வண்டினங்களா! நீங்களாயினும் என் பேரில் இரக்கம் கொண்டு உடனே அவரிடம் போய்ச் சொல்லி அழைத்து வர மாட்டீர்களா? என் மனதைக் கொள்ளை கொண்ட என் துரையை நான் எப்படி மறந்து இறப்பேன்? நேற்று இரவெல்லாம் தங்களுக்குப் பணிவிடை செய்த அந்தப் பாக்கியம் திரும்பக் கிடைக்குமா என்று நினைத்திருந்தேனே! ஹா! தெய்வமே நீதான் ஏழையைக் காப்பாற்ற வேண்டும்.
வீர.: இன்னம் அவனை நினைக்கிறாயா? எங்கே இனிமேல் நீ வாயைத் திறந்து பேசுவதைப் பார்க்கிறேன். (அவளுடைய கழுத்தை இரண்டு கைகளாலும் இருகப் பிடித்து மூச்சுவிட முடியாமல் அழுத்துகிறான். வஸந்தஸேனை பேச முடியாமல் துடி துடித்துக் கீழே விழுகிறாள்.)
வீர: ஓகோ இன்னம் துடிக்கிறாயா? ஒழிந்து போ! வேசிக் கழுதை (கைகளால் மேலும் தொண்டையை இறுகப் பிடித்து அழுத்துகிறான். அவள் மூர்ச்சித்து கீழே விழுகிறாள்.)
வீர : ஒழிந்தாள் வேசி; முடிந்தது காரியம்; என் கவலையும் தீர்ந்தது! இந்தப் பாப மூட்டை இந்த வஞ்சக மண்டபம் கடைசியில் அழிந்தது. என்னைக் கையாலாகதவன் என்றா நினைத்தாய்? இப்பொழுது எப்படி இருக்கிறது? நான் இராஜாவின் மைத்துனன் என்னுடைய தயவிற்கு எத்தனையோ ஸ்திரீகள் காத்திருக்கிறார்கள்; நான் எவ்வளவு நயந்து வேண்டியும் என்னை அவமதித்தா பேசுகிறாய்! நீ எந்த விஷயத்தில் மற்ற ஸ்திரீகளைக் காட்டிலும் உயர்ந்தவள்? கந்தருவ ஸ்திரீயோ? அல்லது தேவ ரம்பையோ? எனக்கு உபயோகப்படாத உன் தேகம், பூச்சி புழுக்களுக்கு உபயோகப்படட்டும். எவ்வளவோ பெரிய மனுஷ்யனான எனக்கு ஒரு முத்தம் கொடுக்க மாட்டேனென்றாயே. இனி நாய் நரிகளெல்லாம் உன்னைத் தேவையான வரையில் முத்தமிடப் போகின்றன. இங்கு எவரும் இல்லை. நான் உன்னை அனுபவித்து ஆனந்தப்பட நீ சம்மதிக்கவில்லை அல்லவோ நீ அருமையாய் வளர்த்த உன்னுடைய மாமிசத்தை நாய் நரி கழுகுகள் சந்தோஷமாய்த் தின்பதையாயினும் மறைவில் இருந்து பார்த்து ஆனந்தம் அடைகிறேன். இந்தப் பிணத்தை யாரும் அறியாமல் இங்கே உதிர்ந்து கிடக்கும் சரகுகளால் மறைத்து விடுகிறேன்.
(மிகுதியிருந்த அவளுடைய ஆபரணங்களைக் கழற்றிக் கொண்டு அவளைச் சருகுகளால் மறைத்து விடுகிறான்.)