(Reading time: 149 - 298 minutes)

சற்று அதிர்ந்தாலும் சுதாரித்து அதனை பின் தொடர்ந்தான். விரைவாக சென்று சிவப்பு மாருதி வேனை  நூல் பிடித்து தொடர்ந்தான். யாருக்கோ என்னவோ என்று அப்படியே கண்டு கொள்ளாமல் செல்லும் குணம் அவனிடம் கிடையாது.

மிக விரைவாக சென்ற மாருதியை பிடிக்க அபிஷேக்கின் உதவியும் தேவை என்று தீர்மானித்தான். அபிஷேக் அவனுடைய காவல்துறை நண்பன், கிரைம் பிராஞ்ச். அவனை அலைப்பேசியில் அழைத்து விவரத்தை தெரிவித்தான். கடத்தலில் பங்கேற்ற வாகனத்தின் பதிவு எண்ணையும் தெரிவித்தான். அபிஷேக் உடனடியாக நடடிக்கை எடுக்க  நகரின் சாலைகளில் அமைந்திருந்த அனைத்து செக்-போஸ்ட்களுக்கும் அலர்ட் செய்தி தரப்பட்டது.

தாங்கள் குறிவைக்கப்பட்டதை  கடத்தலில் ஈடுபட்டவர்களும் உணர்ந்து கொண்டு நகருக்கு வெளியே செல்லும் சாலையில் விரைவுற்றனர். அவர்களை தொடர்ந்து சென்ற  சத்யசந்திரன் மாருதியில் அருகாமையில் சென்றுவிட, அதே சமயம் எதிர் திசையிலிருந்து ஜீப்பில் அபிஷேக் அவர்களை குறி வைக்க ஆட்டம் முடிந்தது என்று எண்ணிய நொடியில்….

மாருதியிலிருந்து ஒரு மூட்டைபோல் அவள் தூக்கி எறியப்பட்டாள். சட்டென காரும் ஜீப்பும் நிற்க மாருதி விரைவு பெற்றது.

“அபிஷேக், நீ அவர்களை துரத்து. நான் இந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறேன்” என்று சத்யன் கத்தினான்.  அவன் சொன்னதை புரிந்து கொண்ட அபிஷேக் ஜீப்பில் ஏறிக் கொண்டே,

“சத்தி, இங்கே அருகிலேயே விபத்தில் சிக்கிவர்களுக்கான ட்ரௌமா சென்டர் இருக்கிறது. நான் தகவல் சொல்லி விடுகிறேன் நீ அங்கு கொண்டு செல்.” என்று கட்டளையிட்டு விரைந்தான். .

சாலையின் சரிவில் உருண்டு முள்வேலியில் ரத்தக்குவியலாக சிக்கிக் கொண்டிருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு விரைந்தான். அது விபத்து சிகிச்சைக்கான மையம் என்பதால் அங்கிருந்த மருத்துவர் விரைவாக முதலுதவி சிகிச்சையை ஆரம்பித்தார்.

அது நகரின் வெளிப்பகுதி, மேலும் இரவின் தொடக்கமாகவும் இருந்ததால் அங்கு மருத்துவரைத் தவிர யாரும் இல்லை. சில உதவிகளை அவனே செய்தான். முகத்தை பஞ்சு கொண்டு துடைக்க அவளின் முகம் ரத்த வர்ணத்தை நீக்கி புலப்படலானது.

அந்தப் பெண்… அவனுக்கு தெரிந்தவள். ஒரு பெண்களுக்கான பொட்டிக்கில் விற்பனையாளராக வேலை செய்பவள். அவன் தனுவுடன் சென்ற போது பார்த்திருக்கிறான். தனு தேர்வு செய்த பொருளின்  நிறைகுறைகளை தெளிவாகச்சொல்லி நியாயமான  முறையில் விற்பனை செய்தாள்.. அதற்காகவே அவளிடம்  நிறைய பரிசுப் பொருட்களை வாங்கச் செய்தான். ஒரு நியாயவாதியை  ஊக்குவிப்பது அவன் கடமையாகுமல்லவா?

