மல்லி : சரி நீர் இவ்விடத்திலே இரும். நீர் வந்திருப்பதாக எஜமானி அம்மாளுக்குத் தெரிவித்து வருகிறேன்.
(வஸந்தளேயனையிடம் போய்)
அம்மணி! மாதவராயரிட மிருந்து ஒரு பிராம்மணர் வந்திருக்கிறார்.
வஸ : (புன்சிரிப்புடன்) அப்படியா! சீக்கிரம் மேலே அழைத்து வா.
(மல்லிகா திரும்பிப் போய் பிராம்மணனை அழைத்து வருகிறாள்.)
வஸ : சுவாமி! நமஸ்காரம்! வரவேண்டும்.
சசி : ஸுகீபவா! மங்களானி பவந்து!
வஸ : சுவாமி இப்படித் தயவு செய்யுங்கள். இந்த ஆசனத் தில் உட்கார வேண்டும்.
சசி : இல்லை, இல்லை. நான் அவசரமாய்ப் போக வேண் டும். மாதவராயர் இந்த ஆபரண மூட்டையைத் தன் மாளிகையில் வைத்திருப்பது ஜாக்கிரதைக் குறைவென்றும், இதனால் தான் பெரிதும் கவலைப்படுவதாயும் தெரிவித்து இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்.
(மல்லிகாவினிடம் கொடுத்து விட்டுப் போகிறான்.)
வஸ : சுவாமி! தயவு செய்து கொஞ்சம் இருக்க வேண்டும். ஒரு வேண்டுகோள். இவற்றை அனுப்பிய பிரபுவுக்கு நான் ஒரு வஸ்துவைக் கொடுக்கிறேன், சிரமத்தை மன்னித்து அதை ஏற்றுக் கொண்டு போக வேண்டும்.
சசி : (தனக்குள்) நானாவது இனி அவரிடம் போகிறதாவது நான் எங்கே கொண்டு போகப் போகிறேன்! (வெளிப்படை யாக) என்ன வஸ்து அது?