யாருமில்லையே.
மல்லி : ஒருவரும் இல்லை. சொல்லலாம்.
வஸந்த : (தனக்குள்) இரகஸியமா! அப்படியானால் நான் இனிமேல் இவர்கள் பேசுவதைக் கவனித்தல் கூடாது.
சசி : வஸந்தஸேனை உன்னை அடிமைத் தன்மையில் இருந்து நீக்குவதற்கு எவ்வளவு பொருள் கேட்பாள்?
வஸந்த : (தனக்குள்) அவன் என் பெயரைச் சொல்லுகிறானே! இந்த இரகசியத்தில் நானும் சம்பந்தப்படுவதாய்த் தோன்றுகிறது. ஆகையால் இந்த ஜன்னலுக்கு சமீபத்தில் மறைந்திருந்த வண்ணம் கேட்கிறேன்.
மல்லி : தான் இந்த மாளிகைக்கு அதிகாரியாகும் பொழுது யாதொரு பணமும் பெறாமல் என்னை விடுவிப்பதாக என் எஜமானி அம்மாள் பல தடவைகளில் தெரிவித்திருக்கிறார்கள். அதிருக்கட்டும், என்னை மீட்கத் தேவையான அவ்வளவு பொருள் உம்மிடத்தில் எது?
சசி : விருத்தம்: எதுகுலகாம்போதி
என்னரு மணியே! யுன்னை யெத்தின மடைவே னென்று
பன்னரு துயரி லாழ்ந்து பரிபவ மடைந்தேன்-வேண்டிற்
பொன்னொரு பொருட்டோ? தீமை புரியினும் பெரியதாமோ?
நின்னரு வேட்கை நாடி லெவ்வினை முடிக்க கில்லேன்.
பொருள் இல்லாமலா கேட்பேன்? அருமையான ஒரு வஸ்துவைப் பெற விரும்பினால் எவ்விதமான ஹீனத் தொழில் செய்தாயினும் அதற்குத் தேவையான திரவியத்தை சம்பாதித்தல் வேண்டாமா? உன் பேரில் நான் கொண்டிருக்கும் மோகம் இலேசானதா?