இங்கே ரத்த வெள்ளத்தில் கிடந்தவளை பார்க்கவும் மனதிற்கு வருத்தமாக இருந்தது. யார் பெற்ற பெண்ணோ? பிழைப்பது கடினம் என்று மருத்துவர் சொல்கிறார் இன்னும் அவள் உடலில் இருந்து ரத்தம் வெளியேறுவது நின்றபாடில்லை. கைகளில் வடிந்து விரல்களின் நுனியில் வெளியேறி ரத்த புள்ளிகளை தரையில் சிந்தியது. வலியில் சிரமப்பட்டு மூச்சுவிட்டவளை அவன் இரக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போது,…

 அவள் கைகள் உயர்ந்தன. உதடுகள் அசைந்தன. எதையோ சொல்ல விழைகிறாள்… அவன் அவள் முகத்தருகே குனிந்தான். அவள் கைகள் அவனுடைய வெள்ளை சட்டையில் ரத்தம் கொண்டு எழுதியது. அந்த எண்கள்… அலைப்பேசி எண்களா?

“இந்த எண் யாருடையது? அவர்களை அழைக்கவா?” என்றான்.

“டாக்டர்… அது என் அண்…ண்னுடை… எனக்… ஏதாவது ஆனால் அவரிடம் நா…ன் இறந்துவிட்டேன் என்று சொல்லாதீங்… அம்மா ஹார்ட் பேசண்ட்… ஏதாவத் ஆயிடும்  அண்ணண்ட்ட நான் யார்கூடவோ ஓடிட்டேன்னு சொல்லிடுங்.. நான் காணாம போனதா இருக்கட்டூ…ம்”.

அவளுடைய வேண்டுகோள் அவனை உலுக்கியது அந்த வார்த்தைகளை அவனும் உபயோகித்திருக்கிறான். வெனிசுலாவில் சாலை விபத்தில் சிக்கி இருந்தபோது, தன்னுடைய தந்தைக்கு தெரிவிக்க கூறிய வார்த்தைகள். கிட்டதட்ட இதே பொருள் கொண்டவைதான்.

அவனைப் போலவே அவளும் மரணத்தின் தருவாயிலும் தன் அன்னையின் நலன் கருதுகிறாளா. அத்தனை அன்பு மிக்கவளா?  இந்த நிலையிலும்கூட மற்றவர்களின் நலன் முக்கியம் என நினைப்பவள் தேவதையல்லவா?. இவளை ஒரு அன்பான குடும்பம் இழப்பது மாற்றற்கரிய வேதனை அல்லவா? இதை இப்படியே விடக்கூடாது! ஒரு தீர்மானம் அவனுக்குள் உருவாகியது!

பாதி திறந்திருந்த அவள் கண்களில் தெரிந்த கேள்வியை புரிந்து கொண்டு அலைப்பேசியை எடுத்து அவள் கூறியபடியே செய்தான். முதலில் மனஅமைதி அவளுக்கு முக்கியம். அதனை உணர்ந்து அவள் மீண்டும் கண்களை மூடி மயக்கமானாள். மூடியிருந்த அவள் கண்களில் வடிந்த நீர் அவளுடைய மரணத்திற்கானதா?

 நிஜத்தின்  நிதர்சனத்தையும் தாண்டி அவனுக்குள் ஒரு உறுதி தோன்றியது. இவளை காப்பாற்றி அந்த அன்புமிக்க குடும்பத்தில்  நல்லபடியாக சேர்த்தாக வேண்டும் .  அவளை பரிசோதித்துக் கொண்டிருந்த மருத்துவர்.. அவர் பெயர் சாரதா என்று அறிந்து கொண்டான்.

“டாக்டர், இங்கு போதுமான வசதியில்லை என்றால் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாமா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.