மல்லி : (கோபமாக) என்னிடத்தில் உமக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை, நான் மாத்திரம் உமக்குத் தேவையோ? அப்படியானால் என்னை ஏன் விரும்புகிறீர்?
சசி : மாதவராயரென்று ஒரு பிரபு இருக்கிறார். அவரை உனக்குத் தெரியுமா?
மல்லி : ஹா! என்ன ஆச்சரியம்!
வஸ : ஹா! என்ன ஆச்சரியம்!
(வஸந்தஸேனையும் மல்லிகாவும் ஒரே சமயத்தில் மூர்ச்சிக்கிறார்கள்)
சசி : (மல்லிகாவைத் தாங்கி) மல்லிகா! ஏன் மயங்குகிறாய்? விழித்துக் கொள். (தனக்குள்) இவளுக்கென்ன துன்பம் சம்பவித்ததோ தெரியவில்லையே! கை கால்கள் எல்லாம் துவண்டு போயின. கண்கள் பயங்கரமாய்க் காணப்படுகின்றன. அடி மல்லிகா! இது தான் உன் பிரியமோ? என்னுடன் வந்துவிட நினைப்பதே இவ்வளவு பயமாய் முடிந்ததோ?
மல்லி : (கோபமாக) என் முன் நிற்காதேயும், துன்மார்க்கரே! போய்விடும்; இதை அபகரிக்கு முன், அந்த வீட்டில் இருந்த மனிதர்களில் எத்தனை பேரைக் கொன்றீர், உண்மையைச் சொல்லும்.
சசி : நான் ஒருவரையும் தொடக் கூடவில்லை.
மல்லி : உண்மைதானா?
சசி : நிச்சயம்! சத்தியம் உன் தலையில் அடிக்கிறேன்.
வஸ : ஆகா! உயிர் வந்தது.
சசி : அடி மல்லிகா! நீ என்ன இந்த விஷயத்தில் இவ்வளவு கவலையைக் காட்டுகிறாய்! உன் பேரில் வைத்த ஆசையினால் அல்லவோ, எவ்வளவோ உயர்ந்த பரிசுத்தமான குலத்தில்