(Reading time: 149 - 298 minutes)

2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு குறுநாவல் - உயிரினும் இனிய பெண்மை - சாகம்பரி

love

காலை நேரத்து சூரியன் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து மிதமான ஒளியை வீசிக் கொண்டிருந்தது. மூக்கை பிடித்து ப்ரணயாமம் செய்து கொண்டிருந்த ஜட்ஜ் விஸ்வநாதனிடம் அவர் மனைவி சீதா கேட்டார்

“மதுவை எப்போது ராதையிடம் சேர்க்கப் போகிறீர்கள்.?”

“டாக்டரம்மாவிற்கு கவலை வந்து விட்டதா?. ஏன், அவள் இங்கிருப்பது பிடிக்கவில்லையா.?”

“நானே வேறு ஒரு கவலையுடன் கேட்கிறேன் விஸ்வா. உங்களுக்குப் புரியவில்லையா?. அவள் இங்கிருந்து சென்றுவிட்டால்,எனக்கு கை ஒடிந்த மாதிரியாகிவிடும். அத்தனை உதவியாக இருக்கிறாள்.”

“கவலைப்படாதே, முழு விவரமும் ராதையிடம் இன்னும் தெரிவிக்காததால், அங்கு எல்லோரும் மதுமீது கோபமாக இருக்கிறார்கள். இந்த வழக்கு வேறு முடிவடையாமல் இழுத்துக் கொண்டே போகிறது. உயிர் பிழைத்து இப்போதுதான் தேறி வருகிறாள். மதுவை நம்முடனேயே வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில்,   நம் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு இருப்பதால் அவளுக்கு மீண்டும் ஆபத்து நேராமல் இருக்கும்.”

“அதெப்படி முடியும்?, ஒரு வயசுப்பெண் நம் வீட்டில் இருந்தால் ஊர் என்ன நினைக்கும். அதிலும்  நித்யா வேறு இங்கிருக்கிறான். அவர்களிடையே ஒன்றும் இல்லை என்று நமக்குத் தெரிந்தாலும். ஊர் என்ன  நினைக்கும்”

“இரு, இந்த கேள்விக்கு இப்போது என்னிடம் பதில் இல்லை. ஆனால், நான் நினைப்பது நியாயமான விசயம்தானே?.  முன்பு ஒரு முறை நம் பெண்ணின் உயிரை தெய்வம் போல் வந்து காப்பாற்றி இருக்கிறாள். இப்போது அவளை காப்பாற்றுவது நம் கடமை. .கடவுள் அதற்கு வழி காட்டுவார்.” முடித்தார்.

கரெக்ட், அவருடைய நியாயமான கவலைக்கு பதிலளிக்க பிஎம்டபிள்யூ காரில் ஒருவன் வந்தான். காரிலிருந்து இறங்கியவன் தொலைவில்… தோட்டத்தில் மர நிழலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த   நித்யன் மதுமதி கண்ணில்பட்டார்கள். மெல்லிய புன்னகை முகத்தில் பரவ அவள் பேசிக் கொண்டிருந்தது மனதைக் கவர்ந்தது. அதைப் பார்த்தவாறே வீட்டினுள் நுழைந்தான்.

அவனின் திடீர் பிரவேசம் விஸ்வநாதனை வியப்பில் ஆழ்த்தியது. விரைந்து வந்து அவனைக் கட்டிக் கொண்டார். உள்ளே திரும்பி,

“சீதா…. யார் வந்திருக்கிறது என்று பார்” என்று உற்சாகக் குரல் எழுப்பினார்.

அவர் குரல் கேட்டு விரைந்து வந்த சீதாவும் சிலையென நின்றார். கிட்டதட்ட இருபது வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு சென்ற சத்யசந்திரன்  நெடுநெடுவென வளர்ந்து அவர்முன் நின்றான்.  பெற்றெடுத்த பிள்ளைகள் நித்யசந்திரன், ரம்யசந்திரா அருகில் இருந்தாலும், என்றோ அவரை விட்டு விலகிப்போன சத்யசந்திரன் மேல்தான் அவருக்கு பாசம் அதிகம்.

சட்டென் குனிந்து அவர் காலை தொட்டு வணங்கினான். கண்ணில் நீர் வர அவனை இருவரும் ஆசிர்வதித்தனர். அதற்குள் தந்தையின் குரல் கேட்டு அங்கு வந்த நித்யனும் ரம்யாவும் அண்ணனை ஆச்சரியமாக பார்த்தனர். அவர்களை இழுத்து அணைத்துக் கொண்ட சத்யன்,

“எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.

விஸ்வநாதனுக்கு இன்னமும் விளங்கவில்லை, எத்தனை முறை கெஞ்சி இருப்பார் வரமறுத்தவன், திடுமென்று வந்து  நிற்கிறானே. என்னவோ பிரச்சினையா? அவருக்கு சட்டென நினைவு வந்தது. ஓ.. தனவர்சினி என்ற பெண்ணை திருமணம் செய்யப் போவதாக செய்திவந்ததே. அவனின் திருமணத்திற்கு அழைக்கவந்திருக்கிறானோ? எதுவாக இருந்தாலும் அவனே சொல்லட்டும்…

“சீதாம்மா எப்படியிருக்கிறீர்கள்? உங்கள் கையால் செய்த பாசிப்பருப்பு பாயாசத்தின் சுவை இன்னும் எனக்கு நினைவில் நிற்கிறது.”

“அதாவது, அதனை இப்போது செய்து தர வேண்டுமாம் உங்கள் பிள்ளைக்கு… எப்படி ரிக்வஸ்ட் வருகிறது பாருங்கள் அத்தை.. வாய்விட்டு கேட்கலாமே.” என்ற குரல் கேட்டு திரும்பினான். அங்கே அவள்- மதுமதி நின்றாள்.

“வாய்விட்டு கேட்டால்தான் கிடைக்குமா என்ன? பூ மனம் கொண்ட சீதாம்மாவை அப்படி கல் மனம் கொண்டவராக மாற்றியது யாராம்…?”

“நானில்லைப்பா… இதென்ன பழியா?. அத்தை… நான் பருப்பு பாயாசத்திற்கு தயார் செய்கிறேன். நீங்கள் வாருங்கள். அப்புறம், பக்கத்து இலைக்கு பாயாசம் என்பவர்களும் கையை தூக்கினால் நான் அளவை  நிர்ணயிப்பேன்”

“அளவிட்டு சமைக்கிறதா? அப்பா, மூன்று வேளையும் கோட்டை அடுப்பு எரிந்து சமைத்துக் கொண்டேயிருக்கும், எத்தனை பேர் வந்தாலும் சாப்பாடு போடும் வீடு இதுதானே?” ஆச்சரியமாக சத்யன் கேட்க,

“அதெல்லாம் அந்தக் காலம். இப்போது கோட்டையும் இல்லை  அடுப்புமில்லை. சாப்பாடு போடுங்கன்னு யாரும் வருவதில்லை. கூட்டமாக குடியிருந்திருந்த மலையை தோண்ட இடம் தந்துவிட்டு நிறைய குடும்பம் இடம் பெயர்ந்து சென்றுவிட்டார்கள். இன்னும் கொஞ்ச  நாள் கழித்து வந்தால் இந்த வீடும் இருக்காது”.  மதுமதி பதில் கூறிவிட்டு சமையலறைக்கு சென்றாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.