நடுக்கம் எடுத்துக் கொண்டது, தனக்கு ஏதோ ஆபத்து உதயமாகி விட்டதாகவே அவள் மனத்தில் தீர்மானமாகத் தெரிந்து விட்டது. அக் கடிதத்தைப் பிரித்துப் படிக்கவும் நடுங்கினாள். அவளால் கூடுமான தைரியம் செய்து கொண்டு கடிதத்தைப் பிரித்துப் பார்த்தாள்.
-------
"பாலம்மாளுக்கு :
இக் கடிதம் கண்ட தக்ஷணம் இதிலுள்ள விலாசத்திற்கு உடனே வர வேண்டியது. அங்ஙனம் தவறினால் பேராபத்து நேருவது நிச்சயம். போலீஸ் பக்ஷிகள் வட்டமிட்டுக் கொண்டிருப்பதை மறக்க வேண்டாம். உடனே வரவும்.
கங்காதரன்."
அக் கடிதத்தைப் படித்ததும், அவளுடைய திகிலும், குழப்பமும் முன்னிலும் நூறு மடங்கு அதிகரித்து விட்டன. அவளுடைய தலை சுழலுகின்றது. தான் செய்துவிட்ட காரியத்தின் பலனாகிய சூரியன் தன் கண்ணெதிரில் பிரகாசிப்பதாக நினைத்து விட்டாள். அவளுடைய பரம சங்கடமான நிலைமையோடு தன் தாயாரருகில் வந்து கண்ணீர் பெருகியவாறு கடிதத்திலுள்ள விஷயத்தைத் தெரிவித்தாள்.
இது கேட்ட கோமதி மிக்க விசனத்தை யடைந்து, "ஹா! பாலா! என்னமோ பெரிய ஆபத்து வந்து விட்டதாகவே என் மனமும் கூறுகின்றதே! என்ன செய்வேன்? எவ்விதமாக முடியுமென்று எனக்குத் தெரியவில்லையே! ஐயோ! என்ன செய்வேன்! கண்ணே! நீ தயங்காதே ! இக் கடிதத்தை தீயிட்டுப் பொசுக்கிவிட்டுப் பேசாமலிருந்துவிடு. விஷயமே அறியாதவள்போல நீ உன் வேலைக்குச் சென்றுவிடு, இவ்விதம் செய்தால் என்ன?" என்று வெகு அன்போடு கேட்டாள்.
பாலா:- அம்மா! என்ன இது இவ்விதம் பேசுகின்றாய்! கடவுளுக்குப் பொதுவாக நான் நடந்து கொள்ள வேண்டாமா! ஏன் பயப்படுகின்றாய் பயப்படாதே! என் விஷயத்தில் அந்த மனிதனும் பெரும் குற்றவாளி; என் கற்பைக் காத்துக் கொள்ள நான் செய்தது சரி எனினும் அதுவும்