ஸோமே : அம்மணி! அவர் சகிக்க முடியாத விசனத்துடன் தன் சயன அறைக்குப் போய்விட்டார்.
கோகி : (தனக்குள்) தன் வாலின் மயிரில் ஒன்று முள்ளில் மாட்டிக் கொண்டாலும், அந்த அவமானத்தைப் பொறுக்க முடி யாமல், அதன் பொருட்டு உயிரை விடும் கவரி மான் அல்லவோ என் பிராண காந்தர்! அவர் என்ன செய்து கொள்வாரோ தெரியவில்லை. நான் நேரில் அவரிடம் போய் இந்த வைர சரத்தைக் கொடுத்தால் அவர் வாங்கிக் கொள்ள மாட்டார். (உரக்க) ஸோமேசரே! நாம் பேசாமல் இருந்தால் நம்முடைய எஜமானர் தன் உயிருக்கு ஹானி தேடிக் கொள்வார். ஆகையால் உடனே இந்த வைர ஸரத்தை அவரிடத்திற் கொண்டு போய்க் கொடுத்துத் திருட்டுப் போன நகைகளுக்குப் பதிலாக இதை அனுப்பச் சொல்லும். இதை அவர் எப்படியாவது ஏற்றுக் கொள்ளும்படி செய்யும்.
ஸோமே : (சந்தோஷத்தோடு வங்கிக் கொண்டு) அப்படியே ஆகட்டும். (கோகிலமும் கோமளாவும் போய் விடுகிறார்கள்)
மாத :(தனக்குள்) (பாதிமதிநதி போதுமணிசடை - என்ற திருப்புகழின் மெட்டு)
1. பூமி நிறைபல தீமைகளில்மிடி போலலுதை துயர் எதுவேறு?
போக செறிபுகழ் யாவரொருமொழி கூறவருபவர் புவிமீது?
2. மான மணியென நாடுமனிதர்கள் வாழ இடமிது சரியாமோ?
தான தவமெனு மோது பலவகை யான அறியவை உளவாமோ.
3. மாது வயிறுறு காலமுதலிது வாதுதருதுயர் நிலையாகும்?
மாலை தனிலுறு காலன் வரும்வரை யாவரிடரினில் அழிவாரோ?
4. பாவியெனையினி யாவதளியொடு பாதமலருற அருளீசா?