சொன்னேன். இவ்வளவுதானா உன் புத்தி கூர்மை?
தோழ : உயர் குலத்திற்குத் தகுந்த குணவொழுக்கம் இல்லா விட்டால், மேலான பிறப்பைப் பற்றி புகழ்ந்து ஆத்ம ஸ்துதி செய்து கொள்வதில் பயனென்ன?
வீர : உண்மை என்னவென்றால் நீ இங்கிருப்பதனால் இவள் வெட்கப்படுகிறாள். கொஞ்ச நேரத்திற்கு எங்கள் இருவரையும் தனியாக விட்டுப் போ. அந்த முட்டாளும் எங்கேயோ ஓடிப் போய் விட்டான். நீ போய் அவனையும் தேடி அழைத்து வா. அதற்குள் இவள் இணங்கி விடுவாள்.
தோழ : (தனக்குள்) அப்படியும் இருக்கலாம். நான் சற்று நேரம் அப்பால் போகிறேன். ஐயா! உத்தரவுபடி நான் போகிறேன்.
வஸ : (அவன் வழியை மறைத்து) ஐயா! என்னை இங்கு தனியாக விட்டுப் போக வேண்டாம். உம்மைத் தவிர இங்கு எனக்கு வேறொரு துணையுமில்லை. காப்பாற்ற வேண்டும்.
தோழ : நீ எதற்கும் பயப்பட வேண்டாம். நான் இருக்கிறேன். (வீரசேனனைப் பார்த்து, ஐயா! வஸந்தஸேனையை உம்மிடம் ஒப்புவித்துப் போகிறேன். நான் திரும்பி வரும் போது ஜாக்கிரதையாக இவளை என்னிடம் ஒப்புவிக்க வேண்டும்.)
வீர : சரி. அப்படியே ஆகட்டும்.
தோழ : உண்மைதானா?
வீர : சத்தியம்.
தோழ (தனக்குள்) இவன் ஒருவேளை என்னை ஏமாற்றினாலும் ஏமாற்றி விடுவான்; நான் மறைவில் இருந்து இவன் செய்வதைக் கவனிக்கிறேன். (போய் மறைந்து கொள்கிறான்)
வீர : (தனக்குள்) போய் விட்டான்; இனி இவளை ஒழித்து விடுகிறேன். (நான்கு பக்கங்களையும் சுற்றிப் பார்க்கிறான்.) ஓகோ இவன் ஒளிந்து கொண்டிருக்கிறானா? அப்படியா என்னை