவழைத்த காரணம் யாது? அதை இப்படியே கூறலாம்." என்று முடுக்காகவே கேட்டாள்.
கங்காதரன்.- அம்மா! என் தாயே! பாலா! இதோ இப்படி என்னருகில் வா! உன் திருமுகத்தை என் கண் முன்பு தாராளமாகக் காட்டு. உன் முகத்தில் பயக்குறியும் கவலைத் தோற்றமும் ஜ்வலிக்கின்றது. அப்படியெல்லாம் கவலைப்படாதே! நீ குற்றமற்ற குணவதி, பழியற்ற பாம சிரேஷ்டை. கற்பைக்காத்த காரிகை. என்னுடைய தீய வினையை எனக்கறிவித்த தெய்வப்பெண்; என் கண்ணே! பாலா!" என்று ஏதேதோ சொல்லிக்கொண்டே மெல்ல படுக்கையை விட்டு எழுந்து நடக்கமாட்டாது தத்தித்திணறி நடந்துகொண்டே பாலா அருகில் வந்து அவள் காத்தைப்பற்ற முயன்றான்.