இதனால் சகலமான ஜனங்களுக்கும் அறிவிப்பது யாதெனில்:- பிரதாபன் என்னும் இடையன் அரசனாகப் போகிறேனென்று ஜோசியர்கள் மூலமாய்த் தெரிகிறபடியால், அவனைப் பிடித்துச் சிறையில் அடைக்கும்படி நமது மகாராஜன் உத்தரவளித்து இருக்கிறார். அவனைக் காண்போர் உடனே பிடித்து ஆஜர் செய்விக்க வேண்டும். ஜனங்கள் இந்த விஷயத்தில் எவ்வித அச்சமும் கொள்ளாமல் தம் தம் வீட்டில் இருக்க வேண்டும்.
துடும், துடும், துடும், துடும்.”
சசி : (மல்லிகாவிடத்தின்) என்ன ஆச்சரியம்! என்னுடைய பிரிய நண்பனாகிய பிரதாபனை அரசன் சிறைப்படுத்த முயலும் சமயத்தில் நான் இப்படி ஸ்திரீ விஷயத்தில் என் மனதைச் செலுத்திக் கொண்டிருக்கிறேனே! இந்த உலகத்தில் மனிதருக்கு மிகவும் அருமையானவர்கள் மனைவியும், நண்பனுமே என்ற போதிலும் நூற்றுக்கணக்கான பெண்மணிகளினும் ஸ்நேகிதனே மேலானவன்; ஆகையால் முதலில் அவனிடம் போய் எங்கேயாவது மறைந்து கொள்ளும்படி சொல்லி விட்டு வர வேண்டியது என்னுடைய கடமை. போகிறேன்.
மல்லி : நில்லும் நில்லும்! நீர் போக வேண்டுமானால், முன்னால் என்னை யோக்கியமான ஸ்நேகிதர் யார் வீட்டிலாயினும் வைத்து விட்டுப் போம். இப்படி என்னை விடுத்துப் போனால் நான் என் செய்கிறது?
சசி : பிரிய சுந்தரி கோபித்துக் கொள்ளாதே! உன்னை ஒரு இடத்தில் சுகமாக வைத்து விட்டு நான் போகிறேன். (போய் விடுகின்றனர்)
(வேறொரு வேலைக்காரி வளந்தஸேனையிடம் வருகின்றாள்)
வேலை : (குதுகலமாக) இது உண்மையில் சுபதினமே அவரை உபசரித்து மரியாதையோடு உள்ளே அழைத்து வா!
வேலை : ஆக்ஞை! (போய் ஸோமேசனுடன் வருகிறாள்.)